திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 - யூபிலி ஆண்டிற்கான இலச்சினை
மெரினா ராஜ் – வத்திக்கான்
2025 ஆம் ஆண்டிற்கான யூபிலி இலச்சினையை உறுதி செய்வதற்காக 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் போட்டி ஒன்று நடைபெற்றது. உலகம் முழுவதிலுமுள்ள ஒவ்வொருவரும் தத்தமது கைகளால் வரைந்த இலச்சினை ஓவியங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டன. கற்பனை மற்றும் எளிய நம்பிக்கையின் பலனாக அமைந்த அவ்வோவியங்கள் மனதிற்கு நிறைமகிழ்ச்சி அளிப்பதாக இருந்தன. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 ஓவியங்களில் Giacomo Travisani என்பவர் வரைந்துள்ள இலச்சினை படத்தை 2025ம் யூபிலி ஆண்டிற்கான இலச்சினையாகத் தேர்வு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இலச்சினையின் பொருள்
பூமியின் நாற்றிசைகளில் வாழும் அனைத்து மனித குலத்தையும் அடையாளப்படுத்தும் நான்கு மனித உருவங்கள் நான்கு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்த நால்வரும் ஒருவர் மற்றவரை ஒற்றுமை மற்றும் உடன்பிறந்த உணர்வுடன் அரவணைத்து நங்கூரம் கொண்ட சிலுவையைப் பற்றிப் பிடித்து பின்தொடர்வது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. நால்வரின் உருவமும் கடலில் செல்லும் படகின் அமைப்பில் வடிக்கப்பட்டுள்ளன. படகானது திருஅவையையும் நீல நிற அலைகள் உலகின் உறுதியற்ற வலுவற்ற நிலையையும் எடுத்துரைக்கின்றன. அலைகள் சூழ்ந்த கடலில் படகினைப் பாதுக்காக்க சிலுவையானது நங்கூரமாக எதிர்நோக்கின் அடையாளமாகத் திகழ்கின்றது. அலைகள் சூழ்ந்த கடலில் சிலுவையை நம்பிக்கையுடன் பற்றிப் பிடித்து மனித குலமாகிய திருஅவை இயக்கத்தில் இருப்பது போல இந்த இலச்சினை அமைந்துள்ளது. திருப்பயணியின் பயணம் தனிநபர் ஒருவரின் முயற்சி அல்ல; மாறாக, ஒன்றிணைந்த செயல் திறன் என்பதை இப்படம் வர்ணிக்கின்றது. மேலே யூபிலி 2025 என்றும் கீழே எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற ( இலத்தீண் மொழியில் : ‘Peregrinantes in Spem’ பெரேக்ரினாந்தெஸ் இன் ஸ்பெம்) என்னும் மையக்கருத்தும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்