தேடுதல்

இந்திய கத்தோலிக்க பள்ளி ஒன்றில் இந்திய கத்தோலிக்க பள்ளி ஒன்றில்  (AFP or licensors)

கிறிஸ்தவப் பள்ளிகளில் நியாயமான நியமனங்கள் தேவை:இந்திய நீதிமன்றம்

இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகள் பள்ளிகள் மற்றும் 400 கல்லூரிகள், ஆறு பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆறு மருத்துவப் பள்ளிகள் உட்பட 50,000-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்துகின்றன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சாதி, மற்றும் மதப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் ஆசிரியர்களை நியமிக்குமாறு தமிழகத்தின் திருநெல்வேலி பெந்தக்கோஸ்தெ மறைமாவட்ட திருச்சபைக்கு நீதிமன்றம் கோரிக்கை வைத்துள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

தென்னிந்திய திருச்சபையின் (சிஎஸ்ஐ) திருநெல்வேலி மறைமாவட்டத்தால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் நியமனம் செய்வதற்காகத் தயாரிக்கப்பட்ட வருங்கால ஆசிரியர்களின் பட்டியலை அரசியலமைப்பிற்கு முரணானது என்றும், அது மதச்சார்பின்மை கொள்கைகளை மீறுவதாக உள்ளது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கூறியுள்ளதாகவும் உரைக்கின்றது அச்செய்தி நிறுவனம்.

இன்றைய தேதியில் உள்ள நியமனச் செயல்முறை மிகவும் பாரபட்சமானது என்றும்,  ஒரு குறிப்பிட்ட மதப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர் மட்டுமே பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் என்று கூறுவது அரசியலமைப்பு நெறிமுறைக்கு எதிரானது என்றும் நீதிபதி சுவாமிநாதன் கூறியுள்ளதாகவும் எடுத்துக்காட்டுகிறது அச்செய்திக் குறிப்பு.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அனைத்திந்திய கத்தோலிக்கப் பள்ளிகள் அமைப்பின் முன்னாள் தேசியத் தலைவர் அருள்பணி தங்கச்சன் ஜோஸ் அவர்கள், நீதிமன்றத்தின் இந்த  உத்தரவை 'யோசிக்கப்படவேண்டிய ஒரு விடயம்' என்று கூறியுள்ளதுடன், சிறுபான்மையினரால் நடத்தப்படும் கல்வி நிறுவனம் தனது ஊழியர்களை முன்னுரிமை அடிப்படையில் அந்தந்த சமூகத்தைச் சேர்ந்த பணியாளர்களை நியமிக்க உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை, தகுதியான அல்லது திறமையான விண்ணப்பதாரர் அந்தச் சமூகத்தில் இல்லையென்றால், நாங்கள் வெளியில் இருந்து ஒரு விண்ணப்பதாரரை நியமிக்க முற்படலாம் என்று கூறியுள்ள அருள்பணி ஜோஸ் அவர்கள், ஆனாலும் முன்னுரிமை கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒரு விண்ணப்பதாரருக்கு வழங்கப்படுகிறது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

கத்தோலிக்கப் பள்ளிகள் கத்தோலிக்க அல்லது கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புகளை வழங்குவதில்லை என்றும், எங்கள் சட்டக் குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவுசெய்வோம் என்றும் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் கல்விப் பணிக்குழு அலுவலகத்தின் செயலர், அருள்பணி மரிய சார்லஸ் அவர்களும் யூகான் செய்தி நிறுவனத்திடம் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மறைமாவட்ட பொருளாளர் மனோகர் தங்கராஜ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறுவதை விடுத்து, மறைமாவட்ட முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் ஆயர் ஒருதலைப்பட்சமாக நியமனம் செய்வதாக அம்மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2024, 15:11