மதகல்பாவின் காரித்தாஸ் பணிகளை முடக்கிய நிக்கராகுவா அரசு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நிக்கராகுவாவின் உள்துறை அமைச்சகம் Caritas de Nicaragua-இன் எட்டு கிளைகளில் ஒன்றான மதகல்பாவின் மறைமாவட்ட காரித்தாஸ் அமைப்பின் பணிகளையும் மற்றும் 14 அமைப்புசாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணிகளையும் முடக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் 12, இத்திங்களன்று, வெளியிடப்பட்ட அரசிதழில் உள்துறை அமைச்சர் மரியா அமெலியா கரோனல் அவர்கள், இந்த நடவடிக்கைக்கு மனாகுவாவில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார் என்றும் அச்செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதகல்பாவின் காரித்தாஸ் அமைப்பு, கத்தோலிக்கத் திருஅவையால் நிர்வகிக்கப்படும் சமூக நல மையமாக செயல்படுகிறது. 2009-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி பதிவுசெய்யப்பட்ட இவ்வமைப்பு, சமூகத்தில் மிகவும் பின்தங்கிய ஏழைகளுக்கும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாதவர்களுக்கும் உடல்நலம், கல்வி ஆகியவற்றிக்கு முன்னுரிமை அளிப்பதன் வழியாக, அண்மைய ஆண்டுகளில், மதகல்பாவில் மிகவும் தொலைதூர சமூகங்களின் வளர்ச்சியை மேம்படுத்தி வருகிறது.
அண்மைய வாரங்களில் நிகழ்ந்து வரும் அருள்பணியாளர்களின் தொடர் கைதுகள் மற்றும் வெளியேற்றங்களின் பின்னணியில் காரித்தாஸ் அமைப்பின் பணிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
Matagalpa மற்றும் Estelì மறைமாவட்டங்களின் இரு அருள்பணியாளர்கள் மற்றும் ஒரு மேய்ப்புப்பணி உடனுழைப்பாளரைக் கைது செய்துள்ள நிக்கராகுவா அரசு, ஏற்கனவே இம்மாதம் 8-ஆம் தேதி 7 அருள்பணியாளர்களை நாட்டைவிட்டு வெளியேற்றியது. இந்த 7 அருள்பணியாளர்களும் உரோம் நகர் வந்தடைந்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்