தேடுதல்

இயேசுவின் தோற்ற மாற்றம் நிகழ்வு இயேசுவின் தோற்ற மாற்றம் நிகழ்வு 

தடம் தந்த தகைமை - எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்

இறையாட்சி எனும் இலட்சியப் பணியில் தடைகள், சவால்கள், எதிர்ப்புகள், மலைபோல எழும். துவளாமல் இன்னும் மிகுந்த எழுச்சியோடு துணிந்து பணியாற்றுதலே இயேசுவை பின்தொடர்வோரின் பணியழகு.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

தோற்றமாற்ற நிகழ்வுக்குப் பின் சீடர்களிடம் இயேசு, எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள் என உரைக்கிறார்.

நம் கடவுள் நம்பிக்கைக்குரியவர். தம் மக்கள் வேதனையிலும், சோதனையிலும், நோயிலும், அடிமைத்தனத்திலும் சிக்குண்டு சோர்ந்திருந்தபோதெல்லாம் அச்சமகற்றி ஆறுதலளித்து, ஆற்றுப்படுத்தி, அரவணைப்பவராகவே வெளிப்படுகின்றார். இயேசுவின் தோற்ற மாறுதல் நிகழ்வு உடன் சென்ற சீடர்கள் மூவரையும் அச்சம், அதிர்ச்சி, ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அடுத்து என்னவோ என்ற பீதியில் உறைந்திருந்தனர். அதிர்ந்து போன சீடர்களுக்கு அமைதி அளிக்கும் நோக்கத்தில் இயேசு உதிர்த்த வார்த்தைகளே இவை.

பழைய ஏற்பாட்டில் மலை இறை உறைவிடமாக, இறையனுபவ இடமாக, இறை மனிதச் சந்திப்புத் தளமாகக் கருதப்பட்டது (விப 19:16-24). அதன் பின்புலத்தில் நிகழ்வேறிய இயேசுவின் தோற்ற மாற்றத்தால் பதற்றப்பட்ட சீடர்களைத் தேற்றுவதும் இயேசுவின் பணியானது. இறையாட்சி எனும் இலட்சியப் பணியில் ஒன்றுபட்டு உழைக்கையில் தடைகள், சவால்கள், எதிர்ப்புகள், மலைபோல எழும். எதுதான் வரினும் துவளாமல் இன்னும் மிகுந்த எழுச்சியோடு துணிந்து பணியாற்றுதலே இயேசுவை உண்மையாகப் பின்தொடர்வோரின் பணியழகு. நம் பயங்களில் பாதி ஆதாரமற்றவை, மறுபாதி நம்பத்தகாதவை.

இறைவா! அஞ்சாமல் அறப்பணிகள் தொடர்வது ஆன்மிக முதிர்வின் அடையாளம் என நம்பிப் பணிகள் தொடர பலம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2024, 12:34