தேடுதல்

கர்தினால் Pierbattista Pizzaballa. கர்தினால் Pierbattista Pizzaballa.  

புனித நாட்டில் அமைதி நிலவ அன்னை மரியாவிடம் வேண்டுவோம்!

ஆகஸ்ட் 15, வியாழன்று, சிறப்பிக்கப்படவிருக்கிற அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவை முன்னிட்டு செய்தியொன்றை வெளியிட்டுள்ள கர்தினால் Pierbattista அவர்கள், போரால் பாதிக்கப்பட்டுள்ள புனித நாட்டில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவிட இறைவேண்டல் செய்ய அழைப்புவிடுத்துள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நாம் வாழும் போர்ச்சூழல் நிறைந்த இந்த நீண்ட இரவில், புனிதமிகு அன்னை மரியாவின் பரிந்துபேசுதல் நம் அனைவருக்கும் மற்றும் முழு உலகிற்கும் ஒளியின் ஒரு பார்வையைத் திறக்கவேண்டுமென நாம் இறைவேண்டல் செய்வோம் என்று கூறியுள்ளார்  எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் Pierbattista Pizzaballa.

ஆகஸ்ட் 15, வியாழன், நாளை சிறப்பிக்கப்படவிருக்கிற அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவை முன்னிட்டு செய்தியொன்றை வெளியிட்டுள்ள கர்தினால் Pizzaballa அவர்கள், இந்நாளில் அன்னை மரியாவை நோக்கி எழுப்பப்படக்கூடிய செபம் ஒன்றையும் அதில் இணைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்தப் பயங்கரமான போர் தொடங்கி பல மாதங்கள் கடந்துவிட்டன என்று அச்செய்தியில் குறிப்பிட்டுள்ள கர்தினால் Pizzaballa அவர்கள், இந்த மோதலால் ஏற்படும் துன்பங்களும், என்ன நடக்கிறது என்ற திகைப்பும் குறையாமல் இருப்பது மட்டுமல்லாமல், வெறுப்பு, மனக்கசப்பு மற்றும் பகையுணர்வு ஆகியவை மீண்டும் மீண்டும் தூண்டப்படுவதாகத் தெரிகிறது என்றும், இது வன்முறையைத் தீவிரப்படுத்தி தீர்வு காண்பதற்கான வாய்ப்பை புறந்தள்ளுகிறது என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

உண்மையில், இத்தகையதொரு சூழலில், இடம்பெற்று வரும் இந்த மோதலுக்கு ஒரு முடிவைக் காண்பது பெருகிய முறையில் கடினமாகி வருகிறது என்றும், அதன் தாக்கம் முன்னெப்போதையும் விட அதிகமாகவும் வேதனையாகவும் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் Pizzaballa.

எவ்வாறாயினும், இந்த நாட்கள் மோதலின் தாக்கத்தை மாற்றுவதற்கு முக்கியமானதாகத் தெரிகிறது என்றும்,  அவற்றில் குறிப்பாக, நம் அன்னை மரியா விண்ணேற்றமடைந்த ஆகஸ்ட் 15-ஆம் நாள் அதற்கானதொரு நம்பிக்கையை நமக்கு அளிப்பதாக உள்ளதும் என்றும் உரைத்துள்ளார் கர்தினால் Pizzaballa.

இந்த நாளில், நற்கருணைக் கொண்டாட்டத்திற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ அல்லது மற்றொரு பொருத்தமான வேளையிலோ அன்னை கன்னி மரியாவிடம் அமைதிக்காகப் பரிந்து பேசுமாறு இறைவேண்டல் செய்வதற்கு அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ளார் கர்தினால் Pizzaballa.

பல்வேறு பங்குத்தளங்களில் உள்ள இறைமக்கள், இருபால் துறவு சபையினர் மற்றும் நம்மிடையே இருக்கும் சில திருப்பயணிகள் கூட அன்னை கன்னி மரியாவிடம் இதே கருதிற்காக ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வார்கள் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார் கர்தினால் Pizzaballa.

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மாலான ஆறுதல்தரும் வார்த்தைகள், உதவிகள், உடனிருப்புகள் ஆகியவற்றை வழங்கியதற்கும் மேலாக நம்மிடம் இன்னும் எஞ்சியிருப்பது இறைவேண்டல் மட்டும்தான் என்று சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் Pizzaballa அவர்கள், அடிக்கடி பேசப்படும் வெறுப்பு வார்த்தைகளின் மத்தியில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் வார்த்தைகளைக் கொண்ட நமது இறைவேண்டலை சமர்ப்பிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்,

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 August 2024, 12:25