1500 அரசு சாரா உதவி அமைப்புக்களை மூடியுள்ளது நிகரகுவா அரசு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
நிகரகுவா அரசின் மதவிரோதப்போக்குகளின் அடுத்த நடவடிக்கையாக, 1500 அரசு சாரா உதவி அமைப்புக்களை மூட உத்தரவிட்டுள்ளது அரசு.
நிகரகுவா துணை அரசுத்தலைவர் Rosario Murillo அவர்களால் அண்மையில் அறிவிக்கப்பட்டு, தற்போது உள்துறை அமைச்சர் María Amelia Coronel அவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த தடை, 1500 உதவி நிறுவனங்களை மூடியதுடன், அவைகளின் உடைமைகளை அரசு கையகப்படுத்தவும் வழி செய்கிறது.
உதவி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை அவைகள் கடைப்பிடிக்கவில்லை என்ற காரணம் காட்டி அவைகளை மூடியுள்ள அரசு, அவைகளின் அனைத்து சொத்துக்களையும் கையகப்படுத்தியுள்ளது.
உதவி நிறுவனங்கள் தங்கள் நிதி அறிக்கையை ஓராண்டு முதல் 35 ஆண்டுகள் வரை சமர்ப்பிக்க வேண்டும், அதில் வருமானம், செலவினங்கள், பணம் வழங்கியதற்கான இரசீதுகள், நன்கொடை விவரங்கள், நிர்வாகிகள் பட்டியல் போன்றவை அரசிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என பல நிபந்தனைகளை புகுத்தியுள்ளது அரசு.
இந்த நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு 1500 உதவி அமைப்புக்களின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ள அரசு, எல்லா அரசு சாரா நிறுவனங்களும், தங்கள் திட்டத்தை அரசிடம் சமர்ப்பித்து அரசு நிறுவனங்களுடன் இணைந்தே பணியாற்ற வேண்டும் என்ற சட்டத்தையும் அறிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டிலிருந்து நிகரகுவா நாட்டில் இதுவரை 5200க்கும் மேற்பட்ட அரசு சாரா உதவி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதில் பெரும்பான்மையானவை கிறிஸ்தவ உதவி நிறுவனங்களாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்