தேடுதல்

அப்பம் பகிர்ந்தளித்தல் அப்பம் பகிர்ந்தளித்தல் 

பொதுக் காலம் 17 -ஆம் ஞாயிறு : பகிரும் மனம் வளர்ப்போம்!

இயேசு செய்த இந்த அருளடையாளத்தை வெறுமனே ஒரு புதுமையாக மட்டுமே பார்க்காமல், அதில் இயேசு நமக்குத் படிப்பிக்க விரும்புகின்ற ஆன்மிக மற்றும் சமூகப் பாடங்களைக் கற்றுக்கொள்வோம்.
பொதுக் காலம் 17 -ஆம் ஞாயிறு : பகிரும் மனம் வளர்ப்போம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. 2 அர 4:42-44     II. எபே 4:1-6     III. வோவா 6:1-15)

பொதுக் காலத்தின் 17-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய  வாசகங்கள் பகிர்தல் மனப்பான்மையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகின்றன. நம் மத்தியில் நடந்துள்ள ஓர் உண்மை நிகழ்வுடன் நமது மறையுரைச் சிந்தனைகளைத் தொடங்குவோம். பலருக்கு மும்பைதான் உண்மையான கனவு நகரம். ஆனால் பயந்தர் பகுதியில் வாழும் உதய் மோடி ஒரு காலைப் பொழுதில் பயங்கரமான கனவுடன் கண் விழித்தார். 70 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் அவரது வீட்டுக் கதவைத் தட்டுகிறார். கதவைத் திறந்ததும், நோய்வாய்ப்பட்ட தனது மனைவியைப் பராமரிக்க பணம் வேண்டும் என அந்த முதியவர் அவரிடம் கேட்கிறார். இந்தச் சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட உதய் அன்றைய தினமே முதியோர் இல்லம் ஒன்றை தொடங்க வேண்டும் என முடிவெடுக்கிறார். பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களுக்காக இன்று மருத்துவர் உதய் மோடி தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். இவர் தினமும் 200 முதியவர்களுக்கு உணவளிக்க தனது சொந்த பணத்தை செலவிடுகிறார். உணவு சமைக்கவும் அவற்றை பைகளில் கட்டித் தயார் செய்யவும், உள்ளூர் சமையல்காரர்களுடன் இணைந்து செயல்படுகிறார். அவர்களுக்காக ’திக்ரா நூ கர்’ என்கிற இல்லத்தை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.  இதுகுறித்து அவர் கூறும்போது, “சமைக்கும் உணவை சுற்றுவட்டாரத்திலுள்ள பல்வேறுப் பகுதிகளுக்கும் எடுத்துச்சென்று பரிமாற எங்களிடம் நான்கு வாகனங்கள் உள்ளன. தொலைக்காட்சித் தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் நடிக்கும் பணியில் நான் ஈடுபட்டுள்ளேன். என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து கிடைக்கும் உதவியுடன் என்னுடைய கூடுதல் வருமானமும் இருப்பதால் இந்தச் செயலைச் செய்வதற்குப் போதுமானதாக உள்ளது. எனினும் இன்னும் அதிகம் பேருக்கு உதவுவதற்கான வழிமுறைகளை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறேன்,” என்கிறார். உதயின் இந்த நோக்கத்தில் அவரது மனைவியும் அவரது பதின்ம வயது குழந்தைகளும் பங்களித்து ஆதரவளிக்கின்றனர். தொடர்ந்து உணவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 3 லட்ச ரூபாய் வரை செலவிடுகிறார். இந்த நோக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல கூட்டுநிதி தளம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். ஆனால் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற தீராத ஊக்கம்தான் அவரைத் தொடர்ந்து செயல்பட வைக்கிறது. மேலும், இது குறித்து அவர் கூறுகையில், ”இந்தச் சேவைக்காக என் குழந்தைகள் தங்களது சேமிப்பில் இருந்து சிறு தொகையை வழங்கும்போது மனம் நிறைவடைகிறது. பலர் உதவ முன் வந்து ஆதரவளிக்கின்றனர். இந்த முயற்சி தொடரும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த முதியவர்கள் அவர்களது சொந்த மகனின் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் அவர்களது உணவுத் தேவையை மட்டுமல்லாது அனைத்து விதமான பராமரிப்பும் கிடைக்கக்கூடிய ’திக்ரா நூ கர்’ என்ற இல்லத்தையும் கட்ட விரும்புகிறேன்" என்றும் கூறியுள்ளார். இந்தச் செய்தி கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மதம் 06-ஆம் தேதி இணையத்தில் வெளியாகியிருந்தது.

இன்று யோவான் நற்செய்தி நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த வார ஞாயிறு நற்செய்தி வாசகத்தில், இயேசு கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். என்பதை மையமாகக்கொண்டு சிந்தித்தோம். அதனைத் தொடர்ந்து வரும் பகுதியில் இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு அளிக்கும் நிகழ்வைப் பதிவுசெய்கின்றார் நற்செய்தியாளர் மாற்கு. அதேவேளையில், இயேசு கலிலேயக் கடலை கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர் என்று யோவானும் பதிவு செய்கின்றார். ஆக, இருவரும் கூறும் பின்புலம் ஒரேமாதிரியாகத்தான் இருக்கின்றது. ஆனால் மாற்குவைப் பொறுத்தமட்டில், திருத்தூதர்கள் தங்கள் பணியிலிருந்து திரும்பி வந்த நிலையில் இந்த அருளடையாளம் நிகழ்வதாகப் பதிவு செய்கின்றார். ஆனால், தன்னை மெசியா என்று நம்பாத யூதர்களைக் கடிந்துகொள்ளும் நிலையில், தன்னிடம் நம்பிக்கை கொண்ட அதாவது, உடல் நலமற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்த மக்கள்மீது பரிவுள்ளம் கொண்டு இந்த அருளடையாளத்தைச் செய்வதாகப் பதிவு செய்கின்றார் நற்செய்தியாளர் யோவான். ஆக, இருவரும் வெளிப்படுத்தும் இவ்வருளடையாள நிகழ்வில் இயேசுவின் பரிவுள்ளம் ஒருசேர வெளிப்படுவதைக் காண்கின்றோம்.

இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் ஒத்த சிந்தனையுடையதாக இருப்பதைப் பார்க்கின்றோம். இப்போது முதல் வாசகத்தை வாசித்து நமது மறையுரைச் சிந்தனைகளை ஆழப்படுத்துவோம். பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரிடம் கொண்டு வந்தார். எலிசா, “மக்களுக்கு உண்ணக் கொடு” என்றார். அவருடைய பணியாளன், “இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?” என்றான். அவரோ, “இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெனில் ‘உண்ட பின்னும் மீதி இருக்கும்’ என்று ஆண்டவர் கூறுகிறார்” என்றார். அவ்வாறே, அவன் அவர்களுக்குப் பரிமாற, அவர்கள் உண்டனர். ஆண்டவரது வாக்கின்படி மீதியும் இருந்தது.

இன்றைய முதல் வாசகமும் மூன்றாம் வாசகமும் பகிர்தல் என்ற ஒரு முக்கியமான கருத்தை நமக்கு வலியுறுத்துகின்றன. 'பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரிடம் கொண்டு வந்தார்' என்றுதான் இன்றைய முதல் வாசகம் தொடங்குகிறது. அவ்வாறே, இயேசுவின் சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, “இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன" என்கின்றார்.

அதேவேளையில், இந்தச் சிறிய அளவைக் கொண்டு எப்படி பெரிய காரித்தை செய்யமுடியும் என்ற வியப்பு எலிசாவின் பணியாளருக்கும், இயேசுவின் சீடரான அந்திரேயாவிற்கும் தோன்றுகிறது. அதனால்தான், “இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?” என்று எலிசாவின் பணியாளரும், "இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?” என்று அந்திரேயாவும் கூறுவதைப் பார்க்கின்றோம். அடுத்து எலிசாவின் பணியாளர் மக்களுக்கு உண்ணக் கொடுப்பதைக் காண்கின்றோம். ஆனால்  நற்செய்தியில் முதலில் இயேசுவும் பின்னர் அவரது சீடர்களும் மக்களுக்கு உண்ணக் கொடுக்கின்றனர்.

பகிர்வு மனம்கொண்ட மனிதர்

இறைவாக்கினர் எலிசாவும் சரி, நமதாண்டவர் இயேசுவும் சரி, எதுவுமே இல்லாமல் இறைத்தந்தையின் அருளால் இந்த மாபெரும் அருளடையாளத்தை நிகழ்த்திக் காட்டியிருக்க முடியும். ஆனால் பகிர்தல் வழியாகவே எப்போதும் எல்லாருக்கும் எல்லாவிதமான நன்மைகளையும் செய்ய முடியும் என்பதை எடுத்துக்காட்டவே பிறரிடம் இருப்பதிலிருந்து இந்த அருளடையாளம் நிறைவேற்றப்படுகிறது. ஆக, கடவுள் 70 விழுக்காடு உதவ முன்வரும்போது அதில் 30 விழுக்காடு நமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற மிக உயரிய பாடத்தை கடவுள் நமக்குக் கற்றுக்கொடுக்க விரும்புகின்றார். இந்த மறையுரையின் தொடக்கத்தில் கேட்டதுபோல் மருத்துவர் உதய் மோடி ஏழைகளுக்கு உணவுகொடுக்கும் நிகழ்வில் அவரது மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், தனக்குத் தெரிந்தவர்கள் என எல்லாரும் அவருடன் இணைந்து உதவி செய்வதால்தான் அதாவது, பகிர்ந்துகொள்வதால்தான் இப்படப்பட்டதொரு அருமையான பிறரன்புப் பணியை அவரால் செய்ய முடிகிறது. ஆக, மனிதர் ஒரு நற்செயலை செய்ய முன்வரும்போது, கடவுளும் தன்பங்கிற்கு நிச்சயம் அதிகமாகவே உதவ முன்வருவார் என்பது திண்ணம்.

பகிரும் மனமற்றோர்

பகிரும் மனம்கொண்ட மருத்துவர் உதய் மோடி போன்றோர் மத்தியில் பகிரா மனம் கொண்ட அதானி, அம்பானி போன்றோரும் நம் இந்தியாவில் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதைத்தான் செய்திகளில் வாசிக்கின்றோம். முகேஷ் அம்பானி - நீதா அம்பானி ஆகியோரின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழிலதிபர் விரேன் மெர்ச்சென்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சென்ட்டிற்கும் கடந்த 12ம் தேதி மும்பையில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்தத் திருமணத்திற்காக, ஏறக்குறைய 5000 கோடிக்கும் மேலாக செலவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் திருமணத்திற்கு  முந்தைய விழாவை பன்னாட்டு மற்றும் இந்திய பிரபலங்களை அழைத்து அம்பானி குடும்பத்தினர் கொண்டாடி உள்ளனர். இதற்காக 1000 கோடிவரை செலவு செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பில்கேட்ஸ், சுந்தர் பிச்சை, மார்க் சக்கர்பெர்க் மட்டுமல்லாது, டிஸ்னி போன்ற அனைத்துலக நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் வந்திருந்து விழாவைச் சிறப்பித்தனர். `இது போன்ற ஒரு நிகழ்ச்சியை எனது வாழ்நாளில் கண்டதில்லை' என்று நடிகர் அமிதாப் பச்சன் புகழும் அளவுக்கு, தொழிலதிபர் முகேஷ் அம்பானி, தன் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை (Pre-Wedding Bash) நடத்தி முடித்திருக்கிறார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வு, இந்தியா மட்டுமல்லாது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு மிகப் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. ஆனால் அதேவேளையில் யார் வீட்டுப் பணத்தையெடுத்து யாருக்கு விருந்து படைக்கிறார் முகேஷ் அம்பானி என்றும், இது எல்லாம் யார் பணம்? மக்கள் பணம்தானே? என்றும், இந்த விழா குறித்த எதிர்மறை விமர்சனங்களும் எழுந்தவண்ணம் உள்ளன. ஒருபுறம் ஏழை எளிய மக்கள் பசியால் வாடும் நிலையில், மறுபுறம் இப்படிப்பட்ட கேலிக்கூத்துகள் நிகழத்தான் செய்கின்றது. அதற்கு ஆளும் அரசு துணைபோவதுதான் பெரும் அபத்தமாக இருக்கின்றது.

உணவை வீணாக்குவதைத் தவிர்ப்போம்

அடுத்து இந்த அருளடையாளத்தில்,  மக்கள் உண்ட பின்னும் மீதி இருப்பதைப் பார்க்கின்றோம். அவர்கள் வயிறார உண்டபின், “ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்” என்று தம் சீடரிடம் கூறினார் என்று யோவான் நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். இது இரண்டு முக்கியமான காரியங்களை நமக்கு நினைவூட்டுகின்றது. முதலாவது, ‘நாம் சாப்பிட்டுவிட்டோம்... அது போதும் இனி யாருக்கு இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன’ என்கின்ற ஒருவித சுயநல மனப்பான்மை நம்மிடையே வந்துவிடக் கூடாது என்று இயேசு அறிவுறுத்துவத்தைக் காண்கின்றோம். இரண்டாவதாக, மிக மிக முக்கியமானது உணவை விரயமாக்கக் கூடாது என்றதொரு பாடத்தை இயேசு நமக்குப் படிப்பிக்கின்றார். இன்றைய உலகில் ஏறத்தாழ 70 கோடி மக்கள் இரவில் உணவு இன்றி உறங்க செல்கிறார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? உணவின் மொத்த உற்பத்தியில் 20 விழுக்காடு  உணவு விரயமாக்கபடுவதாக ஐ.நா-வின் உணவு விரய குறியீட்டின் 2021-இன் ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது. உலகளவில் 54 நாடுகளில் 2019-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 61 விழுக்காடு உணவு வீடுகளில் இருந்தும், 26 விழுக்காடு உணவு விடுதிகளில் இருந்தும், 13 விழுக்காடு உணவு சில்லறை விற்பனை நிலையங்களில் இருந்தும் விரயமாக்கப்படுகின்றது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் உணவை நுகரும் ஒவ்வொரு தனி மனிதனும் 74 கிலோ உணவை வீட்டிலிருந்தும், 47 கிலோ உணவை திருவிழாக்கள், உணவகங்கள், திருமண நிகழ்வுகள் மற்றும் சமூக நிகழ்வுகளில் பரிமாறப்படும் உணவிலிருந்தும் விரயம் செய்வதாக அந்த ஆய்வறிக்கைத் தெரிவிக்கின்றது. ஐக்கிய நாடுகளின் உணவுக் கழிவுக் குறியீட்டு அறிக்கை 2021- ஆம் ஆண்டின்படி, இந்தியாவில் வீணாகும் உணவில் 61 விழுக்காடு நமது சமையலறையிலே நடைபெறுகிறது என்பது அதிரிச்சியூட்டுகின்றது. மேலும் மும்பையில் தினமும் 69 இலட்சம் கிலோ உணவுப் பொருட்கள் உண்ணாமல் தூக்கி எறியப்படுவதாக புள்ளி விவரங்கள் புலப்படுத்துகின்றன.

ஆகவே, இயேசு செய்த இந்த அருளடையாளத்தை வெறுமனே ஒரு புதுமையாக மட்டுமே பார்க்காமல், அதில் இயேசு நமக்குத் படிப்பிக்க விரும்புகின்ற ஆன்மிக மற்றும் சமூகப் பாடங்களைக் கற்றுக்கொள்வோம். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2024, 08:40