கிறிஸ்தவ பள்ளிகளைப் பாதுகாக்க வங்கதேச தலத்திருஅவை வேண்டுகோள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பதவிநீக்கம் செய்யப்பட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஆதரிப்பதாகக் கூறும் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று சில மாணவக் குழுக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, அந்நாட்டுக் கத்தோலிக்கத் தலத்திருஅவை டாக்காவின் ஒரு பகுதியில் உள்ள அதன் அனைத்து கல்வி நிறுவனங்களையும் காலவரையறையின்றி மூடியுள்ளதாகக் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம்.
இது குறித்து யூகான் செய்தி நிறுவனத்திடம் பேசிய, வங்கதேச கத்தோலிக்கக் கல்விக் குழுமத்தின் செயலாளர் ஜோதி கோம்ஸ் அவர்கள், மாணவர்கள் பள்ளிகளுக்கு குழுவாக வந்து எங்களை மிரட்டுகிறார்கள் என்றும், அவர்கள் எங்கள் நிதிநிலை குறித்து கேள்வியெழுப்புவதுடன், சில ஆசிரியர்களையும் இடைநீக்கம் செய்யக் கோருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 25, இஞ்ஞாயிறன்று அந்நாட்டின் கல்வி ஆலோசகர் பேராசிரியர் வஹிதுதின் மஹ்மூத்து அவர்களுக்கு, டாக்காவின் பேராயர் Bejoy D’Cruze அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், தங்கள் கல்வி நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு வேண்டி, வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அச்செய்தி நிறுவனம் உரைக்கிறது.
முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலை காரணமாக, டாக்காவின் நவாப்கஞ்ச் துணை மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்கரால் நடத்தப்படும் அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் காலவரையறையின்றி மூடுமாறு ஆகஸ்ட் 24, இச்சனிக்கிழமையன்று பேராயர் D’Cruze அவர்கள் அறிவிப்பொன்றை வெளியிட்டதாகவும் மேலும் தெரிவிக்கிறது அச்செய்தி நிறுவனம்.
மேலும், தவறான புரிதல்கள் முடிவுக்கு வந்த பிறகும், இதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் ஒரு தீர்வை எட்டிய பிறகும், கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் எடுத்துக்காட்டுகிறது அச்செய்திக் குறிப்பு.
இதற்கிடையில், கல்வி ஆலோசகர் மஹ்மூத் அவர்கள், மாணவர்களின் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள வேளை, தனிநபர்களை பதவிவிலக கட்டாயப்படுத்துவது கல்வி முறையின் மொத்த வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளதாகவும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்