தனது சொந்த ஊரில் போதிக்கும் இயேசு தனது சொந்த ஊரில் போதிக்கும் இயேசு  

பொதுக் காலம் 14-ஆம் ஞாயிறு : வலுவின்மையில் வெளிப்படும் வல்லமை!

நமது வாழ்வில் வரும் வெறுமையான மற்றும் சோர்வான வேளைகளில் இறைவேண்டலில் ஆண்டவரோடு ஒன்றித்திருந்து அலகையின் சோதனைகளை வெல்வோம்.
பொதுக் காலம் 14-ஆம் ஞாயிறு : வலுவின்மையில் வெளிப்படும் வல்லமை!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. எசே2:2-5      II. 2 கொரி 12:7-10      III.  மாற் 6:1-6)

இன்று நாம் பொதுக்காலத்தின் 14-ஆம் ஞாயிறைக் கொண்டாடுகின்றோம். இன்றைய வாசகங்கள் கடவுளின் இறைவாக்குப் பணியாளர்கள் எவ்வாறு சொந்த இனத்தின் மக்களாலேயே புறக்கணிப்பட்டு மதிப்பிழந்து வாழ்கின்றனர் என்பதை தத்துவார்த்தமாக எடுத்துரைக்கின்றன. இப்போது வாழ்க்கை அனுபவம் ஒன்றுடன் நமது மறையுரைச் சிந்தனைகளைத் தொடங்குவோம். நான் இயேசு சபையில் தொடக்கப் பயிற்சிக் காலத்தில் இருந்தபோது, வாராந்திரப் பங்குப் பணிக்காக ஒரு கிராம பங்குத்தளத்திற்குச் சென்று வந்துகொண்டிருந்தேன். அந்தப் பங்குத்தளத்தைச் சேர்ந்த ஒரு அருள்பணியாளரும் அதே மறைமாவட்டத்தில் பணியாற்றுகிறார். அவர் ஒரு நல்ல மனிதர். அருங்கொடை தியானங்கள், செபவழிபாடுகள் போன்றவற்றை நடத்துவதில் மிகவும் கைதேர்ந்தவர். அம்மறைமாவட்டத்தில் மட்டுமல்லாது தமிழகத்திலுள்ள பல்வேறு மறைமாவட்டங்களுக்கும் இத்தகைய பணிகளுக்காகச் சென்று வருபவர். இதனால் இறைமக்கள் பலரின் இதயங்களில் அவர் மிகவும் அன்புக்குரியவராக இருந்தார். நான் அந்தப் பங்கிற்குச் சென்றிருந்த ஒரு சனிக்கிழமை இரவு அவரும் அங்கு வந்திருந்தார். அன்று மாலை தனது சொந்த மக்களுக்கு அருங்கொடை தியானம் ஒன்றை நடத்தினார். ஏறக்குறைய மூன்று மணிநேரம் நடந்தது. தியானம் முடிந்து எல்லாரும் அவரவர் இல்லம் சென்றுவிட்டனர். அந்த அருள்பணியாளாரும் தனது சொந்த இல்லத்திற்குத் தங்குவதற்குச் சென்றுவிட்டார். அடுத்த நாள் ஞாயிறு திருப்பலியும் நிறைவேற்றிவிட்டு அவரும் சென்று விட்டார். மதிய உணவிற்கு முன்பு வெளியே அமர்ந்து நானும் பங்குத் தந்தையும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவ்வூரைச் சேர்ந்த சிலர் பங்குத் தந்தையைப் பார்க்க வந்தனர். "வாங்க வாங்க.. என்ன உங்க ஊரைச் சேர்ந்த சாமியாரு நேத்து நடத்துன செபக் கூட்டம் எப்படி இருந்துச்சு.." என்று அவர்களிடம் எதார்தமாகக் பங்குத்தந்தைக் கேட்டார். அதற்கு அவர்கள், அப்படியெல்லாம் ஒன்னும் சிறப்பா இல்ல சாமி... ஏதோ பரவா இல்ல... அவரு என்ன எங்க ஊருகாரர்தானே... அவங்க குடும்பம், சொந்த பந்தம் எல்லாரையும் பற்றி எங்களுக்குத் தெரியுமே.." என்று ஒருமாதிரி முகம் சுழிக்கும் அளவிற்குப் பேசினர். அவர்கள் சென்ற சிறிதுநேரம் கழித்து, “பார்த்திங்களா பிரதர், அவரு ஊரு மக்கள் அவருமேல வைத்திருக்கிற மாரியாதையையும் மதிப்பையும். இயேசுவுக்கு நடந்ததுதான் இவருக்கு நடக்குது... நம்ம சொந்த ஊருக்குப் போனாலும் உங்களுக்கும் எனக்கும் கூட இதேமாதிரிதான் நடக்கும் என்றும் சிரித்துக்கொண்டே கூறினார்.

இந்த வாழ்க்கை நிகழ்வுடன் இப்போது நற்செய்திக்குள் செல்வோம். இன்றைய நற்செய்திப் பகுதி கடந்த வாரத்தின் தொடர்ச்சியாக அமைகின்றது. கெரசேனர் பகுதியில் பேய் பிடித்தவரை நலமாக்குதல், இரத்தப் போக்குடைய பெண்ணுக்கு நலமளித்தல்,  யாயீர் மகளை உயிர்பெற்றெழச் செய்தல் ஆகிய முப்பெரும் வல்ல செயல்களை ஆற்றியதன் வழியாக மக்களிடையே நற்பெயரையும் நன்மதிப்பையும் பெற்ற இயேசு, தனது சொந்த ஊரில் புறக்கணிக்கப்படும் நிகழ்வைக் கொடுத்துள்ளார் மாற்கு நற்செய்தியாளர். இதன்வழியாக, இயேசு தனது இறையாட்சிப் பணியில் தொடர்ந்து ஏற்புகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்தார் என்பதை இந்நிகழ்வில் பதிவு செய்கின்றார் மாற்கு. ஒருவேளை மாற்கு தனது பணியில் ஏற்பட்ட அனுபவங்களையும் தனது சக நற்செய்தியாளர்களின் அனுபவங்களையும் இங்கே எதிரொலிக்க விரும்புகின்றார் என்றுகூட நாம் கருதலாம். சொந்த ஊரில் இயேசு புறக்கணிக்கப்படும் இந்நிகழ்வை மற்ற இரண்டு ஒத்தமை நற்செய்தியாளர்களும் எடுத்துரைக்கின்றனர் (காண்க மத் 13:53-58; லூக் 4:16-30). மாற்கும் மத்தேயுவும் இந்நிகழ்வை மிகவும் சுருக்கமாகக் கூறியபோதும், லூக்கா நற்செய்தியாளர் மட்டும் சற்று விரிவாகக் கூறுகின்றார். இயேசு ஏன் தனது சொந்த ஊரில் புறக்கணிக்கப்படுகிறார் என்ற கேள்வியை எழுப்பிச் சிந்திக்கும்போது அது பல்வேறு உண்மைகளை நமக்குப் புலப்படுத்துகின்றது. இது ஒருவகையான உயர்வு மனப்பான்மையில் ஏற்பட்டிருக்கலாம். அதற்குக் காரணம், இயேசுவின் பெற்றோர் வாழ்ந்த எளிய வாழ்க்கை. மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அன்னை மரியாவும் யோசேப்பும் எருசலேமுக்குக் கொண்டு சென்றபோது, திருச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது (காண்க. லூக் 2: 22-24) என்று லூக்கா நற்செய்தியாளர் கூறுகின்றார். இங்கே 'அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது' என்ற வார்த்தையே திருக்குடும்பம் எவ்வளவு ஏழ்மையான நிலையில் இருந்தது என்பதை நமக்கு எடுத்துக் கூறுகின்றது. அதாவது, புறாக்குஞ்சுகளைக்  கூட வாங்கி பலிசெலுத்த முடியாத அளவிற்கு அந்தக் குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்திருக்கின்றது என்பதைப் பார்க்கின்றோம். இயேசுவின் தந்தை யோசேப்பு தச்சர் தொழிலை செய்துவந்தார். நான் சிறுவனாக இருக்கும்போது எனது ஊரில் தச்சர்கள் பலர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் வறுமையில் வாடினர். அப்படியென்றால், இயேசுவின் காலத்தில் இந்தச் தச்சுத்தொழில் எவ்வளவு மதிப்பிழந்திருந்திருக்கும்! அதுமட்டுமன்றி, தனது தந்தையின் இறப்பிற்குப் பின்பு இயேசுவும் அதே தச்சுத்தொழிலை செய்து தனது தாய் மரியாவுக்கு உதவியிருக்கிறார். இதையும் அவ்வூர் மக்கள் நிச்சயம் நேரில் கண்டிருப்பர். இத்தகையதொரு சூழலில்தான் தனது சீடர்களுடன் தனது சொந்த ஊருக்கு வரும் இயேசு ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்குகிறார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தவர்களாக, “இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?” என்று கூறி அவரை ஏற்க அவர்கள் தயங்குகின்றனர். அவருடைய வல்ல செயல்களுக்காக அவரைப் பாராட்டுவதுபோன்று பாராட்டிவிட்டு அவரது குடும்பச் சூழலை மனதில்கொண்டு அவரை ஏற்க மறுக்கின்றனர்.

இதில் இன்னொரு விடயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். யூதர்களுக்குப் புறஇன மக்களைக் கொஞ்சமும் பிடிக்காது. மேலும் மாற்கு நற்செய்தி எழுதப்பட்ட காலத்தில், யூத மக்கள் இயேசுவைப் புறக்கணித்ததும், பிறஇனத்தவர் அவரை ஏற்றதும் ஒரு சர்ச்சையாகவே கருதப்பட்டது. இதற்கு லூக்கா விளக்கமளிக்கின்றார். இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வருகிறார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுகிறார். அப்போது இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்படுகிறது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் எழுதியிருந்ததை வாசிக்கின்றார்.  வசித்து முடித்த பின்னர், அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்கிறார். அப்போது தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருக்கின்றன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்று கூறுகின்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டுகின்றனர். ஆனால் இதற்குப் பிறகு நடக்கும் நிகழ்வுதான் மிகவும் மோசமானது. இயேசு தொடர்ந்து அவர்களிடம் பேசிக்கொண்டே போகிறார். “உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர். ஆயினும், அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியதுஎன்றார். தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்” (காண்க. லூக் 4:15-30) என்று லூக்கா மிகவும் விரிவாகக் கூறுகின்றார். இயேசுவை வாயாரப் பாராட்டியவர்கள் ஏன் திடீரென்று அவர்மீது கோபவெறிகொள்கின்றனர்? இதற்குக் காரணம், இயேசு சுட்டிக்காட்டிய சாரிபாத் கைம்பெண்ணும், நாமானும் பிறஇனத்தவர். ‘யூத இனத்தைச் சேர்ந்த நீ எப்படி பிறஇனத்தவரைக் அதுவும் உன் சொந்த ஊரிலேயே பேசலாம்’ என்பதும் அவர்களின் கோபத்திற்குக் காரணம்.

“சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் இயேசு. இது ஏனைய இரண்டு ஒத்தமை நற்செய்திகளிலும் எடுத்துக்காட்டப்படுகிறது. ஆனாலும் மத்தேயு மாற்கு சொல்வதுபடியே கூறினாலும், ‘சுற்றுப்புறம்’ என்ற வார்த்தையைத் தவிர்த்திருக்கிறார். ஆனால் லூக்காவைப் பொறுத்தமட்டில் 'இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை' என்று சொந்த ஊரை மட்டும் குறிப்பிடுகிறார். எது எப்படி இருந்தாலும் முக்கியமானது என்னவென்றால் இறைவாக்கினர்கள் சொந்த ஊரில் மதிக்கப்படமாட்டார்கள் அல்லது ஏற்றுக்கொள்ளப்படமாட்டார்கள் என்பதுதான். இங்கே இறைவாக்கினர் என்பது அருள்பணியாளர்கள் என்றும் நாம் பொருள்கொள்ளலாம். காரணம், நமது பணியும் ஓர் இறைவாக்குப் பணியே என்பதை உணர்த்துக்கொள்வோம். இதைத்தான் இன்றைய முதல் வாசகம் தெளிவுபடக் கூறுகிறது. "ஆண்டவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது; அப்போது அவர் என்னோடு பேசியவற்றைக் கேட்டேன். அவர் என்னிடம், “மானிடா! எனக்கெதிராகக் கிளர்ச்சி செய்யும் இனத்தாராகிய இஸ்ரயேல் மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். இன்றுவரை அவர்களும் அவர்களுடைய மூதாதையரும் எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து கலகம் செய்துள்ளனர்” என்றார். “வன்கண்ணும் கடின இதயமும் கொண்ட அம்மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். நீ அவர்களிடம் போய், ‘தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே’ என்று சொல். கலக வீட்டாராகிய அவர்கள், செவி சாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும், தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளட்டும்" இங்கே, என்னையே மதிக்காத மக்கள் உன்னையும் மதிக்கமாட்டார்கள் என்றும் கூறும் கடவுள், ஆனாலும் நீ ஓர் இறைவாக்கினன் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளட்டும் என்று கூறுவதிலிருந்து இறைவாக்குப்பணி எவ்வளவு சவால் நிறைந்தது என்பதை எடுத்துக்காட்டுகிறார் கடவுள். ஆனால் தொடர்ந்து எசேக்கியலிடம் பேசும் கடவுள், "மானிடா! நீ அவர்களுக்கு அஞ்சாதே. அவர்களின் சொற்களைக் கேட்டு நடுங்காதே. முட்புதர்களும் நெருஞ்சில்களும் உன்னைச் சூழ்ந்திருந்தாலும், தேள்களுடன் நீ வாழ்ந்தாலும், அவர்களின் சொற்களுக்கு அஞ்சாதே. அவர்கள் கலகம் செய்யும் வீட்டாராய் இருப்பினும் அவர்களின் பார்வையைக் கண்டு நடுங்காதே. அவர்கள் செவி சாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும் நீ என் சொற்களை அவர்களுக்கு எடுத்துக் கூறு. அவர்களோ கலகம் செய்வோர்" என்றும் கூறும் கடவுள் தனது உற்சாகத்தையும் உடனிருப்பையும் உறுதி செய்வதைப் பார்க்கின்றோம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், பெருங்குறை ஒன்று தன்னை வருத்துவதாகவும், அது முன்பொரு காலத்தில் இயேசுவுக்கு எதிராக செய்த பாவமே என்பதையும் நினைவுகூரும் புனித பவுலடியார், அந்தக் கொடிய பாவத்தை இயேசு மன்னித்துவிட்டாலும் கூட, அலகை இதனைத் திரும்பத் திருப்ப தனக்கு நினைவுபடுத்தி தனது இறைவாக்குப் பணியைத் தடைபடுத்துவதாக அங்கலாய்க்கின்றார். ஆனாலும் இதனை வெல்லும் விதமாக, "என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில், நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்" என்று கூறி தனக்குத்தானே நம்பிக்கை அளித்துக்கொள்கின்றார்.

பொதுவாக நமது இறைவாக்குப் பணிகளில் சில வேளைகளில் வெறுமை ஏற்படுவதுண்டு. 'I often feel empty' என்று இதனை நாம் அடிக்கடி கூறுகின்றோம். அப்படிப்பட்ட வேலைகளில்தான் இயேசு நமக்கு வலிமையை அளிக்கின்றார் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. இப்படிப்பட்ட வெறுமையைத்தான் அலகை நமதாண்டவர் இயேசுவின் பணிவாழ்விலும் அடிக்கடி ஏற்படுத்தியது. குறிப்பாக, அவரது பாலைவன சோதனையிலும், கெத்சமணி தோட்டத்திலும், சிலுவைப் பயணத்திலும் சோதனைகளையும் தடைகளையும் அவருக்களித்தது. அப்படிப்பட்ட வேளைகளில் எல்லாம் இறைவேண்டலில் ஆழமாக வேரூன்றி அவர் தந்தையுடனும் ஆவியாருடனும் ஒன்றித்திருந்தார். அதனால்தான், அவர் அதிகாலையில் எழுந்து செபித்தார், கருக்களோடு எழுந்து செபித்தார் என்றெல்லாம் பார்க்கின்றோம். ஆகவே, நமது அன்றாட இறைவாக்குப் பணிகளில் நாம் மதிக்கப்பட்டாலும் சரி அல்லது மதிக்கப்படவில்லை என்றாலும் சரி, நம் பணி இறையாட்சியை அறிவிப்பதே என்பதை நமது விருதுவாக்காக ஏற்று செயல்படுத்துவோம், நமது வாழ்வில் வரும் வெறுமையான மற்றும் சோர்வான வேளைகளில் இறைவேண்டலில் ஆண்டவரோடு ஒன்றித்திருந்து அலகையின் சோதனைகளை வெல்வோம். அதற்கான இறையருளை நமக்களித்திட ஆண்டவர் இயேசுவிடம் இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2024, 12:21