தேடுதல்

கந்தமால் வன்முறையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள் கந்தமால் வன்முறையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள் 

தவறான செய்திகளை, வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்

2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று தொடங்கி ஏழு வாரங்கள் நீடித்த வன்முறையில் ஏறக்குறைய 100 பேர் கொல்லப்பட்டனர், 56,000 பேர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டனர், 6,000 வீடுகள் மற்றும் 300 ஆலயங்கள் அழிக்கப்பட்டன.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கிழக்கிந்திய மாநிலமான ஒடிசாவின் கந்தமாலில் வகுப்புவாத வன்முறைகள் நடைபெறக்கூடும் என்றும் வதந்திகள் பரவி வருவதாகவும் இது தவறான செய்தி, மக்கள் யாரும் இதை நம்ப வேண்டாம் என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது கட்டாக் - புவனேஸ்வர் உயர் மறைமாவட்டம்.

16 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைக் கலவரத்தால் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதையடுத்து இவ்வாண்டும் அதே நாளில் வன்முறை நிகழும் என பரவப்பட்ட வதந்தி பொய்யானது என்று தெரிவித்துள்ளார் அம்மறைமாவட்டத்தின் அருள்பணியாளர் Dibakar Porichha.

உகான் செய்திகளுக்கு கந்தமாலின் தற்போதைய நிலவரம் குறித்து நேர்காணல் அளித்த அருள்பணியாளர் Dibakar Porichha அவர்கள், அதிகரித்து வரும் வதந்திகள் பற்றி முதலமைச்சர், உள்ளூர் அரசியல்தலைவைர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து எடுத்துரைத்துள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து 13 வயது கிறிஸ்தவ சிறுவன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் வெடித்த கலவரமானது, ஏழு வாரங்கள் நீடித்ததில் ஏறக்குறைய 100 பேர் கொல்லப்பட்டனர், 56,000 பேர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டனர், 6,000 வீடுகள் மற்றும் 300 ஆலயங்கள் அழிக்கப்பட்டன.

கிருஷ்ணர் பிறந்தநாளான ஆகஸ்ட் 28 ஆம் நாளை நெருங்கும் போதெல்லாம் இப்பகுதியில் உள்ள கிறிஸ்தவர்களிடையே ஒருவித அமைதியின்மை உள்ளது என்றும், மக்கள் இன்னும் அத்தகைய நிகழ்வில் இருந்து மீண்டு வரவில்லை என்றும் கூறியுள்ளார் ஒடிசாவில் உள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவத் தலைவர் பிரதிமா மின்ஜ்.

எனவே இந்த வதந்தி குறித்து மக்கள் அச்சம் கொள்ளவேண்டாம், கவலையடைய வேண்டாம் என்றும், வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் கட்டாக்-புவனேஸ்வர் மறைமாவட்டம் ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் "இத்தகைய வன்முறை மீண்டும் நிகழாமல் இருக்க கந்தமால் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒடிசா அரசு எடுத்த செயலூக்கமான நடவடிக்கைகளை பாராட்டுகிறோம் என்றும் தெரிவித்துள்ளது கட்டாக்-புவனேஸ்வர் மறைமாவட்டம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 August 2024, 14:24