தேடுதல்

சான் எஜிதியோ அமைப்பு சான் எஜிதியோ அமைப்பு 

இத்தாலியில் ‘மத்திய ஆகஸ்ட் ஒருமைப்பாடு’ என்ற பிறரன்பு திட்டம்

கோடைகாலத்தின் கடும் வெப்பத்தையும், தனிமையையும் அனுபவிக்கும் வறியோருக்கு இத்தாலிய நகர்களில் ஆகஸ்ட் 15ல் மதிய விருந்து வழங்கும் சான் எஜிதியோ அமைப்பு.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலகில் போர்கள் அதிகரித்துவரும் இந்நாட்களில், இத்தாலியில் வாழும் புலம்பெயர்ந்தோர், தனிமையில் வாடும் முதியோர், வீடற்றோர் என உதவி தேவைப்படும் மக்களுக்கென ‘மத்திய ஆகஸ்ட் ஒருமைப்பாடு’ என்ற பிறரன்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளது கத்தோலிக்க அமைப்பான சான் எஜிதியோ.

கோடைகாலத்தின் கடும் வெப்பத்தையும், தனிமையையும் அனுபவிக்கும் வறியோருக்கு நட்பின் தேவை முக்கியமானது எனக் கூறும் சான் எஜிதியோ அமைப்பு, இத்தாலியின் தலைநகர் உட்பட பல நகரங்களில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஏழைகளுக்கு மதிய விருந்து வழங்க உள்ளதாக தெரிவிக்கிறது.

முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் கைவிடப்பட்டோருக்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி விருந்தின் இறுதியில் அனைவருக்கும் தர்ப்பூசணி வழங்கும் விழாவும் இடம்பெறும்.

இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சிறைக்கைதிகள் பயனடையும் வண்ணம் உரோம் நகரில் உள்ள சிறைகளுக்கு  தர்ப்பூசணிகளை பெரும் அளவில் வழங்க உள்ளது சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு.

இது தவிர, 14ஆம் தேதி மாலையில், உரோம் நகரில் வருமானம் இன்றி துன்புறும் இத்தாலியக் குடும்பங்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது இந்த அமைப்பு.

இத்தாலிய தலைநகர் உரோம், மேலும் மிலான், ஜெனோவா, பாதுவா, நேப்பிள்ஸ் உட்பட பல நகர்களில் ஏழைகளுக்கு ‘மத்திய ஆகஸ்ட் ஒருமைப்பட்டு’ உணவு வழங்கும் நிகழ்ச்சியை நடத்த உள்ளது சான் எஜிதியோ அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2024, 15:21