தேடுதல்

வயநாடு நிலச்சரிவு பாதிப்புகள் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகள்  

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காரித்தாஸ் உதவி!

கேரளாவின் வடக்கு மாவட்டமான வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30, செவ்வாயன்று ஏற்பட்ட நிலச்சரிவுக்குப் பிறகு 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தியாவின் கேரளாவிலுள்ள வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால மறுவாழ்வு உதவிகளை இந்திய காரித்தாஸ் அமைப்பு வழங்கி வருகின்றது என்று அதன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகக் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம்.

உடனடி மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளுடன் மறுவாழ்வுக்கான உதவிகளை செய்வதில் நாங்கள் இப்போது அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என்று கேரளாவில் உள்ள இந்திய காரித்தாஸ் அமைப்பின் திட்ட உதவியாளர் அபீஷ் அந்தோணி அவர்கள் ஆகஸ்ட் 14, இப்புதனன்று அச்செய்தி நிறுவனத்திடம் கூறியதாகவும் உரைக்கிறது.

ஜூலை 30, செவ்வாயன்று நிகழ்ந்த இந்த இயற்கைப்பேரிடற்குப் பிறகு, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி மற்றும் கோழிக்கோடு மறைமாவட்டங்களைச் சேர்ந்த தங்கள் துணையாளர்கள், மீட்புப் பணிகளில் உதவவும், மறுவாழ்வுக்கான உதவிகளை வழங்கவும் மேப்பாடி வனப்பகுதிக்கு விரைந்தனர் என்றும் அச்செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார் அந்தோணி.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடைகள், சமையல் பாத்திரங்கள், குடிநீர் மற்றும் நலவாழ்வு பொருட்களை விநியோகிக்கும் பணியில் எங்கள் குழு ஈடுபட்டுள்ளது என்று கூறியுள்ள அந்தோணி அவர்கள், தாங்கள் 525 குடும்பங்களுக்குத் தண்ணீர் மற்றும் நல உதவிகளை வழங்குவதில் ஆதரவளிப்பதாகவும்,  பெண்கள், கைக்குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நேரடி பணப் பரிமாற்றங்களை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 4, ஞாயிறன்று, தங்கள் குழு ஒரு கள ஆய்வை நடத்தியது என்றும், மேலும் இந்நிலச்சரிவில் தப்பி உயிர் பிழைத்தவர்களுக்கு உளவியல் ஆதரவு மிகவும் தேவைப்படுவதால், அவர்களுக்கு ஆலோசனை வழங்கத் தொடங்கியுள்ளோம் என்றும் இந்திய காரித்தாஸ் அமைப்பின் துணைத்தலைவர் அந்தோணி பெர்னாண்டஸ் அவர்களும் அச்செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

வயநாடு மாவட்ட அதிகாரிகள் மேப்பாடி பஞ்சாயத்தில் (உள்ளூர் நிர்வாக பிரிவு) மக்களை நிவாரண முகாம்களுக்கு மாற்றியுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் அவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பஞ்சாயத்தில் உள்ள கத்தோலிக்கத் தலத்திருஅவைகள் ஒரு சில நிவாரண முகாம்களை தொடங்கி நடத்தி வருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 August 2024, 12:59