தேடுதல்

சீடர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் இயேசு சீடர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் இயேசு  

பொதுக் காலம் 15 -ஆம் ஞாயிறு : இறைவாக்குப் பணியில் சவால்கள்!

இயேசு தனது பன்னிரு திருத்தூதர்களுக்கு வழங்கிய வழிமுறைகளை நமக்கும் உரியதாக ஏற்றுக்கொண்டு, நமது அன்றாட இறைவாக்குப் பணியில் அதனைக் கடைபிடித்து வாழ்வோம்.
பொதுக் காலம் 15 -ஆம் ஞாயிறு : இறைவாக்குப் பணியில் சவால்கள்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. ஆமோ 7:12-15     II. எபே 1:3-14      III.  மாற் 6:7-13)

மத்திய அமெரிக்காவில் பெரிய நாடாகிய நிக்கராகுவாவை, 16-ஆம் நூற்றாண்டில் இஸ்பானிய பேரரசு தனது காலனியாக மாற்றியது. பின்னர், நிக்கராகுவா 1821-ஆம் ஆண்டு, இஸ்பெயினிடமிருந்து விடுதலை பெற்றது. 2007-ஆம் ஆண்டு முதல் அரசுத் தலைவராகப் பதவியில் தொடர்ந்துவரும் அந்நாட்டு அரசுத் தலைவர் டேனியல் ஒர்தேகா அவர்கள், அவரது சர்வாதிகாரத்தின் காரணமாக, அவர் பதவியிலிருந்து விலகவேண்டும் என்று, ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் நிக்கராகுவா நாடெங்கும் போராட்டங்கள் தொடர்ந்து வந்தன. 2016-ஆம் ஆண்டு, நவம்பர் 16-இல் இடம்பெற்ற நிக்கராகுவா பொதுத்தேர்தலில் டேனியல் ஒர்தேகா 3-வது முறையாக வெற்றி பெற்று அதிபர் ஆனார். அப்போதும் அடக்குமுறைகள் தொடரத்தான் செய்தன. அவரது ஆட்சியில் நிகழ்ந்த முறைகேடுகளையும் இந்த அடக்கு முறைகளையும் அதன் கத்தோலிக்கத் தலத்திருஅவை சுட்டிக்காட்டத்த தவறவில்லை, தயங்கவில்லை. 2018, ஜூலை,18-இல் நாட்டில் அடக்குமுறைகளை கைவிட்டு, உரையாடலை மேற்கொள்ளவேண்டும் என்று, அந்நாட்டின் திருப்பீடத் தூதர், பேராயர் Waldemar Stanislaw Sommertag அவர்கள், திருத்தந்தையின் பெயரால் விண்ணப்பம் ஒன்றை விடுத்தார். மேலும் நிக்கராகுவா நாட்டில் நிகழ்ந்துவரும் வன்முறைகளால் இதுவரை 360 பேர் இறந்துள்ளனர் என்பதைச் அவர் சுட்டிக்காட்டியதுடன் மக்களின் உயிர்களைப் பறிப்பதால் அமைதியை உருவாக்க முடியும் என்று நினைப்பது தவறு என்றும் கூறினார் பேராயர் Sommertag. இந்நிலையில் நிக்கராகுவா அரசுத்தலைவருக்கு எதிராகப் போராடியவர்களில் சிலர், திரியாம்பா நகர் புனித செபாஸ்டின் பசிலிக்காவில் அடைக்கலம் புகுந்ததையடுத்து, அக்கோவிலை அரசின் ஆதரவுப் படையினர் சூழ்ந்து கொண்டனர். அம்மக்களை விடுவிக்கச் சென்ற நிக்கராகுவா கர்தினால் Leopoldo José Brenes Solorzano, திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் Waldemar Sommertag, துணை ஆயர் Silvio José Baez Ortega ஆகிய மூவரையும் அரசு ஆதரவுக் குழுவினர் தாக்கினர். இந்நிலையில் 2021-ஆம் ஆண்டு நவம்பரில், 75 விழுக்காடு வாக்குகளுடன் நான்காவது முறையாக டேனியல் ஒர்தேகா மீண்டும் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது தவறான செயல்பாடுகளையும் நடவடிக்கைகளையும் கத்தோலிக்கத் தலத்திருவையினர் கடுமையாக விமர்சித்ததால் அவர்கள்மீது ஏற்கனவே கடும் கோபத்தில் இருந்த அவர், இப்போது ஆட்சி உரிமையைப் பயன்படுத்தி கத்தோலிக்கத் தலத் திருஅவையின் உயர்தலைவர்களையும் விசுவாசிகளையும் பழிவாங்கத் தொடங்கினார். இவ்வேளையில் அந்நாட்டின் Matagalpa மறைமாவட்ட தலைமையகம் தேசிய காவல்துறையால் இரவில் சூறையாடப்பட்டது. கத்தோலிக்கத் தலத்திருஅவை நிறுவனங்களுக்கும், பொது மக்கள் அமைப்புகளுக்கும் எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நிக்கராகுவா அரசு, மானாகுவா ஆயர் Rolando José Álvarez மற்றும் Matagalpa-வின் அருள்பணியாளர் Uriel Vallejos, உள்பட 94 பேரின் குடியுரிமையை பறித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2023- ஆம் ஆண்டு, பிப்ரவரி 10-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, மானாகுவாவிலிருந்து அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு அரசியல் காரணங்களுக்காக 222 சிறைக்கைதிகள் நாடுகடத்தப்பட்டனர். அவர்களுடன் குடியுரிமை பறிக்கப்பட்ட இந்த 94 பெரும் சேர்க்கப்பட்டனர். ஆனால் ஆயர் Álvarez நாடு கடத்தப்பட சம்மதிக்கவில்லை. எனவே, நிக்கராகுவா ஆட்சிக்கு எதிராக சதி மற்றும் தவறான செய்திகளைப் பரப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி கைது செய்யப்பட்டு 26 ஆண்டுகள் அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் உலக நாடுகளின் கண்டனங்களைத் தொடர்ந்து இவ்வாண்டு ஜனவரி மாதம் 14-ஆம் தேதி ஆயர் ஆல்வாரெஸ், ஆயர் இசிதோரோ மோரோ மற்றும் 12 அருள்பணியாளர்கள் விடுதலை செய்யப்பட்டு வத்திக்கானுக்கு நாடுகடத்தப்பட்டனர்.

இன்று நாம் பொதுக்காலத்தின் 15-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். கடந்த வாரம் ஞாயிறு நற்செய்தியில், தனது சொந்த ஊரான நாசரேத்துக்குச் சென்ற இயேசு, அங்கு அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தின் விளைவாக,  “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றதொரு கருத்தை வெளிப்படுத்தியதைப் பார்த்தோம். இந்த வாரமும் இறைவாக்கினர் பணியில் அதாவது, இறைவாக்குப் பணியில் சவால்கள் அதிகம் இருக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறார் நமதாண்டவர் இயேசு. இப்போது முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம். பின்பு அமட்சியா ஆமோசைப் பார்த்து, “காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு; யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு; அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள். பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே; ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம்” என்று சொன்னான். ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்: “நான் இறைவாக்கினன் இல்லை; இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை; நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன். ஆடுகள் ஓட்டிக் கொண்டபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, ‘என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு’ என்று அனுப்பினார். இங்கே ஆமோஸ் இறைவாக்கினருக்கு ஏன் இத்தகையதொரு சூழல் ஏற்பட்டது என்பதை இவ்வாசகத்தின் முதல்பகுதியை வாசித்தால்தான் நமக்குப் புரியும். பெத்தேலின் குருவாகிய அமட்சியா என்பவன் இஸ்ரயேலின் அரசன் எரொபவாமுக்கு இவ்வாறு சொல்லியனுப்பினான்: “இஸ்ரயேல் வீட்டாரிடையே ஆமோஸ் உமக்கு எதிராகச் சதி செய்கிறான். அவன் சொல்வதை எல்லாம் இந்த நாட்டால் தாங்கமுடியவில்லை. ஏனெனில், ‘எரொபவாம் வாளால் மடிவான்; அவனது நாட்டைவிட்டு இஸ்ரயேல் அடிமையாய்க் கொண்டு போகப்படும்’ என்று ஆமோஸ் சொல்லுகிறான் ” (வச. 10-11). ஆக, இறைவனின் வார்த்தைகளை உள்ளது உள்ளவாறு உரைக்கும்போது அந்த இறைவாக்கினர் சவால்களையும் எதிர்ப்புகளையும் சந்திக்கும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார். நாம் தொடக்கத்தில் பார்த்த நிக்கராகுவா சூழலும் இதுதானே நடந்தது. அன்று இறைவாக்கினர் ஆமோஸ் வாழ்வில் நிகழ்ந்தது இன்றும் பல்வேறு வடிவங்களில் நிகழ்ந்துகொண்டுதான் வருகின்றது. அன்று தென் அமெரிக்க நாடான எல்சால்வதோரில் நடந்த அடக்குமுறைகள், கொலைவெறி செயல்கள் யாவும் தற்போது மத்திய அமெரிக்க நாடான நிக்கராகுவாவிலும் நிகழ்ந்து வருகின்றது. பழைய ஏற்பாட்டு காலத்தில் பெரும்பாலான இறைவாக்கினர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இறைவாக்கினர்கள் எசாயா, எரேமியா, எசேக்கியேல் மற்றும் இவர்களுடன் இன்னும் சில சிறிய இறைவாக்கினர்களும் கொல்லப்பட்டனர். இவர்கள் எல்லாரும் தங்கள் சொந்த இனத்தவரால் பழிதீர்க்கப்பட்டவர்கள். அதனால்தான், “ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில், நீங்கள் இறைவாக்கினருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறீர்கள். ஆனால், அவர்களைக் கொலை செய்தவர்கள் உங்கள் மூதாதையர்களே" (காண்க. லூக் 11:47) என்று பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞர்களைப் பார்த்து கோபம் கொப்பளிக்கக் கூறுகின்றார் நமதாண்டவர் இயேசு.

இன்றைய நற்செய்தியில் பன்னிரு திருத்தூதர் அனுப்பப்படும் நிகழ்வு நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இயேசு பன்னிரு திருத்தூதர்களையும் முதன் முதலாக தம்மிடம் அழைத்தபோது, எதற்காக எந்த நோக்கத்திற்காக அவர்களை அழைத்தார் என்பதை இந்நற்செய்தியின் தொடக்கத்தில் காண்கின்றோம். 'இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்' (மாற் 3:13-15). இப்பகுதியில், இயேசு எல்லோரையும் அழைக்கவில்லை, மாறாக, தான் விரும்பியவர்களை அழைத்தார் என்பதைப் பார்க்கின்றோம். இதில் முக்கியமானதொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது, இயேசு அவர்களை அழைத்ததும் உடனே இருவர் இருவராகப் பணிக்கு அனுப்பவில்லை. மாறாக, இயேசு அவர்களுக்குப் போதிய பயிற்சி அளிக்கின்றார். இது ஒரு தொடக்க கட்டப் பயிற்சிதான். நமது அருள்பணித்துவ வாழ்வில் தொடக்கம் முதல் அருள்பணியாளர்களாகத் திருப்பொழிவு செய்யப்படும் வரை பெறும் பயிற்சிதான். காரணம், அப்போது நாம் பங்குப் பணிகளுக்கு இருவர் இருவராக அனுப்பப்படுவோம் அல்லவா? அதேமாதிரிதான், போதிய பயிற்சிக்குப் பிறகு இயேசுவின் சீடர்களும் பணிக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையிலும் கூட இயேசுவின் திருத்தூதர்கள் சீடத்துவ வாழ்வில் முதிர்ச்சிபெற்றுவிட்டார்கள் என்றும் நாம் கருதிவிட முடியாது. அதனால்தான் இதனை ஒரு தொடக்கப் பயிற்சி என்ற கண்ணோட்டத்தில் பார்க்கின்றோம். இப்போது இயேசு அவர்களிடத்தில் அறிவுறுத்த விரும்பிய சில கருத்துக்களை ஆழப்படுத்துவோம்.

பன்னிரு திருத்தூதரும் இருவர் இருவராக அனுப்பப்பட்டது, ஒரு செய்தி ஏற்றுக்கொள்ளப்பட இருவரின் சாட்சியம் தேவை என்ற யூதச் சட்டத்தின் அடிப்படையில்தான் என்பது பல விவிலிய அறிஞர்களின் கருத்தாக அமைகின்றது. "ஒருவனது எந்தக் குற்றத்தையும் எந்தப் பழிபாவச்செயலையும் உறுதி செய்ய, ஒரே சாட்சியின் வாக்குமூலம் போதாது. இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தாலே அது உறுதிசெய்யப்பட வேண்டும்" (இச 19:15) என்ற இணைச் சட்ட நூலின் வார்த்தைகள் இதற்குச் சான்றாக அமைகின்றன. இவ்விதத்தில் பார்க்கும்போது. அனுப்பப்படும் சீடர்களுக்கு ஏதாவது நிகழ்ந்தாலோ, அல்லது அவர்கள் அருளடையாளங்களை நிகழ்த்தினாலோ இப்படிப்பட்ட சாட்சியம் தேவைப்படும் என்று இயேசு கருதியிருக்கலாம். அதுமட்டுமன்றி, இருவர் இருவர் என்பது துறவறத்தின் குழும வாழ்வையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. அதாவது, இறைவாக்குப் பணியில் நாம் தனியே நின்று சாதிப்பதைவிட, குழுமமாக நின்று சாதிக்கும்போதும் அது கூடுதல் பலம் பெறுவதுடன், இறையாட்சியப் பணியும் பலம்பெறும்.

அடுத்து, பன்னிருவரை அனுப்பும் இயேசு, அவர்களுக்குத் தீய ஆவிகள்மீது அதிகாரம் வழங்குவதைப் பார்க்கின்றோம். அப்படியென்றால், இயேசு விரும்பிய இறையாட்சி அமையவேண்டுமெனில் முதலில் அதற்கு எதிரான தீய சக்திகளின் ஆட்சி அகற்றப்படவேண்டும் என்பதில் இயேசு உறுதியாக இருந்தார். மேலும் இயேசு தனது பணிவாழ்வைத் தொடங்கியதும் இத்தகையதொரு செயலைத்தான் முதலில் செய்கிறார் என்பதையும் காண்கின்றோம். தனது சீடர்கள் அனைவரும் நற்செய்தி அறிவிப்பு ஒன்றையே தங்கள் உயிர்மூச்சாகக் கருதி, தங்களின் சுயநலத்திற்கான வசதிகளை தியாகம் செய்ய முன்வரும்போது, அவர்களின் மற்ற அன்றாடத் தேவைகள் எல்லாம் தாமாகவே நிறைவடையும் என்ற அர்த்தத்தில்தான் இத்தகைய வழிமுறைகளையெல்லாம் அவர்களுக்கு வழங்குகின்றார் இயேசு. முதலாவதாக, “பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம். ஆனால், மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்” என்று இயேசு கூறும் வார்த்தைகளில், நற்செய்திப் பணிக்குத் தேவையானதை சீடர்கள் அவசியம் கொண்டிருக்க வேண்டும் என்ற அவரின் எண்ணம் வெளிப்படுகின்றது. அன்றையச் சூழலில் கரடு முரடான நிலப்பகுதிகளில் நடந்து செல்ல கைத்தடியும் மிதியடிகளும் அவசியம் தேவைப்பட்டன. இதனை அப்படியே இன்றைய நமது வாழ்க்கைக்கும் பொருத்திப் பார்க்கலாம். அதாவது, நமது இறைவாக்குப் பணிக்கு, எது தேவை, ஏன் தேவை, அது எந்தளவுக்குத் தேவை என்பதை தனிப்பட்ட விதத்தில் நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

இரண்டாவதாக, "நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக் கொள்ளாமலோ உங்களுக்குச் செவி சாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்கிறார் இயேசு. யூத மக்கள் வழிதவறியபோதெல்லாம், கடவுள் பல்வேறு இறைவாக்கினர்களை அனுப்பி அவர்கள் மனமாற்றம் பெறத் தூண்டினர். ஆனால் அவர்கள் அந்த அழைப்புகளைப் புறக்கணித்தனர். இதனை இயேசுவே அவர்களுக்கு எடுத்துக்காட்டினார். ஆகவே, இயேசுக் கிறிஸ்துவின் அழைப்பே இறுதியானது என்பதை சீடர்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றும், அவர்கள் மனம் மாறாவிட்டால் இனி அவர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றும் உணர்த்தும் நோக்கமுடன்தான் 'உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்' என்று கூறச்சொல்கின்றார் இயேசு. இறையாட்சியை அமைக்கும் இறைவாக்குப் பணிக்கு நாம் அனைவரும் சிறப்பு அழைப்புப் பெற்றுள்ளோம். இதனைத்தான் "நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்" என்கின்றார் புனித பவுலடியார். ஆகவே, இயேசு தனது பன்னிரு திருத்தூதர்களுக்கு வழங்கிய வழிமுறைகளை நமக்கும் உரியதாக ஏற்றுக்கொண்டு, நமது அன்றாட இறைவாக்குப் பணியில் அதனைக் கடைபிடித்து வாழ்வோம். இந்த அருளை இயேசு நமக்கு வழங்கிட இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 July 2024, 12:38