கத்தோலிக்க கட்டிடங்களில் புகலிடம் கொடுக்க கேரள ஆயர் அழைப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
கேரளாவின் வயநாடு பகுதியில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நோக்கத்தில் பங்குதளங்களையும் கல்வி நிலையங்களையும் தற்காலிக நிவாரண முகாம்களாக மாற்றுமாறு தன் மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார் காலிகட் மறைமாவட்ட ஆயர் Varghese Chakkalakal.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனைத்து விசுவாசிகளும் இறைவேண்டல் செய்யவேண்டுமென அழைப்புவிடுக்கும் இம்மறைமாவட்டம், உதவி தேவைப்படும் மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு உதவவேண்டிய சரியான நேரம் இதுவே எனவும் தெரிவிக்கிறது.
ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அவையின் புள்ளி விவரங்களின்படி, பாதிப்படைந்த வயநாடு மாவட்டத்தில் இதுவரை குறைந்தபட்சம் 85 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 8,577 மக்கள் புகலிடம் வழங்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த செவ்வாய் கிழமை அதிகாலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை, மேப்பா, சூரல்மலை ஆகிய மூன்று கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த பகுதிகளில் இருந்த ஏராளமான வீடுகள் மழை நீர் மற்றும் சேற்றுடன் அடித்து செல்லப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316ஆக அதிகரித்துள்ளது. 240 பேர் காணாமல் போயுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்