தேடுதல்

தன் சீடர்களுடன் இயேசு தன் சீடர்களுடன் இயேசு 

விடை தேடும் வினாக்கள் - பொறுப்பாளரின் முன்மதி

வேறொருவரின் சொத்துக்கள் என்பது கடவுளால் நம் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட சொத்துக்களே. நமக்குரியது ஒன்றுமில்லை, உலகிலுள்ள அனைத்தும் கடவுளுக்குரியதே.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, இன்றைய நம் ஒலிபரப்பில், லூக்கா நற்செய்தி 16ஆம் பிரிவில் இயேசு கூறிய “முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளர்” என்ற உவமையை எடுத்துரைத்தபின் அவர் கேட்ட இரு கேள்விகள் குறித்து நோக்குவோம்.

நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்? ? (லூக் 16:11,12) என கேட்கிறார் இயேசு.

இந்த கேள்விகளை நாம் புரிந்துகொள்ள வேண்டுமானால், இதற்கு பின்னணியாக இருக்கும் உவமையை முதலில் காண்போம்.

இயேசு தம் சீடருக்குக் கூறியது "செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. தலைவர் அவரைக் கூப்பிட்டு, "உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது" என்று அவரிடம் கூறினார்.

அந்த வீட்டுப் பொறுப்பாளர், "நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே. மண்வெட்டவோ என்னால் இயலாது, இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது, பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்" என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.

பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், "நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?" என்று கேட்டார். அதற்கு அவர், "நூறு குடம் எண்ணெய்" என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், "இதோ உம் கடன் சீட்டு உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்" என்றார். பின்பு அடுத்தவரிடம், "நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?" என்று கேட்டார். அதற்கு அவர், "நூறு மூட்டை கோதுமை" என்றார். அவர், "இதோ, உம் கடன் சீட்டு எண்பது என்று எழுதும்" என்றார்.

நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் "முன்மதியோடு" செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார்.

இதுவரைதான் இயேசுவின் உவமை. இதனைத் தொடர்ந்து வருபவை இயேசுவின் இந்த உவமையிலிருந்து பிறக்கும், அதையொட்டிய போதனை.

இயேசு தொடர்ந்து, ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.

ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள். மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார், எனக்கூறி, அதனைத் தொடர்ந்து நாம் இன்று நோக்கவுள்ள கேள்விகளையும் முன்வைக்கிறார்.

நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?

என்ற கேள்விகளைக் கேட்டபின், “எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது.” என்று முடிக்கிறார் இயேசு.

இயேசு கூறிய இவ்வுவமையில் நாம் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை ஒன்று உள்ளது. இதுவே இவ்வுவமையைப் புரிந்துகொள்வதில் பெரும் சிக்கலாக உள்ளது. நேர்மையற்ற முறையில் நடந்துகொண்ட வீட்டுப் பொறுப்பாளரை அவரது தலைவர் பாராட்டுவதாகக் கூறப்பட்டுள்ளது நமக்கு நெருடலாக இல்லையா?. பாராட்டுவது தலைவர் மட்டுமல்ல, இயேசுவும் அவரது அறிவுத் திறனை, முன்மதியைப் பாராட்டுகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. மேலும், அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயலாற்றியது நமக்கு ஒரு பாடமாக அமையவேண்டும் என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

தலைவர் தன்னை நம்பி ஒப்படைத்த பொறுப்பிலிருந்து அந்த வீட்;டுப் பொறுப்பாளர் தவறுகின்றார். அதற்கான தண்டனையை அனுபவிக்க அவர் மனம் ஏற்கவில்லை. எனவே, அதிலிருந்த தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அநீத செல்வத்தைக் கொண்ட முன்மதியோடு செயல்பட்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்கின்றார். இதில் அவர்  செய்தது நேர்மையற்ற செயல்தானே  என்ற கேள்வி நம் ஒவ்வொருவரிலும் எழுவது இயல்பே. ஆனால், இயேசு, அவர் செய்தது சரியென்று கூறவில்லை. மாறாக, “முன்மதியோடு செயல்பட்டார்” என்பதையே முன்னிறுத்துகின்றார்.

இயேசுவை பின்செல்வோர் எவ்வாறு முன்மதியோடு நடந்து கொள்ள வேண்டும், செயல்பட வேண்டும் என்பதை இங்கே கற்றுத் தருகின்றார். தம் சீடர்களை அனுப்பும்போது கூட, “பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும், புறாக்களைப் போல கபடற்றவர்களாகவும் இருங்கள்” என்று கூறுவதைக் காண்கின்றோம். முன்மதி என்பது காலம், இடம், சூழ்நிலைகளை அறிந்து, உணர்ந்து, நாம் செய்கின்ற செயல்களையும், அவற்றின் விளைவுகளையும் சீர்தூக்கிப் பார்த்து செயல்படுகின்ற முறையைக் குறிக்கும். முன்மதியுடன் செயல்பட அழைக்கிறாரேயொழிய, தவறிழைக்க முன்மதியை பயன்படுத்துவதை அல்ல. மேலும், இயேசுவின் வார்த்தைகளில் இந்த பண்பு நல்ல பண்பாக சுட்டிக்காட்டப்படுவதாகத் தெரியவில்லை. ஏனெனில் ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் முன்மதியுள்ளவர்களாக இருக்கின்றனர் என்று கூறப்படுவது எதிர்மறை அர்த்தத்தைக் கொடுப்பதாகத் தெரிகிறது, மற்றும், இவ்வுலகின் ஆபத்துக்களை காட்டுவது போல உள்ளது.

நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதிலேயே நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை யார் ஒப்படைப்பார் என்ற கேள்வி நம்மை ஆழமாக சிந்திக்க அழைக்கிறது.

உண்மையற்ற வழிகளில் திரட்டிய பணத்திற்கு விதிமுறைகள், ஒழுக்க நெறிகள் என்பவை இல்லை. அந்த பணத்தையே கையாள்வதில் நாம் நம்பத்தகாதவராக இருந்தால் உண்மை செல்வத்தை நம்மை நம்பி யார் கொடுப்பார் என்பது இங்கு புரிகிறது.

இயேசு, வீட்டுப் பொறுப்பாளருடைய முன்மதியைப் பாராட்டுவதாக நமக்குத் தோன்றினாலும் மறைமுகமாக அங்கே ஒரு செய்தியை நமக்குத் தருகிறார். "நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?"என்ற இயேசுவின் வார்த்தைகள் அந்த பணியாளர் நேர்மையற்ற முறையிலே செல்வத்தை சேர்த்துக்கொண்டார் என்ற சிந்தனையைத் தருகிறது. அவர் செய்த தவறுகளின் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக சிலரின் கடன்களை அவர் தள்ளுபடி செய்திருக்கிறார். ஆனால் நாம் அவ்வாறு செய்யலாமா? என்ற கேள்வி இயல்பாக நமக்குள் எழுகிறது.

முதலில் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்வோம்.  நாம் பெற்றுள்ள உடைமைகள் எதுவுமே நமக்குரியவை அல்ல. தலைவராகிய கடவுள் தம் சொத்தாகிய உலகத்தை மனிதர்களின் பொறுப்பில் ஒப்படைத்தார். ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார் (தொடக்கநூல் 15:2). எனவே, உலகில் செல்வராகவும், அறிஞராகவும், வலியவராகவும் வாழ்வோர் அனைவரும் கடவுளின் சொத்துக்குப் பொறுப்பாளர்.

வேறோருவரின் சொத்துக்களை எடுத்து, இல்லாதவர்களுக்கு வழங்கி, தனக்கு நன்மையைப் பெற்றுக்கொள்வதாக இந்த உவமையில் காண்கிறோம். இங்கே, வேறொருவரின் சொத்துக்கள் என்பது கடவுளால் நம் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட சொத்துக்களையே குறிக்கிறது. எனெனில் நமக்குரியது ஒன்றுமில்லை, உலகிலுள்ள அனைத்தும் கடவுளுக்குரியதே. உலகில் கடன்பட்டவர்களாக வாழும் ஏழைகளின் கடனை மன்னிக்கும்போதோ, அல்லது ஏழைகளுக்கு மிகுதியாக உதவி செய்யும்போதோ, கடவுளுக்குரியதையே எடுத்து மனிதன் ஏழைகளுக்கு அளிக்கிறான். இவ்வாறு, அவன் பல நண்பர்களைச் சம்பாதிக்கிறான். இந்த வகையில் உதவிபெற்ற அவனுடைய நண்பர்கள், நீதிபதியாகிய இயேசுவின் முன்னால் அவனுக்கு நற்சான்று அளிப்பார்கள்.

ஆனால், பலரோ கடவுளின் தோட்டமாகிய உலகைப் பண்படுத்துவதற்குப் பதிலாக, கடவுளை மறந்து, தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கடவுளின் சொத்தை தம் சுயநலத்தாலும், பேராசையாலும் புண்படுத்துகின்றனர். அதனைச் சுரண்டி சுரண்டியே செல்வத்தைக் குவிக்கின்றனர். இங்கே, ‘நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்’ என்ற இயேசுவின் வார்த்தைகள் நம் கவனத்தில் கொள்ளத் தக்கவையாக அமைகின்றன. கோடி கோடியாய் சேமித்து வைத்த எத்தனையோ பெரும் பணக்காரர்கள் கொரோனா போன்ற பெருந்தொற்று நோய்களாலும், இயற்கைப் பேரிடர்களாலும், மாரடைப்பாலும் மரணித்துப் போனார்கள் என்பது நமக்குக் காலம் சொல்லும் பாடம். இவ்வுலகில் யாருக்கும் எதுவும் நிரந்தரமில்லை, நாம் சேர்த்துவைத்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒருநாள் நாம் போய்விடுவோம் என்பதை உணர்ந்துகொள்ளும்போதுதான், ஒருசிலர் மட்டுமே தாங்கள் வைத்திருக்கும் செல்வத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள முன்வருகிறார்கள். நாம் குவித்து வைத்திருக்கும் செல்வத்தால் எப்பயனும் ஏற்படப் போவதில்லை, மாறாக, அவற்றைப் பிறரோடுப் பகிர்ந்துகொள்ளும்போதுதான் அவற்றின் உண்மைப் பயன் வெளிப்படும்.

நாமோ, கடவுளின் சட்டத்தைக் குறித்துச் சிறிதும் கவலைப்படாமல், ஒதுக்கப்பட்டவர்களையும் ஏழைகளையும் தவிர்க்கிறோம். அவர்களோ இன்னலுற்று இறக்கிறார்கள். இறந்துகொண்டிருக்கும் ஒரு மனிதனின் அனுபவங்களையும், உவமையில் தலைவரால் வெளியேற்றப்பட்ட பொறுப்பாளரின் அனுவங்களையும் இப்போது நாம் கவனத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நம் ஒவ்வொருவர் வாழ்வின் முடிவும் இந்த நேர்மையற்ற பொறுப்பாளரைப்போலவே இருக்கிறது என்று அறியலாம்.

இறக்கப்போகும் மனிதன், தன் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைப்பதைப் போலவே. பொறுப்பாளரும் தன் சாவிகளைத் தலைவரிடம் ஒப்படைக்கிறார். இறக்கும் மனிதன் உலகைவிட்டு வெளியே தள்ளப்படுவதைப் போலவே, பொறுப்பாளர் தோட்டத்தைவிட்டு, வெளியே தள்ளப்படுகிறார். திராட்சைத் தோட்டம், வயல்கள், வீடுகள் அனைத்திலிருந்தும் பிரிகிறார். இணைபிரியாத அவனுடைய சொத்துக்களையும், தானியக் கிடங்குகளையும் விட்டு வெகுதூரம் விலக்கப்படுகிறார்.

உலகில் பிறக்கும் நாம் அனைவருமே உலகம் என்ற வீட்டின் பொறுப்பாளர்கள். அந்த வீட்டுக்கு உடமையாளர் கடவுள். இந்த வீட்டுக்கு நாம் உரிமையாளர்கள் அல்ல. இந்த அடிப்படை உண்மையை மறந்துவிடுவதால், நமக்குள் உருவாகும் பிரச்சனைகள், தனிமனித வாழ்வில் ஆரம்பித்து, குடும்பங்களில் குழப்பத்தை உருவாக்கி, உலக நாடுகளிடையே போர்களாக வளர்ந்து நம்மை வாட்டுகின்றன. நம் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்தப் பூமியை நாடுகளாகக் கூறுபோட்டு ஒவ்வொருவரும் உரிமை கொண்டாட முயல்கிறோம். நாடுகளுக்கு இடையிலும், ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் உரிமையாளர்கள் என்ற மமதை எல்லை மீறி வளரும்போது, அநீதமான குறுக்கு வழிகளும், ஏமாற்று வித்தைகளும், வன்முறைகளும் வெடிக்கின்றன.

நேர்மையற்ற விதத்தில் நடந்த வீட்டுப் பொறுப்பாளர் 'முன்மதியோடு' செயல்பட்டார் என்றால் (லூக் 16:8), இவ்வுலகச் செல்வங்களைப் பயன்படுத்தும் நாமும் முன்மதியோடு செயல்பட வேண்டும் என இயேசு கற்பிக்கிறார். கடவுள் கொடுத்த செல்வம் கொண்டு ஏழைகளை நண்பர்களாக்கிக் கொள்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 August 2024, 14:16