தேடுதல்

பேராயர் Peter Chung Soon-Taick பேராயர் Peter Chung Soon-Taick 

உலக இளையோர் தினக் கொண்டாட்டம் 2027 சீயோல்

இளைஞர்கள், கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையைக் கொண்டாடும் விழாவாக 2027 உலக இளையோர் தினத் தயாரிப்பிற்கான தொடக்க நிகழ்வில் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பல துறை சார்ந்த விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கொரிய இளைஞர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள், வாழ்க்கையின் சவாலான பணிகளைப் பற்றி சிந்திக்கவும், துணிவுடன் ஈடுபடவும் ஒரு விலைமதிப்பற்ற வாய்ப்பை உலக இளையோர் நாள் உருவாக்குகின்றது என்றும், இப்பயணத்திற்கு ஆர்வத்துடன் தயாராகும்போது, ​​நம் இதயங்களை ஒன்றிணைத்தல்,  ஒன்றாக செபித்தல், தூயஆவியின் வழிகாட்டுதலைப் பகுத்தறிதல் இன்றியமையாதது என்றும் எடுத்துரைத்துள்ளார் பேராயர் Peter Soon-taick Chung.

ஜூலை 28 ஞாயிற்றுக்கிழமை தென்கொரியாவில் சியோல் நகரில் உள்ள Myoongdong பேராலயத்தில் 2027 ஆம் ஆண்டிற்கான உலக இளையோர் நாள் கொண்டாட்டத்திற்கான தொடக்க செயல்பாடுகள் ஆடம்பரமான வழிபாட்டுக் கொண்டாட்டத்துடன் ஆரம்பமானது. அத்திருப்பலியில் ஆற்றிய மறையுரையின்போது இவ்வாறு கூறினார்   தென்கொரியாவின் சீயோல் பெரு நகர உயர் மறைமாவட்டத்தின் பேராயரும் Pyongyang பகுதி அப்போஸ்தலிக்க நிர்வாகியுமான பேராயர் Peter Soon-taick Chung.

இளைஞர்கள் தங்களது கருத்துக்களையும் படைப்புத்திறனையும் வெளிப்படுத்தும் வாய்ப்புக்களை இக்காலத்தில் தலத்திருஅவை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், இளைஞர்கள் தங்களது படைப்பின் கதாநாயகர்களாக இருப்பது நம்பிக்கைக்கான ஓர் இடமாகவும் வாய்ப்பாகவும் நம் அனைவருக்கும் அமையும் என்று கூறியுள்ளார் பேராயர் Peter Soon-taick Chung.

இளைஞர்கள், கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையைக் கொண்டாடும் விழாவாக 2027 உலக இளையோர் தினத்திற்கான தொடக்க நிகழ்வில் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பல துறை சார்ந்த விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

"சியோலில் நம்பிக்கை எரிகிறது" என்ற கருப்பொருளுடன் சியோலில் நடைபெற உள்ள 2027 உலக இளையோர் தினக் கொண்டாட்டத்திற்கான  தயாரிப்பானது ஆடம்பரமான தொடக்கத்துடன் ஆரம்பமானது, அதில் கொரியாவின் அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் Giovanni Gaspari; பொதுமக்கள், குடும்பம் மற்றும் வாழ்க்கைக்கான திருப்பீடத்துறையின் செயலாளர் திரு. க்ளீசன் டி பவுலா சோசா; கலாச்சாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலா துணை அமைச்சர் யோங் ஹோ-சங்; தேசிய சட்டமன்றத்தின் 19 உறுப்பினர்கள்; மற்றும் சியோல் நகர சபையின் 9 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் வட கொரிய நாட்டை விட்டு புலம்பெயர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளி இளைஞர்கள், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த வீரர்கள் உட்பட பலதரப்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 July 2024, 10:58