பெண் துறவியரின் உருவாக்கப் பயிற்சியை பலப்படுத்தும் UISG அமைப்பு
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உலகெங்கிலும் உள்ள 29 நாடுகளில் உள்ள 39 பெண் துறவு சபைகளைச் சேர்ந்த ஏறத்தாழ 250 அருள்சகோதரிகள், உரோமையில் நிகழ்ந்த ஆறு மாத கால பயிற்சித் திட்டம் ஒன்றை நிறைவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார் UISG எனப்படும் உலகளாவிய பெண் துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள்சகோதரி Shalini Mulackal.
வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில் இந்தத் தகவலை வழங்கியுள்ள PBVM என்னும் துறவு சபையைச் சார்ந்த அருள்சகோதரி Shalini அவர்கள், பெண் துறவு சபைகளின் தொடக்க கால உருவாக்கப் பயிற்சிக்குப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் இத்திட்டத்தில் பாடநெறிமுறைகள் வகுக்கப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த நேரத்தில் அவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்களோ, அது அவர்களின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்குத் தோழர்களாக இருக்கவும், அவர்களின் பயணத்தில் அவர்களுடன் உடன் செல்லவும் உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் அருள்சகோதரி Shalini.
இந்த ஆறுமாதக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும், வகுப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், குழுமப் பணிகள், பகிர்வுகள், தனிப்பட்ட சிந்தனைகள் யாவும் தங்களுக்குப் பெரும் வழிகாட்டல்களாக இருந்தன என்று கூறியதாகவும் எடுத்துரைத்துள்ளார் அருள்சகோதரி Shalini.
UISG அமைப்பில், 97 நாடுகளிலிருந்து, 1,900த்திற்கும் மேற்பட்ட பெண் துறவு சபைகளின் தலைவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 25 ஐரோப்பிய நாடுகளிலிருந்து 1046 பேரும், 16 ஆசிய நாடுகளிலிருந்து 184 பேரும், 30 அமெரிக்க நாடுகளிலிருந்து 479 பேரும், 22 ஆப்ரிக்க நாடுகளிலிருந்து 166 பேரும், 4 ஓசியானியா நாடுகளிலிருந்து 28 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். இம்மாநாடு 1965ம் ஆண்டிலிருந்து, ஈராண்டிற்கொருமுறை நடைபெற்று வருகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்