தடம் தந்த தகைமை - அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோல்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு! ஏனெனில் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள் (லூக் 11:52) என கடிந்தார் இயேசு.
திருச்சட்ட அறிஞர்கள் எனத் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட பரிசேயர்கள் தொடக்க நூல் முதல் குறிப்பேடுகள் வரையிலான மறைநூல்களுக்கு விளக்கம் வழங்கும் பழக்கத்தை வழக்கமாக்கியிருந்தனர். அவற்றைப் பொறுப்பாய் செபக்கூடங்களில் போதித்தனர். அவ்வாறு போதிப்பதை எவரும் எக்கேள்வியுமின்றி ஏற்க வேண்டுமென்ற எழுதப்படாத சட்டத்தையும் அவ்வப்போது சுட்டிக் காட்டுவர். அதனை விடுத்து யாரேனும் கேள்வி எழுப்பினால் அவர்களைப் பகை தீர்க்கும் இருள்மனம் கொண்டிருந்தனர். இதுமட்டுமன்றி, தங்களைச் சாராத எவரும் மறைநூல் கற்பதை அவர்கள் விரும்பவுமில்லை. சட்டமும், மறையும் கற்பதற்கான தகுதி தங்களுக்கு மட்டுமே உள்ளதென்ற சித்தாந்தத்தையும் பரப்பிவிட்டனர்.
குருத்துவப் பயிற்சியிலும் உயர் கல்வியிலும் திருஅவையியல், விவிலியம், சட்டம், கிறிஸ்தியல், அறநெறியியல், தத்துவயியல், இறையியல், அருளடையாளங்கள் என ஏராளம் பயின்றுவிட்டு அவற்றை மனித நேயமுடன் அணுகவோ, பயிற்றுவிக்கவோ, பயிற்றுவிக்கும் வழிகளையோ கையாளவில்லையென்றால் ஆண்டுகள் பல கற்று என்ன
பலன்? திரு அவையின் ஏடுகள் இரகசிய பொக்கிஷம் அல்லவே!
இறைவா! கற்றதை வைத்துக் கர்வம் கொள்ளாமல் கனிவின் மனிதனாய்க் காலமும் வாழ வழி தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்