எதிர்காலம் தங்கள் கைகளில் உள்ளது என்பதை மக்கள் அறிவார்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
வெனிசுலா மக்கள் வரவிருக்கும் இரு தேர்தல்களில் சரியாக வாக்களித்து, சரியான தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்றும்,"எதிர்காலம் தங்கள் கைகளில் உள்ளது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் கூறியுள்ளனர் வெனிசுலா தலத்திருஅவை ஆயர்கள்.
அண்மையில் ACN எனப்படும் தேவையில் இருக்கும் தலத்திருஅவையினருக்கு உதவும் பன்னாட்டு அமைப்பின் செய்தி ஒன்றிற்கு அளித்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள வெனிசுலா ஆயர் பேரவையானது, வெனிசுலாவில் வரவிருக்கும் தேர்தல்கள் மற்றும் நாட்டின் சூழல் நிலைமையைப் பற்றி இவ்வாறு எடுத்துரைத்துள்ளது.
ஜூலை 28 ஞாயிற்றுக்கிழமை அரசுத்தலைவர் தேர்தலுக்கான வாக்குரிமை நடைபெற உள்ள நிலையில் இது குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள வெனிசுலா ஆயர் பேரவையானது, நாட்டின் எதிர்காலத்தை வரையறுப்பதில் மக்களின் முக்கிய பங்கை இத்தேர்தல் எடுத்துக்காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஜனநாயக ஆட்சிமுறை, சமூக அரசியல், வாழ்க்கைத்தரம் போன்றவற்றில் மாற்றம் காணவும், தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களாய் வாழவும், முழுமன சுதந்திரத்துடனும் நம்பிக்கையுடனும் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர் ஆயர் பேரவையின் ஆயர்கள்.
திறந்த மனம், சுய நினைவு, பொறுப்பு ஆகியவை கொண்டதாக தேர்தல் வாக்களிப்பில் மக்களின் பங்கேற்பு இருக்க வேண்டும் என்றும், நம்பிக்கை, அமைதி, நீதி, சுதந்திரம் கொண்ட எதிர்கால நாட்டைக் கட்டியெழுப்புவது மிக முக்கியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர் ஆயர்கள்.
புறக்கணிப்பு, அரசியல் அக்கறையின்மை ஆகியவற்றை தோற்கடிப்பதன் வழியாக மட்டுமே நாட்டின் மறுசீரமைப்புடன் கூடிய முன்னேற்றத்தை நாம் காண முடியும், என்று வலியுறுத்தியுள்ள ஆயர்கள், 2010 ஆம் ஆண்டில் இருந்து நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் பற்றியும் எடுத்துரைத்துள்ளனர்.
வெனிசுலாவில் சிக்கலான அரசியல் சூழல் நிலவி வருவதால் ஏராளமான பொருளாதார நெருக்கடிகளையும், சிக்கல்களையும் நாடு சந்தித்து வருகின்றது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு அரசுத்தலைவருக்கானத் தேர்தலும், 2025 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்