தேடுதல்

சூடான் புலம்பெயர்ந்தோர் சூடான் புலம்பெயர்ந்தோர்   (AFP or licensors)

சூடானில் அனைத்துலக மனிதாபிமான சட்டம் மதிக்கப்பட வேண்டும்!

சூடான் ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நாட்டில் நிலவிவரும் மோதல்கள், மக்கள் அனுபவிக்கும் பெரும்துயரங்கள், அமைதியை ஏற்படுத்துவதற்கான உரையாடலின் வழிகள் குறித்து எடுத்துக்காட்டியுள்ள ஆயர்கள், சூடானில் அமைதி மற்றும் புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்புக்கான திருத்தந்தையின் வேண்டுகோள்கள் மற்றும் இறைவேண்டல்களுக்காகவும் நன்றி கூறியுள்ளனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சூடானில் நிகழும் போர் காரணமாக துயருறும் மக்களின் பெரும்துன்பங்கள் குறித்து தாங்கள் மிகவும் கவலைகொண்டுள்ளதாகக் கூறியுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

ஜூன் 29, சனிக்கிழமையன்று, ஜூபாவில் நடைபெற்ற அந்நாட்டு ஆயர் பேரவையின் கூட்டத்திற்குப் பிறகு வெளியிட்ட அறிக்கையொன்றில் இவ்வாறு கூறியுள்ள ஆயர்கள்,  சூடானிய சமுதாயத்தின் கட்டமைப்பை கிழித்து எறியும் நம்பிக்கையற்ற வன்முறை மற்றும் வெறுப்பு நிலை குறித்து எச்சரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த  2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சூடானில் போர் தொடங்கி நிகழ்ந்துவரும் வேளை, நம்மையே நாம் இச்சூழலிருந்து தூர விலக்கிக் கொள்ள முடியாது என்று அவ்வறிக்கையில் கூறியுள்ள ஆயர்கள், கொடூரமான போர்க்குற்றங்கள் மற்றும் இரு தரப்பினராலும் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும் விவரித்துள்ளனர்.

அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் வழியாக, இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவந்து சூடானியர்களுக்கு நம்பிக்கையைத் தருவதற்கான சூழல்கள் எதுவும் தென்படவில்லை என்று எடுத்துக்காட்டியுள்ள ஆயர்கள், சூடானில் அனைத்துலக மனிதாபிமான சட்டத்தை மதிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.

சூடானில் அமைதி மற்றும் புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்புக்கான திருத்தந்தையின் வேண்டுகோள்கள் மற்றும் இறைவேண்டல்களுக்காக நன்றி தெரிவித்துள்ள ஆயர்கள், ஆயுதங்களைக் களைந்துவிட்டு அமைதியை ஏற்படுத்த அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு தாங்களும் திருத்தந்தையுடன் இணைந்து இருதரப்பினரிடமும் கோரிக்கை வைப்பதாகக் கூறியுள்ளனர்.

சூடானில் நிகழ்ந்து வரும் இந்த மோதல்களில் இதுவரை 1,50,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 1 கோடியே 60 இலட்சம் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் சில தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 July 2024, 14:15