கர்தினால் பரோலினின் உக்ரைன் வருகை மகிழ்வின் அடையாளம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருத்தந்தை நம் அருகில் இருக்கின்றார் என்பதன் அடையாளமாக கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் உக்ரைன் வந்திருக்கின்றார் என்றும், அவரது வருகையினால் இலத்தீன் வழிபாட்டுமுறை தலத்திருஅவை மிகுந்த மகிழ்ச்சியடைகின்றது என்றும் கூறினார் ஆயர் Vitalij Skomarovsky.
ஜூலை 19 வெள்ளிக்கிழமை உக்ரைனுக்கு சென்ற திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களின் வருகை பற்றி எடுத்துரைத்தபோது இவ்வாறு கூறினார் உக்ரைன் இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் Vitalij Skomarovsky
ஜூலை 19 வெள்ளிக்கிழமை முதல் 24 புதன்கிழமை வரை 5 நாள்கள் உக்ரைனில் தங்கி அங்குள்ள அரசு அதிகாரிகள், துறவறத்தார் ஆகியோரைச் சந்திக்க உள்ள கர்தினால் பரோலின் அவர்கள் ஜூலை 21 ஞாயிற்றுக்கிழமை உக்ரைனின் பெர்டிகீவ் மரியன்னை திருத்தலத்தில் நடைபெற உள்ள கொண்டாட்டங்களுக்கு திருத்தந்தையின் பிரதிநிதியாக பங்கேற்க உள்ளார்.
இவ்வாண்டு திருத்தந்தையின் பிரதிநிதியாக உக்ரைன் வந்திருக்கும் கர்தினால் பரோலின் அவர்கள் ஏற்கனவே இரண்டு முறை அதாவது 2016 ஜூலை மாதம், 2021 ஆகஸ்ட் மாதம் என இரண்டு முறை உக்ரைன் வந்திருக்கிறார் என்றும், உக்ரைனில் நிலவும் சூழலை நன்கு அறிந்தவ அவர், ஆயர்கள், அருள்பணியாளர்கள், தனிநபர்கள் என அனைவரையும் சந்தித்து உரையாடுபவர் என்றும் கூறினார்.
போர் தொடங்கி இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் உக்ரைனை மறந்துவிடாமல் தொடர்ந்து அமைதிக்காக செபிப்பதற்கு உலக மக்களுக்கு நன்றி என்றும், திருத்தந்தை அவர்களின் அமைதிக்கான தொடர் விண்ணப்பங்களுக்கும் திருஅவையின் அமைதிக்கான செயல்பாடுகள் அனைத்திற்கும் நன்றி என்றும் கூறினார் ஆயர் வித்தால்ஜி.
பெர்டிகீவ் மரியன்னை திருத்தலத்தில் உள்ள தூய கார்மேல் அன்னை, உக்ரைனின் பாதுகாவலர் என்று இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவையால் அறிவிக்கப்பட்டது என்று எடுத்துரைத்த ஆயர் வித்தால்ஜி அவர்கள், ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பகுதிகளைச் சார்ந்த ஆயர்கள் வழிபாடுகளைச் சிறப்பிப்பார்கள் என்றும்,பெருந்தொற்று மற்றும் போருக்கு முன்பு அதாவது 2020 ஆம் ஆண்டு கர்தினால் கோன்ராடு கிரவெயிஸ்கி இவ்விழாவைச் சிறப்பித்தார் என்றும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்