தேடுதல்

திருச்சட்டத்தை மக்கள்முன் எஸ்ரா வாசிக்கிறார் திருச்சட்டத்தை மக்கள்முன் எஸ்ரா வாசிக்கிறார் 

தடம் தந்த தகைமை : திருச்சட்டத்தை மக்கள்முன் எஸ்ரா வாசித்தல்

மக்கள் எல்லாரும் கைகளை உயர்த்தி “ஆமென்! ஆமென்!” என்று பதிலுரைத்தார்கள்; பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அக்காலத்தில், மக்கள் அனைவரும், ஒரே ஆளென, தண்ணீர் வாயிலுக்கு எதிரே இருந்த வளாகத்தில் ஒன்று கூடினர். ஆண்டவர் இஸ்ரயேலுக்குக் கொடுத்த மோசேயின் திருநூலைக் கொண்டுவருமாறு திருநூல் வல்லுநர் எஸ்ராவை வேண்டினர். அவ்வாறே ஏழாம் மாதம் முதல்நாள் குரு எஸ்ரா ஆடவர், பெண்டிர், புரிந்துகொள்ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும் அடங்கிய சபை முன்னிலையில் திருநூலைக் கொண்டு வந்தார். தண்ணீர் வாயிலுக்குமுன் இருந்த வளாகத்தில் காலைமுதல் நண்பகல்வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருநூலுக்குச் செவி கொடுத்தனர்.

திருநூல் வல்லுநரான எஸ்ராவோ இதற்காகச் செய்யப்பட்ட மர மேடையின்மேல் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு அருகே வலப்பக்கத்தில் மத்தித்தியா, சேமா, அனாயா, உரியா, இல்க்கியா, மாசேயா ஆகியோரும், இடப்பக்கத்தில் பெதாயா, மிசாவேல், மல்கியா, ஆசும், அசுபதீனா, செக்கரியா, மெசுல்லாம் ஆகியோரும் நின்று கொண்டிருந்தார்கள். எஸ்ரா மக்களை விட உயரமான இடத்தில் நின்றதால் அவர் திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் அதைப் பார்த்தார்கள்; திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். அப்பொழுது எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார். மக்கள் எல்லாரும் கைகளை உயர்த்தி “ஆமென்! ஆமென்!” என்று பதிலுரைத்தார்கள்; பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 August 2024, 13:23