டிரம்ப் மீதான கொலைமுயற்சி குறித்து அமெரிக்க ஆயர் பேரவை கண்டனம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
அமெரிக்க ஐக்கிய நாட்டின் பென்சில்வேனியா மாநிலத்தின் பட்லர் என்னுமிடத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொலை முயற்சி இடம்பெற்றது குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர்.
சனிக்கிழமையன்று இடம்பெற்ற இத்துப்பாக்கிச்சூடு குறித்து வத்திக்கான் செய்தித்துறையுடன் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட ஆயர் பேரவைத்தலைவர், பேராயர் Timothy Broglio அவர்கள், எந்த ஒரு கருத்து முரண்பாடும் மரியாதையுடனும், சக மனிதருக்குரிய மதிப்புடனும் வெளிப்படுத்தப்படவேண்டும் என அழைப்புவிடுத்தார்.
நம்முடைய கருத்துக்கு முரண்பட்ட ஒரு கருத்தை மற்றவர் கொண்டிருந்தாலும் அவரும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவர் என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளும்போது, அவரையும் ஏற்றுக்கொள்வோம் என மேலும் எடுத்துரைத்தார் பேராயர்.
முன்னாள் அரசுத்தலைவரின் வலது காதை உரசிக்கொண்டுச் சென்ற இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டவர் உடனடியாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில், பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்திருந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார், இருவர் காயமடைந்துள்ளனர்.
முன்னாள் அதிபர் மீதான இந்த கொலைமுயற்சி குறித்து திருப்பீடமும் தன் வன்மையான கண்டனத்தை ஞாயிறன்றே வெளியிட்டுள்ளது.
இத்தகைய வன்முறை நிகழ்வுகள் மக்களையும் ஜனநாயகத்தையும் காயப்படுத்துவதோடு, துன்ப துயர்களுக்கும் மரணத்திற்கும் காரணமாகின்றன என இந்நிகழ்வு குறித்து திருப்பீடம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட, உலகின் பல்வேறு தலைவர்களும் இந்த கொலை முயற்சி குறித்த தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்