தேடுதல்

லெபனோனில் போர்ச்சூழல் லெபனோனில் போர்ச்சூழல்   (AFP or licensors)

லெபனோன் மக்கள் அமைதிக்காக செபிப்பதுடன் உதவியும் செய்கிறார்கள்

இந்த நேர்காணலின்போது, லெபனோனில் போரால் துயருறும் மக்களின் தற்போதைய நிலை குறித்தும், புலம்பெயர்ந்தோருக்கு உதவி வரும் தலத்திருஅவையின் பங்களிப்பு குறித்தும், கிறித்தவ மக்களிடம் காணப்படும் இறைநம்பிக்கை மற்றும் ஈடுபாடு நிறைந்த வழிபாடு குறித்தும் விவரித்துள்ளார் மாரோனைட் ஆயர் Munir Kairallah

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காசாவில் போர்நிறுத்தம் இல்லாத வரை தெற்கு லெபனோனில் ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையே வன்முறை தொடரும் என்றும், இந்தப் போரின் விளைவுகளை தெற்கு லெபனோன் மக்கள் அனுபவிக்கிறார்கள், ஆனால் அவர்கள் இஸ்ரேலுடன் மோதலை விரும்பவில்லை என்றும் கூறினார் ஆயர் Munir Kairallah.

வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள லெபனோனின் Batroun  மறைமாவட்டத்தின் மாரோனைட் ஆயர் Munir Kairallah அவர்கள், தலத்திருஅவை அமைதிக்காக இறைவேண்டல் செய்வதுடன், அந்தப் பகுதியைவிட்டு வெளியேறியுள்ள ஏறத்தாழ ஒரு இலட்சம் புலம்பெயர்ந்தோருக்கு உதவி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தெற்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்களின் நிலைமை குறித்து இந்நேர்காணலில் விவரித்த ஆயர் Kairallah அவர்கள், புலம்பெயர்ந்துள்ள மக்கள் பொதுவாக குடும்பம் மற்றும் நண்பர்களால் விருந்தளிக்கப்படுகிறார்கள், ஆனால் அதேவேளையில் தலத்திருஅவை தேவையில் இருப்பவர்களுக்கு உதவி வழங்குவதன் வழியாக அதன் பங்கைச் செய்கிறது என்றும், 15 இலட்சத்திற்கும் அதிகமான சிரியா புலம்பெயர்ந்தோர் இன்னும் லெபனோனில் உள்ளனர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

தலத்திருஅவையின் பணிகளைக் குறித்து விவரித்துள்ள ஆயர் Kairallah அவர்கள், ஜூலை 21, கடந்த ஞாயிறன்று நடைபெற்ற புனித சார்பலின் திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான விசுவாசிகள் இந்த ஆலயத்தில் இறைவேண்டல் செய்தனர் என்றும் இது பெரிய நம்பிக்கையைக் கொண்டு வந்துள்ளது. அதேநேரத்தில், தலத்திருஅவையில் இளைஞர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய வளர்ச்சியையும் காண முடிகிறது என்றும் உரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2024, 12:52