“இயேசுசபை திருப்பயணச் செயலி" கொரிய மற்றும் சீன மொழிகளில்
மெரினா ராஜ் - வத்திக்கான்
“இயேசுசபை திருப்பயணம்” எனும் செயலியானது ஏற்கனவே ஆங்கிலம், இஸ்பானியம், பிரெஞ்சு, இத்தாலியம், வியட்நாம் ஆகிய ஐந்து மொழிகளில் செயல்பட்டு வருகிற நிலைமையில் தற்போது சீன மற்றும் கொரிய மொழிகளிலும் இச்செயலியானது செயல்படத்துவங்கி இருக்கின்றது.
ஜூலை 31 செவ்வாய்க்கிழமை திருஅவை நினைவுகூர்ந்த இயேசு சபை புனிதரான தூய லொயோலா இஞ்ஞாசியார் நாளை முன்னிட்டு மேலும் இரண்டு மொழிகளில் இந்த திருப்பயண செயலியினை மெருகேற்றி முன்னோக்கிக் கொண்டு செல்கின்றனர் இயேசு சபையினர்.
தூய லொயோலா இஞ்ஞாசியார் மற்றும் இயேசு சபையினரோடு தொடர்புடைய வரலாற்றுச் சூழல்கள், ஆன்மிகப் பிரதிபலிப்புகள், தியானங்கள் போன்றவற்றை ஒலிப்பதிவாக வழங்கி, உலகெங்கிலும் உள்ள திருப்பயணிகளின் ஆன்மிகப்பயணத்தை வளப்படுத்தும் வகையில் இந்த செயலியானது செயல்பட்டு வருகின்றது.
"இஞ்ஞாசியாரின் ஆன்மிகத்தில் ஆர்வமுள்ள கொரிய கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், திருப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது என்றும், கொரிய மக்களுக்கு இந்த செயலியின் பயன்பாடு இஞ்ஞாசியாரின் ஆன்மிகத்தில் இன்னும் அதிகமாக வளரவும், ஆழப்படவும் உதவும் என்று கூறினார் இயேசுசபை அருள்தந்தை Yong-su Paschal Kim, SJ.
இந்த திருப்பயண செயலியானது தங்கள் மொழிகளில் வேண்டும் என்று சீன மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் பாரம்பரிய சீனமொழியில் செயலியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் இயேசு சபை சீனா மறைமாநிலத்தின் தகவல் தொடர்பு மற்றும் மேம்பாட்டு அலுவலக இயக்குனர் அருள்தந்தை பெட்ரோ சியா.
இஞ்ஞாசியார் ஆன்மிகத்தை நீண்டகாலமாக பின்பற்றுபவர்கள், அல்லது புதிதாக பின்பற்ற விரும்புபவர்கள் என யாராக இருந்தாலும், தூய இஞ்ஞாசியார் சென்ற ஆன்மிகப் பாதைகளை பின்பற்றுவதற்கு உதவியாக “இயேசுசபை திருப்பயணச் செயலி” இருக்கும் என்றும், இதன்வழியாக எல்லைகள் மற்றும் மொழிகளைத் தாண்டிய ஆன்மிகப் பயணத்தை தொடர மக்கள் அழைக்கப்படுகின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளது இயேசு சபை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்