சிங்கப்பூர் திருத்தூதுப் பயணத்தின் கருப்பொருள் பாடல் வெளியீடு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சிங்கப்பூரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தின் கருப்பொருள் பாடலை வெளியிட்டுள்ளது சிங்கப்பூர் கத்தோலிக்க சமூகம்.
38 ஆண்டுகளுக்குப்பின், அதாவது 1986ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் அவர்கள் சிங்கப்பூரில் திருப்பயணம் மேற்கொண்டபின் தற்போதுதான் ஒரு திருத்தந்தை அந்நாட்டிற்கு திருப்பயணம் மேற்கொள்வதையொட்டி, ‘ஒரே திருஅவை, ஒரே மக்கள்' என்ற தலைப்பில் கருப்பொருள் பாடலை வெளியிட்டுள்ளது சிங்கப்பூர் கத்தோலிக்க சமூகம்.
சிங்கப்பூரின் Mystic Font என்ற இசைக்குழுவை உருவாக்கி வழிநடத்திவரும் Ethan Hsu என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த பாடல், தொடக்க நூல் முதல் புதிய ஏற்பாட்டின் இரண்டாம் ஆதாம் வரையிலான மீட்புப் பயணத்தை விவரிப்பதுடன், இறுதியில் தூய மூவொரு கடவுளின் விவரிப்புடன் நிறைவுறுகிறது.
நாம் ஒரே திருஅவை என்பதையும், இறைவனால் புனிதப்படுத்தப்பட்டு தூய ஆவியாரால் வழிநடத்தப்பட்டு, உலகின் ஒளியாக இருக்க அழைக்கப்படுகிறோம் என்பதையும் வலியுறுத்துவதாக இப்பாடல் இருக்கிறது என்றார் இந்த பாடலை இயற்றிய கத்தோலிக்கரான Hsu.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் ABLE என்ற பிறரன்பு அமைப்பு, சிங்கப்பூர் உயர் மறைமாவட்டத்தின் புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பு போன்றவைகளுக்கு நிதி திரட்டி உதவி வரும் Hsuன் Mystic Font இசைக்குழு, 2020 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, கிறிஸ்தவ நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்து வருகிறது.
இம்மாதம் மத்தியில் வெளியிடப்பட்ட இந்த பாடல், சிங்கப்பூர் மறைமாவட்டத்தின் YouTube பக்கத்தில் காணக்கிடக்கின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்