லெபனோன்வாழ் பிலிப்பீன்ஸ் மக்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப........
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இஸ்ரேலுக்கும், லெபனோனைத் தளமாகக் கொண்ட போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், லெபனோனில் உள்ள ஆயிரக்கணக்கான பிலிப்பீன்ஸ் வெளிநாட்டவர்கள் அரசின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இல்லம் திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார் ஆன்டிபோலோவின் ஆயரும் புலம்பெயர்வோர் மற்றும் இடம்பெயர்வோரின் மேய்ப்புப் பணிக்கான ஆயர் பணிக்குழுவின் தேசியத் தலைவருமான ரூபர்ட் சாண்தோஸ்.
உங்கள் பாதுகாப்பிற்காகத் தயவு கூர்ந்து பிலிப்பீன்ஸ் அரசின் வழிகாட்டுதல்களைத் தொடர்ந்துப் பின்பற்றுங்கள் என்று ஆயர் சாண்தோஸ் அவர்கள் அம்மக்களிடம் அறிவுறுத்தியதாக ஆகஸ்ட் 19, இத்திங்களன்று வெளியான அந்நாட்டு ஆயர் பேரவையின் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
லெபனோனில் உள்ள பிலிப்பீன்ஸ் குடியேற்றத்தாரர்கள், தாங்கள் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பப்படுவதை உறுதிப்படுத்த அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஆயர் சாண்தோஸ் அவர்கள், இறை நம்பிக்கையில் தளராதிருங்கள் என்றும், விரைவில், நீங்கள் அனைவரும் அமைதியுடன் உங்கள் குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைவீர்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிலிப்பீன்சிஸ் மக்கள் அனைவரும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக இறைவேண்டல் செய்து வருவதாகக் கூறியுள்ள ஆயர் சாண்தோஸ் அவர்கள், கவலை வேண்டாம், நீங்கள் தனியாக இல்லை, ஒட்டுமொத்த தேசமும் உங்களுடன் நிற்கிறது என்று அவர்களுக்கு உற்சாக வார்த்தைகளை வழங்கியுள்ளார்.
லெபனோனில் உள்ள 11,000 பிலிப்பீன்ஸ் மக்களில் ஏறத்தாழ 1,000 பேர் மட்டுமே தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், காசாவில் இருந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மொத்தம் உள்ள 137 பேரில் 136 பேரை பிலிப்பீன்ஸ் அனுப்பியுள்ளதாகவும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பணி சம்மந்தமான புள்ளிவிவரங்களின்படி, 2023-ஆம் ஆண்டில் ஏறத்தாழ ஒரு கோடியே 20 இலட்சம் பிலிப்பீன்ஸ் தொழிலாளர்கள் (OFWs) பல்வேறு நாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தில் வெளிநாட்டு பிலிப்பீன்ஸ் தொழிலாளர்கள் (OFWs) பணம் அனுப்புதல் முக்கிய பங்கு வகிக்கிறது.
11 கோடியே 91 இலட்சம் மக்கள்தொகையைக் கொண்ட பிலிப்பீன்சில் கத்தோலிக்கர் பெரும்பான்மையினராக உள்ளனர். (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்