பொதுக் காலம் 16 -ஆம் ஞாயிறு : பரிவுள்ளம் கொண்ட தலைவர்களாவோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. எரே 23:1-6 II. எபே 2:13-18 III. மாற் 6:30-34)
இன்றும் நாம் பொதுக் காலத்தின் 16-ஆம் ஞாயிறைக் கொண்டாடுகிறோம். இன்றைய வாசகங்கள் கடவுளின் பரிவுள்ளதை எடுத்துக்காட்டுகின்றன. இன்றைய முதல் வாசகத்தில் பயிரை மேயும் வேலிகளாக விளங்கிய இஸ்ரயேல் மக்களின் ஆயர்களைக் கண்டிக்கின்றார் கடவுள். இஸ்ரேல் மக்களை ஆட்சி செய்த அவர்தம் ஆயர்களுக்கு எதிராகக் கடவுள் இத்தகையதொரு கோபக்கனலை கொப்பளிப்பதற்குக் காரணம், அவர்களின் அடாவடித்தனங்களும் அக்கிரமச்செயல்களும்தாம். குறிப்பாக, இன்றைய முதல்வாசகத்தின் பின்னணியில் பார்க்கும்போது, இஸ்ரயேல் மக்களின் அரசர்களான செதேக்கியா, யோவகாசு, யோயாக்கிம் ஆகியோர் கடவுள் தங்களிடம் ஒப்படைத்த அவர்தம் மந்தையாகிய மக்களுக்கு எதிராகச் செயல்பட்டனர். பரிவுள்ளம் கொண்டு மக்களின் மாண்பையும், உரிமைகளையும் காப்பதைவிட, உண்டு குடித்து மகிழ்வதிலேயே அவர்கள் குறியாய் இருந்தனர். நீதியுடனும் நேர்மையுடனும் நடந்துகொள்வதையும்; பறிகொடுத்தோரை கொடியோரிடமிருந்து விடுதலை செய்வதையும்; அன்னியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் ஒடுக்காமல் இருப்பதையும்; அவர்களுக்குக் கொடுமை இழைக்காமல் இருப்பதையும்; மாசற்றோர் இரத்தம் சிந்துவதற்குக் காரணமாகாமல் இருப்பதையுமே கடவுள் விரும்பினார். ஆனால் அவர்கள் அனைவரும் கடவுளின் இந்த விருப்பத்திற்கு நேமாறாக நடந்துகொண்டனர். இதன் பின்னணியிலில்தான் கடவுள் இவ்வாறு உரைப்பதைப் பார்க்கின்றோம். இன்றைய முதல் வாசகம் மூன்று முத்தான மையக்கருத்துக்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக, பயிர்களை மேயும் வேலிகளாகிய இஸ்ரயேல் ஆயர்களுக்கு எதிராகக் கண்டனக்குரல் எழுப்பும் கடவுள், இரண்டாவதாக, சிதறிக்கிடந்த ஆடுகளாகிய இஸ்ரயேல் மக்களை ஒன்றுசேர்ந்து பாதுகாப்பளிக்க விரும்பும் கடவுளின் ஒன்றிணைக்கும் திட்டம், மூன்றாவதாக, அவர்களுக்குப் பொறுப்பும் அக்கறையும் கொண்ட ஆயர்களை நியமிக்க விரும்பும் கடவுளின் பரிவுள்ளம். ஆக, இந்த மூன்று செயல்களையும் கடவுள் செய்ய விரும்பியதற்குத் தலையாயக் காரணம் அவரிடம் விளங்கிய பரிவுள்ளம்தான். இறைத்தந்தையிடம் விளங்கிய இந்தப் பரிவுள்ளம்தான் அவரது ஒரே திருமகனாகிய ஆண்டவர் இயேசுவிடமும் விளங்கியது. இதனைத்தான், "இயேசு கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்" என்று பதிவு செய்கின்றார் மாற்கு நற்செய்தியாளர்.
மேலும் "இதோ நாள்கள் வருகின்றன; அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள ‘தளிர்’ தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையும் நிலைநாட்டுவார். அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்; இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும்" என்று முதல் வாசகத்தில் இறைத்தந்தை கூறும் வார்த்தைகள் நமது ஒப்பற்ற அரசராகிய இயேசுவைப் பற்றித்தான் என்பதை இக்கணம் புரிந்துகொள்வோம். குறிப்பாக, “யாவே சித்கேனூ” என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும் என்றும் கடவுள் உரைக்கின்றார். எபிரேயத்தில், ‘ஆண்டவரே நமது நீதி’ என்பதுதான் இதன் பொருள். ஆக, நீதியையும் கடவுளையும் இருவேறாக நாம் பிரித்துப் பார்க்க முடியாது. கடவுளின் செயல் நீதியானது என்பதைத்தான் திருவிவிலியம் முழுதும் பார்க்கின்றோம். ‘கடவுளை அறிதல்’ என்பது நீதிநெறியுடன் வாழ்வது என்பதுதான். இதனைக் கடவுளே தன் வாய்ப்படக் கூறுகின்றார். எடுத்துக்காட்டாக, யோசியாவின் மகன் யோயாக்கிமுக்கு எதிராக வாக்குரைக்கும் இறைத்தந்தை, "ஏழை எளியோரின் வழக்கில் அவன் நீதி வழங்கினான். எல்லாம் நலமாய் இருந்தது. என்னை அறிதல் என்பது இதுதானே! என்கிறார் ஆண்டவர் (எரேமி 22:16). பரிவுள்ளம் கொண்டிராமல் நீதியை வெளிப்படுத்த முடியாது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அன்பும் பரிவிரக்கமும் இல்லாத நீதி ஆபத்தானது.
இப்போது நற்செய்தியைக் குறித்த நமது சிந்தனைகளுக்குத் திரும்புவோம். இன்றைய நற்செய்தியில் இரண்டு காரியங்களை குறிப்பிடுகின்றார் நற்செய்தியாளர் மாற்கு. பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார் என்று கடந்த ஞாயிறன்று கண்டோம். அதனைத் தொடர்ந்து, பணிக்குச் சென்று திரும்பிய திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்துகூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து “நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள் என்றார். ஏனெனில், பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.” என்று மாற்கு பதிவு செய்கின்றார். அதாவது, அவர்கள் பணிக்குச் சென்று திரும்பிய உடனேயே அவர்களை ஓய்வெடுக்க அனுப்பவில்லை இயேசு, மாறாக, அவர்கள் பெற்ற அனுபவங்களை, சவால்களை, முரண்பாடுகளை, கற்பித்தல்களை, கற்றல்களைக் கேட்டறிகின்றார். அதுமட்டுமன்றி, அவர்களுக்கு உடனடியாகத் தனது அறிவுறுத்தல்களை வழங்காமல், உடனே அவர்களை ஓய்வெடுக்க அனுப்புகின்றார். இங்கே ‘ஓய்வெடுத்தல்’ என்பது வெறுமனே, உண்டு குடித்து உறங்குதல், இறைவேண்டல் செய்தல் என்பவை மட்டுமல்ல, மாறாக, தங்கள் பணிகளின்போது அவர்கள் பெற்ற அனைத்து அனுபவங்களையும் மீண்டும் ஒருமுறை அசைபோட்டுப் பார்ப்பது என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் நமது ஆன்மிகப் பணிகளை அடிக்கடி அசைபோட்டுப் பார்க்கும்போதுதான் அவை மேலும் மேலும் மெருகூட்டப்பட்டு செம்மையுறும் (கால்நடைகளைப் போன்று). மேலும் இறையழைத்தல், மக்கள் பணி என்பது நமது வாழ்வில் மிகவும் இன்றியமையாதவை என்றாலும், இறையனுபவம் என்பது நாம் பெற்றுள்ள இந்த அழைத்தல் வாழ்விற்கு மிகவும் உரமூட்டக்கூடியது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. ஆக, இறையனுபவமும் மக்கள் பணியும் ஒன்றினைந்து பயணிக்க வேண்டும். அதேவேளையில், நமது இறையனுபவமே இறைமக்கள் மீது நாம் கொள்ளவேண்டிய அன்பையும், அக்கறையையும், பரிவுள்ளத்தைத் தோற்றுவிக்கும் ஊற்றுக்கண்ணாக அமைகிறது என்பதையும் நம் நினைவில் கொள்வோம்.
அடுத்து நாம் தொடர்ந்து வாசிக்கும்போது, ‘அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்’ என்று மாற்கு கூறுகின்றார். இங்கே மக்களின் தொடர் தேடலையும், அவர்கள்மேல் கொண்டிருக்க வேண்டிய பரிவுள்ளதையும் மாற்கு நற்செய்தியாளர் எடுத்துக்காட்டும் அதேவேளை, அந்தப் பரிவுள்ளம் என்பது இயேசுவிடமிருந்து முதலில் வெளிப்படுவதையும், திருத்தூதர்கள் இதனைத் தாங்களும் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் வெளிப்படுத்துகின்றார். ஆக, பரிவுள்ளம் என்பது சீடத்துவ வாழ்வின் மையமாக வேண்டும் என்பதை இயேசு இங்கே எடுத்துக்காட்டுவதாகக் கூறுகின்றார் மாற்கு. மேலும் இந்தப் பரிவுள்ளமே, இயேசுவின் மனுவுருவெடுத்தல் தொடங்கி, கல்வாரிப் பயணத்தின் இறுதிவரையிலும், அதாவது, சிலுவையில் தன் உயிரை நமக்காகத் தற்கையளிப்பு செய்தது வரை வெளிப்பட்டு அனைத்து மக்களையும் ஒன்றுபடுத்தியது. இதனைத்தான், "ஒரு காலத்தில் தொலையில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து, அவரது இரத்தத்தின்மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்" என்று கூறுகின்றார் புனித பவுலடியார்.
இறுதியாக, இயேசு மக்கள்மீது கொண்டிருந்த இந்தப் பரிவுள்ளம் என்பது இறைமக்களிடம், இறைபணியாளர்களிடம், இருபால் துறவு சபைகளின் தலைவர்களிடம், நம்மை ஆளும் அரசியல் தலைவர்களிடம், மக்களை வழிநடத்தும் பல்வேறு அரசுப் பொறுப்பிலுள்ளவர்களிடம் வெளிப்படுகிறதா என்பது குறித்தும் நாம் கேள்வியெழுப்பிச் சிந்திப்போம். குறிப்பாக, இன்றைய நம் இந்தியாவின் அரசியல் சூழலைப் பார்க்கும்போது அது இல்லை என்பது தெளிவாகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சிசெய்த பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான ஒன்றிய அரசு நம்மை ஆட்சிசெய்த விதம் நம் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அது இப்போதும் தொடர்வதைப் பார்க்கின்றோம். இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு சில தலைவர்கள் போடுகின்ற ஆட்டம் சகித்துக்கொள்ள முடியாததாக இருக்கின்றது. அன்று இஸ்ரயேல் மக்களை ஆட்சி செய்த ஆயர்களிடம் கொண்டிருந்த தீராத கோபத்தைத்தான் இன்றைய நம் தலைவர்கள்மீதும் கடவுள் கொண்டிருக்கிறார் என்பது திண்ணமன்றோ?
கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8-ஆம் தேதி திருச்சிக்கு அருகே நிகழ்ந்த கொடூரமான சம்பவம் ஒன்று என் நினைவுக்கு வருகின்றது. ஓர் அரசு அதிகாரி அதுவும் மக்களைப் பாதுகாக்க வேண்டிய ஒருவர் இப்படி மதியற்ற நிலையில் நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு இச்சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு. தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே சூலமங்கலத்தைச் சேர்ந்தவர் இராஜா என்பவர். இவர் தனியார் வங்கி ஒன்றில், தண்டல் முகவராக (collection agent) பணியாற்றி வருகின்றார். இவர் கர்ப்பிணியாக இருந்த தனது மனைவி உஷாவுடன் சம்பவம் நடந்த அன்று தஞ்சையிலிருந்து திருச்சிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் அவரின் மனைவி அப்போதுதான் முதன்முறையாக கர்ப்பம்தரித்திருந்தார். அதுவும் அவர் கர்ப்பம் தரித்து மூன்று மாதங்களே ஆகியிருந்தன. அப்போது துவாக்குடி சுங்கச்சாவடி அருகே, போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் என்பவர் வாகனசோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அந்நேரத்தில் ராஜாவின் வண்டியை நிறுத்தியிருக்கிறார் அவர். ஆனால் அதனைக் கவனிக்காத ராஜா தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆய்வாளர் காமராஜ், அவரைத் துரத்திச் சென்று பாய்லர் ஆலை அருகே அவர்களை மறித்து நிறுத்தினார். உடனே கோபவெறியுடன் தனது வாகனத்திலிருந்து இறங்கிய ஆய்வாளர் காமராஜ், ராஜாவின் இருசக்கர வாகனத்தை ஆவேசமுடன் எட்டி உதைத்திருக்கிறார். இதனால் நிலைதடுமாறிய இருவரும் சாலையில் கீழே விழுந்தனர். இதில் மூன்று மாத கர்பிணிப் பெண்ணான உஷா படுகாயம் அடைந்ததுடன், அவரது கர்ப்பம் களைந்து இரத்தம் வெளியேறி அந்த இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். இதனைக் கண்ட பாய்லர் ஆலைத் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து அங்கு ஓடிவந்து படுகாயத்துடன் கிடந்த ராஜாவை சாலையின் ஓரத்தில் படுக்கவைத்தனர். உடனடியாக அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டது. சூழல் மோசமாகிறது என்பதை அறிந்த அரக்கமனம் கொண்ட அந்த காமராஜ் என்ற மனித மிருகம் அங்கிருந்து தப்பிச்சென்றது. அதன் பிறகு ராஜாவை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகவும், இறந்த அவரது மனைவியை அதே மருத்துவமனைக்கு உடல்கூராய்விற்கும் அனுப்பி வைத்தனர். உடனே இந்தச் செய்திக் காட்டுத்தீயாய்ப் பரவ பரிவுள்ளம் கொண்ட மக்கள் பலரும் இளையோரும் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி இந்த அநியாயச் செயலைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக, அப்பகுதியில் போக்குவரத்து முடங்கிப்போனது. அதன்பிறகு அங்குக் காவல் கண்காணிப்பாளர் வர பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில், கர்ப்பிணிப்பெண் மரணத்துக்கு காரணமான துவாக்குடி போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கொலை செய்யும் நோக்கத்தோடு விபத்தை ஏற்படுத்துதல், தனி மனிதருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் காமராஜ் அடைக்கப்பட்டார். அவ்வாறே, அண்மையில் கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த விஷச்சாராய மரணங்களிலும் காவல்துறையினரின் பங்களிப்பு அதிகம் உள்ளதாகவே செய்தித்தாள்களில் கூறப்பட்டது. இந்தச் சம்பவத்தில் இருவகையான மனிதரைப் பார்க்கின்றோம். முதலாமவர் பரிவுள்ளமற்ற ஆய்வாளர் காமராஜ் மற்றும் காவலர்கள். இரண்டாம் வகையினர் பரிவுள்ளம் கொண்ட பொதுமக்கள் மற்றும் இளையோர்.
எனவே, இந்தப் பரிவுள்ளம் என்பது முதலில் தனிமனிதரிடமிருந்து தொடங்க வேண்டும். அப்போதுதான் அது சிறிது சிறிதாக வளர்ந்து பெரியதொரு நிலைக்கு உயரும். அதாவது, எல்லாரித்திலும் வளரும். மேலும் இந்தப் பரிவுள்ளம் என்பது நமது வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வெளிப்பட வேண்டும். ஆகவே, இந்தப் பரிவுள்ளத்தை நமது ஆண்டவர் இயேசுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்வோம். அதற்கான அருள்வரங்களுக்காக அவரிடம் இந்நாளில் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்