நிக்கராகுவாவிலிருந்து உரோமிற்கு அனுப்பப்பட்ட அருள்பணியாளர்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஆகஸ்ட் மாதத்தில் கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த அருள்பணியாளர்களில் 7 பேர் நிக்கராகுவா நாட்டிலிருந்து விடுதலையடைந்து உரோம் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்மையில் நிக்கராகுவாவில் கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த ஏழு அருள்பணியாளர்களான Víctor Godoy, Jairo Pravia, Silvio Romero, Edgar Sacasa, Harvin Torres, Ulises Vega, Marlon Velázquez. ஆகியோர் ஆகஸ்ட் 8 ஆம் நாள் வியாழனன்று மாலை உரோம் நகருக்கு வந்து சேர்ந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மதகல்பா மற்றும் எஸ்தெல்லி மறைமாவட்டங்களைச் சார்ந்த இவ்வருள்பணியாளர்கள் அனைவரும் நிக்கராகுவா அரசால் கைது செய்யப்பட்டு மனாகுவாவில் உள்ள தூய பாத்திமா அன்னை குருத்துவக்கல்லூரியில் சிறைவைக்கப்பட்டிருந்தனர் என்றும், கடந்த புதன்கிழமை இவர்கள் விடுதலை செய்யப்பட்டு உரோம் நகருக்கு நாடுகடத்தப்பட்டனர் என்றும் நிக்கராகுவா செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் கடந்த ஜூலை 26 அன்று கடத்தப்பட்ட எஸ்தெல்லி மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகி அருள்தந்தை Frutos Valle அவர்கள் நாடுகடத்தப்பட்டவர்களில் இல்லை என்பதையும் ஊடக செய்திகள் உறுதிபடுத்தியுள்ளன.
நிக்கராகுவாவில் இதுபோல் அருள்பணியாளர்கள் கடத்தப்பட்டு நாடு கடத்தப்படுவது ஐந்தாவது முறையாகும். கடந்த 2022 அக்டோபர், 2023 பிப்ரவரி, 2023 அக்டோபர், 2024 ஜனவரி என நான்கு முறை கடத்தப்பட்ட அருள்பணியாளர்கள் குழு நாடுகடத்தப்பட்ட நிலையில் 2024 ஆகஸ்ட் ஐந்தாவது முறையாக அருள்பணியாளர்களை நிக்கராகுவா அரசு நாடுகடத்தியுள்ளது.
2024 ஜனவரி மாதத்தில் ஆயர்களான ரோலண்டோ அல்வாரெஸ் மற்றும் இசிடோரோ மோரா நாடுகடத்தப்பட்டு உரோம் நகருக்கு வந்தனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்