தேடுதல்

கொண்டாட்டத்தில் இஸ்ரேல் மக்கள் கொண்டாட்டத்தில் இஸ்ரேல் மக்கள்  

தடம் தந்த தகைமை : கூடாரத் திருவிழா!

அவர்கள் ஏழு நாளளவும் திருவிழாக் கொண்டாடினர். சட்ட ஒழுங்கின்படி, எட்டாம் நாள் பெரும் சபையைக் கூட்டினர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருச்சட்டத்தை மக்கள்முன் எஸ்ரா வாசித்த இரண்டாம் நாள், அனைத்து மக்களின் குலத்தலைவர்களும், குருக்களும், லேவியர்களும், திருநூல் வல்லுநரான எஸ்ராவிடம் திருச்சட்டத்தின் சொற்களைக் கற்றுக்கொள்ளக் கூடி வந்தார்கள். அப்பொழுது அவர்கள், “ஏழாம் மாதத் திருவிழாக் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் கூடாரங்களில் தங்கியிருக்க வேண்டும்” என்று ஆண்டவர் மோசே வழியாகத் தந்த கட்டளை திருச்சட்டத்தில் எழுதியிருக்கக் கண்டார்கள். ஆகையால், “திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, கூடாரங்கள் அமைப்பதற்கு மலைகளுக்குச் சென்று ஒலிவக் கிளைகள், காட்டு ஒலிவக் கிளைகள், மிருதுச்செடி கிளைகள், பேரீச்ச ஓலைகள் மற்றும் அடர்ந்த மரக் கிளைகளையும் கொண்டு வாருங்கள்” என்று தங்களுடைய நகரங்கள் எல்லாவற்றிலும் எருசலேமிலும் பறைசாற்றி அறிவிக்கச் செய்தார்கள்.

எனவே மக்கள் புறப்பட்டுச் சென்று, அவற்றைக் கொண்டு வந்தார்கள். ஒவ்வொருவரும், தம் வீட்டின் மேல்மாடியிலும் தங்கள் முற்றங்களிலும், கடவுளின் இல்லமுற்றங்களிலும், தண்ணீர் வாயில் வளாகத்திலும், எப்ராயிம் வாயில் வளாகத்திலும் தமக்குக் கூடாரங்கள் அமைத்துக் கொண்டார்கள். அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த சபையார் அனைவரும் கூடாரங்கள் அமைத்து அக்கூடாரங்களில் தங்கினர். நூனின் மகன் யோசுவாவின் காலத்திலிருந்து அன்றுவரை இஸ்ரயேல் மக்கள் இவ்விதம் செய்ததில்லை. அன்று பெருமகிழ்ச்சி நிலவியது. எஸ்ரா முதல்நாள் தொடங்கிக் கடைசிநாள்வரை கடவுளின் திருச்சட்டநூலை உரக்க வாசித்தார். அவர்கள் ஏழு நாளளவும் திருவிழாக் கொண்டாடினர். சட்ட ஒழுங்கின்படி, எட்டாம் நாள் பெரும் சபையைக் கூட்டினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2024, 13:08