தேடுதல்

Iமணிப்பூரில் அமைதி வேண்டி கிறிஸ்தவர்கள் ஊர்வலம் Iமணிப்பூரில் அமைதி வேண்டி கிறிஸ்தவர்கள் ஊர்வலம்   (AFP or licensors)

மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்துவதில் இளையோர்மீது தலத் திருஅவை நம்பிக்கை!

மணிப்பூரில் நிகழந்த கலவரத்தின்போது இடம்பெயர்ந்த பூர்வகுடி மக்கள் தாயகம் திரும்ப அனுமதிக்கப்படும் போதுதான் நிரந்தர அமைதியை அடைய முடியும் : அருள்பணியாளர் சி.பி. ஆண்டோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் மணிப்பூரில் அமைதியைக் கொண்டுவர உதவும் இளைஞர்களின் முன்முயற்சியை அங்குள்ள பல்வேறு கிறிஸ்தவ திருச்சபைகள் வரவேற்றுள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்செய்தி நிறுவனத்திடம் பேசிய வடகிழக்கு சமூக அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவுனர் மற்றும் முதல்வர் அருள்பணியாளர் சி.பி. ஆண்டோ அவர்கள், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதில் இளைஞர்கள் முக்கியப் பங்காற்ற முடியும் என்று கூறியுள்ளார்.

மோதலில் ஈடுபடும் மிசோரம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் உள்ள குக்கி-சோ பூர்வகுடி கிறிஸ்தவர்கள் மற்றும் இந்து மெய்திகள் சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள், பல பொதுவான விடயங்களைக் கொண்டிருப்பதால் அமைதியை மீட்டெடுக்க அவர்களால் உதவ முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் சி.பி. ஆண்டோ.

ஆகஸ்ட் 27, இச்செவ்வாயன்று, நாகாலாந்தைச் சேர்ந்த 220 இளைஞர்களிடம் அருள்பணியாளர் ஆன்டோ உரையாற்றி, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட முன்வருமாறு அழைப்புப்புவிடுத்தபோது, இளையோர் தங்கள் எதிர்காலத்திற்காக வேறுபாடுகளைக் களைவதற்குத்  தங்கள் பெரியவர்களை நம்ப வைக்கும் திறமையும் விருப்பமும் கொண்டுள்ளனர் என்றும், இடம்பெயர்ந்த பூர்வகுடி மக்கள் தாயகம் திரும்ப அனுமதிக்கப்படும் போதுதான் நிரந்தர அமைதியை அடைய முடியும் என்றும் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.

மணிப்பூரில் இந்த இருசமூகத்தினருக்கு இடையே நிகழ்ந்த மோதலில் ஏறத்தாழ 220 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50,000-க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்தனர். அவர்களில் பெரும்பாலோர் பூர்வகுடி கிறிஸ்தவர்கள். மேலும் வன்முறையில் ஈடுபட்ட கும்பல் 7,000 வீடுகள், 360 வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பிற கிறிஸ்தவ நிறுவனங்களை அழித்து சேதத்திற்குள்ளாக்கியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 August 2024, 12:55