தேடுதல்

சக மனிதனுக்குச் செய்வது இறைவனுக்கேச் செய்வதாகும் சக மனிதனுக்குச் செய்வது இறைவனுக்கேச் செய்வதாகும் 

தடம் தந்த தகைமை - காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த....

அடுத்து வாழ்வோரைப் பகைத்து, பழித்து அல்லது பாராமுகமாக இருந்துவிட்டு, பலிபீடத்தின் பக்கத்தில் வந்து நின்று வழங்கும் எப்பலிப்பொருளும் பாசாங்கு.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள்மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். (மத் 5:23&24) என்கிறார் இயேசு.

கடவுள் நல்ல நல்ல விலையுயர்ந்த பொருட்களை அல்ல, நல்ல உறவு வாழ்வையே நம்மிடம் விரும்புகிறார். அடுத்து வாழ்வோரைப் பகைத்து, பழித்து அல்லது பாராமுகமாக இருந்துவிட்டு, பலிபீடத்தின் பக்கத்தில் வந்து நின்று வழங்கும் எப்பலிப்பொருளும் பாசாங்கு. கடமைக்காகக் காணிக்கை செலுத்துவதை கடவுள் விரும்பவில்லை. நம் வழிபாடும் அதில் செலுத்தும் காணிக்கைகளும் தியாகம், கரிசனை, நல்லுறவு, நல்வாழ்வு என்பனவற்றின் அடையாளங்களாக அமைதல் வேண்டும்.

நம் வழிபாடுகள் பொருள் சார்ந்தவையோ, இடம் சார்ந்தவையோ அல்ல. அவை முழுக்க, முழுக்க உள்ளமும் உறவும் சார்ந்தவை. கோயில் செல்லுமுன் வீட்டிலோ, வெளியிலோ சண்டையிட்டுக் கொண்டு வழிபாட்டில் உத்தம வேடமிட்டு,  பலரும் பார்க்கக் காணிக்கைச் செலுத்தி, மீண்டும் வந்து, விட்ட சண்டையைத் தொடரும் கபட வாழ்வை இயேசு கடுமையாக எச்சரிக்கின்றார். அக்காணிக்கையைக் கடவுள் ஓரக்கண்ணாலும் பார்ப்பதில்லை. நன்மனதோடு வாழ்வதும், அவ்வாழ்வைப் பகிர்வதுமே நல்ல காணிக்கை.

இறைவா! பகையற்றப் பாசவாழ்வை பலியாக்கும் பண்பை வரமாய் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 August 2024, 14:06