தேடுதல்

கத்தோலிக்க அமைதி மன்றத்தின் பங்கேற்பாளர்கள் கத்தோலிக்க அமைதி மன்றத்தின் பங்கேற்பாளர்கள்  

வடகிழக்கு ஆசியாவில் அமைதி நிலவிட கத்தோலிக்க மன்றம் அழைப்பு!

இதுபோன்ற மனித அவலங்களை எதிர்கொள்ளும் போது அணு ஆயுதங்கள் வழியாகப் பாதுகாப்பை நம்பும் மற்றும் ஊக்குவிக்கும் அரசியல் தலைவர்கள் சாதாரண சிந்தனையற்ற, மதியற்றதனத்தின் கைதிகளாக மட்டுமே பார்க்கப்பட முடியும் : ஓய்வுபெற்ற ஆயர் காங்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜப்பானில் நடைபெற்ற மூன்று நாடுகளின் கத்தோலிக்க அமைதிக் கூட்டம் வடகிழக்கு ஆசியாவில் இராணுவமயமாக்கல் மற்றும் அணு ஆயுதப் போட்டியை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 10, சனிக்கிழமையன்று, கூட்டாக வெளியிடப்பட்ட ஒரு செய்தி அறிக்கையில், நாகசாகியில் உள்ள கத்தோலிக்க அமைதி மன்றத்தின் பங்கேற்பாளர்கள் வடகிழக்கு ஆசியாவில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கோரும் "அமைதிக்கான நாகசாகி வேண்டுகோளை" வெளியிட்டதாகவும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.

இம்மன்றத்தில் சிறப்புரை ஆற்றிய Pax Christi Korea (PCK) என்ற அமைப்பின் துணைத் தலைவரும், ஓய்வுபெற்ற ஆயருமான Peter Kang U-il அவர்கள், இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது நடத்தப்பட்ட அணுகுண்டுத் தாக்குதல்களை நினைவு கூர்வதாகவும், மேலும் இராணுவமயமாக்கலைக் கண்டிக்குமாறு கிறிஸ்தவர்களை வலியுறுத்துவதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற மனித அவலங்களை எதிர்கொள்ளும் போது அணு ஆயுதங்கள் வழியாகப் பாதுகாப்பை நம்பும் மற்றும் ஊக்குவிக்கும் அரசியல் தலைவர்கள் சாதாரண சிந்தனையற்ற, மதியற்றதனத்தின் கைதிகளாக மட்டுமே பார்க்கப்பட முடியும் என்றும் கூறினார் ஆயர் காங்.

கிறிஸ்துவின் அமைதியை அறிந்து அதனைக் கடைப்பிடிக்கும் கிறிஸ்தவர்கள், இதுபோன்ற பொய்த்தோற்றங்கள் மற்றும் நம்பிக்கைகளை தொடர்ந்து விமர்சிப்பது மற்றும் கவனத்தை ஈர்ப்பது அவர்கள் விழித்தெழுவதற்குதான் என்றும் வலியுறுத்திக் கூறினார் ஆயர் காங்.

"அணு ஆயுதம் இல்லாத உலகத்திற்கான நாகசாகி கத்தோலிக்க அமைதி மன்றம்" என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு இடம்பெற்ற மன்றத்தில், ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்காவிலிருந்து 40-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நாகசாகி, ஹிரோஷிமா மற்றும் சான்டா ஃபே (Santa Fe) மறைமாவட்டங்களின் ஆயர்களும் இம்மன்றத்தில் பங்கேற்றவர்களில் முக்கியமானவர்கள். இந்தக் கத்தோலிக்க அமைதி மன்றக் கூட்டம் ஜப்பானில் நிகழ்ந்த அணுகுண்டு தாக்குதலின் 79-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 August 2024, 12:37