தேடுதல்

கர்தினால் சார்லஸ் மாங் போ கர்தினால் சார்லஸ் மாங் போ 

திருத்தந்தையின் திருவருகை ஆசிய மக்களின் நம்பிக்கையைப் புதுப்பிக்கும்!

அரசியல், பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார சவால்கள் இருந்தபோதிலும், ஆசியாவின் சில பகுதிகளில் கிறிஸ்தவ நம்பிக்கையை வாழ்வது எப்போதும் எளிதல்ல என்பது குறித்தும் துடிப்பான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட திருஅவைகள் குறித்தும் இந்த நேர்காணலின்போது விவரித்துள்ளார் கர்தினால் போ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஆசியாவில் உள்ள தலத்திருஅவைகளின் வாழ்விலும் நம்பிக்கையிலும் ஒரு புதுப்பிப்பைக் கொண்டு வந்து  செழித்தோங்கும் நமது திருஅவையின் உலகிற்கு வாழும் சாட்சிகளாக இருக்க திருத்தந்தையின் வருகை அமையும் என்பது எனது சொந்த நம்பிக்கை என்று தெரிவித்துள்ளார் மியான்மாரின் யாங்கூன் பேராயரும்  ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) தலைவருமான கர்தினால் சார்லஸ் மாங் போ.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை இந்தோனேசியா, பாப்புவா நியூ கினியா, கிழக்கு திமோர், சிங்கப்பூர் ஆகிய ஆசிய நாடுகளுக்குத் தனது 45-வது திருப்பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் வேளை, வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார்  கர்தினால் போ.

ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டங்களில், நமது பல கோவில்கள் நிரம்பி வழிவதைப் பார்க்கும் போது, பிற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்லும் ஆசியர்கள் பலர் தங்கள் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருப்பதை நாம் காண முடியும் என்று கூறியுள்ளார் கர்தினால் போ.

ஆசியாவிற்கான திருத்தந்தையின் வருகை உற்சாகத்தை மட்டுமல்ல, நம்பிக்கையின் மீது புதுப்பிக்கப்பட்ட பேரார்வத்தை உருவாக்குகிறது மற்றும் ஆசிய மக்களுக்கு ஒரு புதிய எதிர்நோக்கை அளிக்கிறது, ஏனென்றால் ஆசிய மக்கள் திருத்தந்தையின் மனதிலிருந்தும் இதயத்திலிருந்தும் வெகு தொலைவில் இல்லை என்பதை இது நிரூபிக்கிறது என்றும் கூறியுள்ளார் கர்தினால் போ.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆசியாவிற்கான இந்த திருத்தூதுப் பயணத்தில், பாப்புவா நியூ கினியா மற்றும் கிழக்கு திமோர் போன்ற உலகத்திற்கு அதிகம் அறியப்படாத சிறிய நாடுகளுக்குச் செல்லத் தேர்ந்தெடுத்துள்ளார் என்று கூறிய கர்தினால் போ அவர்கள்,  திருத்தந்தையை நேரில் பார்ப்பதால் மக்கள் மத்தியில் உற்சாகம் மட்டுமல்ல, தலத்திருஅவைகளின் வாழ்க்கையிலும் நம்பிக்கையிலும் ஒரு புதுப்பித்தல் இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றும் உரைத்துள்ளார்.

ஆசியாவின் தனித்துவம் என்பது கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் மரபுகளின் அடிப்படையில் அதன் பன்முகத்தன்மை ஆகும் என்று சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் போ அவர்கள், பிலிப்பீன்ஸ் மற்றும் கிழக்கு திமோர் தவிர, ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், நம்பிக்கையின் வளர்ச்சியை அவர்களிடத்தில் அதிகம் காண முடிகிறது என்றும், ஆசியாவில் உள்ள தலத்திருஅவைகள் சிறியதாக இருந்தாலும், அவைகள் மிகவும் உயிர்த்துடிப்புடன் இருக்கின்றன என்றும் எடுத்துரைத்துள்ளார்.

ஆசியாவில் உள்ள திருஅவைகளின் மாறும் பன்முகத்தன்மை மற்றும் அதன் மக்களின் நம்பிக்கையை திருத்தந்தை நேரடியாகக் காண்பார் என்றும், பணக்காரர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும், பெரும்பான்மையினராக இருந்தாலும் அல்லது சிறுபான்மையினராக இருந்தாலும், பல்வேறு நாடுகளில் பல்வேறு சவால்கள் இருந்தாலும் மக்களின் நம்பிக்கை உறுதியாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியாவில் நாங்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கவும், உரையாடவும், மதிக்கவும் கற்றுக்கொள்கிறோம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, இன்னல்களும் துயரங்களும் இருந்தபோதிலும் சகோதரர் சகோதரிகளாக எவ்வாறு இணைந்து வாழ்வது என்பதை நாங்கள் கற்றுக்கொண்டுள்ளோம் என்று விளக்கியுள்ள கர்தினால் போ அவர்கள், உரையாடல் வழியாக அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் பாதைகளை அடையமுடியும் என்ற படிப்பினையை ஆசியா உலகளாவிய திருஅவைக்கு வழங்க முடியும் என்று நான் நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

ஆசியா முழுவதும் பல துன்புறுத்தப்பட்ட தலத்திருஅவைகளுக்கு நாங்கள் சாட்சியாக இருக்கிறோம் என்றும், ஆசியாவின் சில பகுதிகளில் கிறிஸ்தவ நம்பிக்கையை வாழ்வது எப்போதும் எளிதானது அல்ல என்றும் எடுத்துக்காட்டியுள்ள கர்தினால் போ அவர்கள், அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சாரம் போன்ற இந்த சவால்கள் இருந்தபோதிலும், விசுவாசிகளின் நம்பிக்கை வெவ்வேறு வழிகளில் மிகவும் உயிர்த்துடிப்புள்ளதாக இருக்கின்றது என்றும் உரைத்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்தத் திருத்தூதுப் பயணம், விசுவாசத்திற்கான ஒரு புதிய பேரார்வத்தை, ஒருவருக்கொருவர் அமைதியாக வாழ்வதற்கும், உடன்பிறந்த உறவில் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வதற்கும் பெரியதொரு திறந்த மனப்பான்மையைக் கொண்டு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் கர்தினால் போ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 August 2024, 14:19