தடம் தந்த தகைமை : அர்த்தக்சஸ்தா எஸ்ராவுக்கு வழங்கிய ஆவணம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஆண்டவரின் கட்டளைகளைச் சார்ந்த காரியங்களிலும், இஸ்ரயேலரின் சட்டங்களிலும் வல்லுநரான குரு எஸ்ராவிடம் மன்னர் அர்த்தக்சஸ்தா ஆணை ஒன்றை வழங்குகினார். அவ்வாணையில், விண்ணகக் கடவுளுக்கு கோவில் கட்ட அனுமதிப்பதாகவும், மேலும் மன்னராகிய நானும் என் ஆலோசகர்களும் எருசலேமில் வாழும் இஸ்ரயேலின் கடவுளுக்கு நாங்கள் மனமுவந்து ஒப்புக்கொடுத்த பொன்னையும், வெள்ளியையும் எடுத்துச் செல்லவும், மற்றும், பாபிலோன் நாடெங்கும் உமக்குக் கிடைக்கும் பொன்னையும் வெள்ளியையும், அவற்றோடு எருசலேமில் உள்ள தங்கள் கடவுளின் இல்லத்திற்காக ஒப்புக் கொடுக்கும் காணிக்கைகளையும் எடுத்துச் செல்லவும் நாங்கள் அனுமதி அளிக்கிறோம். இப்பணத்தைகொண்டு காளைகளையும், ஆட்டுக்கிடாய்களையும், செம்மறிக் குட்டிகளையும், தானிய, நீர்மப் படையல்களையும் கவனத்துடன் வாங்கி, எருசலேமில் உள்ள உங்கள் கடவுளின் இல்லப்பீடத்தில் காணிக்கையாக்கும் என்று அறிவுறுத்துகிறோம்.
அத்துடன், விண்ணகக் கடவுளின் திருச்சட்ட வல்லுநரும் குருவுமாகிய எஸ்ரா உங்களிடம் கேட்பதையெல்லாம் உடனடியாகக் கொடுக்கவும். அவருக்கு நூறு தாலந்து வெள்ளி, நூறு படி கோதுமை, நூறு குடம் திராட்சை இரசம், நூறு குடம் எண்ணெய் ஆகியவற்றைத் தேவையான அளவு கொடுக்கலாம். நாட்டை ஆளும் மன்னர்மீதும், அவர் மக்கள் மீதும், விண்ணகக் கடவுள் சினம் கொள்ளாதபடி, அவரின் இல்லத்திற்கு, அவர் கட்டளையிட்ட அனைத்தும் கொடுக்கப்பட வேண்டும் என்று மன்னர் அர்த்தக்சஸ்தா என்னும் நான் யூப்ரத்தீசின் அக்கரைப் பகுதியில் உள்ள பொருளாளர்களுக்குக் கட்டளையிடுகிறேன். எஸ்ரா, கடவுள் உமக்குக் கொடுத்துள்ள ஞானத்தின்படி யூப்பிரத்தீசின் அக்கரைப் பகுதியில் வாழும் எல்லா மக்களுக்கும் நீதி வழங்க, உம் கடவுளின் திருச்சட்டத்தை அறிந்தவரான நீதிபதிகளையும், ஆளுநர்களையும் ஏற்படுத்தும்; திருச்சட்டம் அறியாதவர்களுக்கு அதைக் கற்பியும் என்றும் அறிவுரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்