விவிலியத் தேடல்: திருப்பாடல் 57-2, வன்மம் தவிர்த்து மன்னித்து ஏற்போம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘‘அருளும் இரக்கமும் கொண்ட இறைவன்!’’ என்ற தலைப்பில் 57-வது திருப்பாடலில் முதல் இறைவார்த்தையை மட்டும் குறித்துத் தியானித்தோம். இரக்கம் சுரக்கும் இறைவனின் பிள்ளைகளாகிய நாமும் அவ்வாறே இரக்கம் உடையவர்களாகவும் அதனை நம் செயல்களால் வெளிப்படுத்தக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டுமென இறைவேண்டல் செய்து அப்பகுதியை நிறைவு செய்தோம். இவ்வாரம் இத்திருப்பாடலில் தொடர்ந்து வரும் 2 முதல் 6 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது அவ்வார்த்தைகளை பக்திநிறை மனதுடன் வாசிக்கக் கேட்போம். “உன்னதரான கடவுளை நோக்கி, எனக்காக யாவையும் செய்து முடிக்கும் இறைவனை நோக்கியே நான் மன்றாடுகின்றேன். வானகத்தினின்று அவர் எனக்கு உதவி அனுப்பி என்னைக் காத்தருள்வார்; என்னை நசுக்குவோரை இழிவுப்படுத்துவார். கடவுள் தம் பேரன்பையும் வாக்குப் பிறழாமையையும் வெளிப்படுத்துவார். மனிதரை வெறியோடு விழுங்கும் சிங்கங்கள் போன்றவரிடையே நான் கிடக்கின்றேன்; அவர்களின் பற்கள் ஈட்டியும் அம்பும் போன்றவை; அவர்களின் நா கூர்மையான வாள் போன்றது. கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்த்தப்பெறுவீராக! பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக! நான் நடக்கும் வழியில் எனக்குக் கண்ணி வைக்கின்றனர்; நான் மனம் ஒடிந்து போனேன்; என் பாதையில் குழி வெட்டினர்; அவர்களே அதில் விழுந்தனர்" (வச. 2-6)
நாம் தியானிக்கும் இந்த இறைவார்த்தைகளில் தாவீது எதற்காக இந்த வார்த்தைகளைச் சொல்லி இறைவேண்டல் செய்கிறார் என்பதன் பின்னணியை இப்போது பார்ப்போம். சீபியர் கிபாயாவிலிருந்த சவுலிடம் சென்று, ‘தாவீது எசிமோனுக்கு எதிரே உள்ள அக்கிலா குன்றில் ஒளிந்திருக்கிறான்’ என்று கூறியபோது, சவுல் சீபு பாலைநிலத்தில் தாவீதைத் தேடுவதற்காக இஸ்ரயேலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் அதை நோக்கிப் புறப்பட்டு வருகிறார். இங்கே மன்னர் சவுலின் மனநிலையைப் பாருங்கள். தாவீது ஒரு சாதாரண மனிதர், அதுவும் ஓர் இளைஞர். அவரை ஒரு மாபெரும் எதிரியாகப் சித்தரித்துக்கொண்டு அவர் ஒருவரை கொல்வதற்காக இத்தனை பேரை கூட்டிக்கொண்டு வருகிறார். பெலிஸ்தியர்களின் போர் கோலியாத் ஒட்டுமொத்த இஸ்ரயேல் மக்களுக்கு எதிராகவும், அவர்களின் உரிமைச் சொத்தாகிய யாவே கடவுளுக்கு எதிராகவும் பேசி, சவுலையும் அவரின் மக்கள் அனைவரையும் கொன்றொழிப்பேன் என்று சூளுரைத்தபோது, அவனை எதிர்கொள்ள முடியாமல் ஓடி ஒளிர்ந்தவர்தான் மன்னர் சவுல். ஆனால் இப்போது அவரின் சூரத்தனத்தை பார்த்தீர்களா? தனியொருவனான தாவீதை எதிர்கொள்ள முடியாமல், அவரைக் கொன்றொழிக்க 3000 பேரைக் கூட்டிக்கொண்டு வருகிறார். அப்படியென்றால், தாவீதின்மீது சவுலுக்கு எவ்வளவு வன்மும், கோபவெறியும் காழ்ப்புணர்வும் இருந்திருக்கும் என்பதை நம்மால் நன்கு உணர்ந்துகொள்ள முடிகிறது.
அதேவேளையில் தாவீதிடம் நாம் பார்ப்பது கனிந்த மனம். தான் எதிரியாகக் கருதும் ஒருவன் அழிந்துவிட்டாலே மகிழ்ச்சியடையும் இவ்வுலகில், தன்னைக் கொல்லத் தேடிய மன்னர் சவுல் தனது கரங்களில் இரண்டாம் முறையாக அகப்பட்டும் கூட, அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடும் இரக்கம்மிகு மனம் கொண்டவர்தான் தாவீது. அந்தக் குகையில் என்ன நடக்கிறது என்பதை இப்போது மீண்டும் ஒருமுறை நம் நினைவுக்குக் கொண்டுவருவோம். தாவீது எழுந்து சவுல் பாளையம் இறங்கியிருந்த இடத்திற்கே சென்றார்; சவுலும் அவர் படைத்தலைவனும் நேரின் மகனுமான அப்னேரும் படுத்திருந்த இடத்தைப் பார்த்தார்; சவுல் பாசறையினுள் படுத்திருக்க, அவர்தம் வீரர்கள் அவரைச் சுற்றிலும் படுத்திருந்தனர்.தாவீதும் அபிசாயும் இரவில் அப்பாளையத்திற்குச் சென்றனர்; சவுல் கூடாரத்தினுள் தூங்குவதையும் அவர் தலைமாட்டில் அவருடைய ஈட்டி தலையில் குத்தியிருப்பதையும் கண்டனர்; அப்னேரும் படைவீரர்களும் அவரைச் சுற்றிலும் படுத்து உறங்கினர். அபிசாய் தாவீதிடம், “இந்நாளில் கடவுள் உம் எதிரியை உம்மிடம் ஒப்புவித்துள்ளார்; ஆதலால், இப்பொழுது நான் அவரை ஈட்டியால் இரண்டு முறை குத்தாமல், ஒரே குத்தாய் நிலத்தில் பதிய குத்தப்போகிறேன்” என்றான். ஆனால், தாவீது அபிசாயியை நோக்கி, “அவரைக் கொல்லாதே! ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் கை வைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்?” என்று சொல்லித் தடுத்தார். மேலும், தாவீது, “வாழும் ஆண்டவர்மேல் ஆணை! ஆண்டவரே அவரைக் கொல்லட்டும்; அவர் காலம் நிறைவுற்றுத் தாமாக இறக்கட்டும் அல்லது போரில் சென்று அவர் மடியட்டும்! ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் நான் கை வைக்காதபடி ஆண்டவர் என்னைக் காப்பாராக! எனவே, அவர் தலைமாட்டில் இருக்கும் ஈட்டியையும் தண்ணீர்க் குவளையையும் எடுத்துக்கொண்டு நாம் புறப்படுவோம்” என்றார் (காண்க 1 சாமு 26:7-11). தாவீதின் மனம் எப்படிப்பட்டது என்பதைப் பாருங்கள்! மன்னர் சவுலை கொல்வதற்குக் கிடைத்த வாய்ப்பை வசமாக்கிக்கொள்ளாமல், அவரைப் தப்புவித்துப் பெருமைப்படுகிறார் தாவீது. மேலும் மன்னர் சவுல்தான் தாவீதைத் தனது எதிரியாகப் பார்த்தாரே தவிர, தாவீது சவுலை தனது எதிரியாகக் கனவிலும் நினைக்கவில்லை. ஆக, மன்னர் சவுலுக்குத் தீங்கிழைக்காமல் தன்னைக் கடவுள் காப்பாற்றியதற்காகத்தான் அவரைப் புகழ்ந்தேத்துகின்றார் தாவீது. "கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்; நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்; இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன். உன்னதரான கடவுளை நோக்கி, எனக்காக யாவையும் செய்து முடிக்கும் இறைவனை நோக்கியே நான் மன்றாடுகின்றேன்" என்ற தாவீதின் வார்த்தைகளில் தன்னை எதிரியாகப் பாவிக்கும் மன்னர் சவுலுக்குத் தீங்கிழைக்காமல் இருக்கும் இரக்கம் மிகுந்த மனத்தைத் தரவேண்டும் என்று மான்றாடுவதைக் காணமுடிகிறது. அதுமட்டுமன்றி, தனக்காக எல்லாவற்றையும் செய்து முடிக்கும் கடவுள் தன்னுடன் இருக்கும்போது, தான் ஏன் பிறருக்குத் தீமை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருக்கின்றது. மேலும் "என்னை நசுக்குவோரை இழிவுப்படுத்துவார்" என்ற தாவீதின் வார்த்தை இங்கே கூர்ந்து நோக்கத்தக்கது. காரணம், இந்த நிகழ்விற்குப் பிறகு தாவீது தன்னைக் கொல்லாமல் விட்டுவிட்டதை எண்ணி, “நான் பாவம் செய்துள்ளேன். என் மகன் தாவீதே! திரும்பி வா, என் உயிரை இன்று நீ இவ்வளவு மதித்தபடியால் இனி உனக்கு நான் எத்தீங்கும் செய்யமாட்டேன். இதோ, நான் மூடத்தனமாய் நடந்து பெரும் தவறு இழைக்கிறேன்” (காண்க 1 சாமு 26:21) என்று தாவீதிடம் கதறுவதைப் பார்க்கின்றோம். இது மன்னர் சவுலுக்கு ஓர் இழிநிலைதானே? அதனால்தான் தான் மூடத்தனமாக நடந்துகொண்டதாக தாவீதிடம் கதறுகின்றார் சவுல். மேலும், "அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப ஆண்டவர் உம்மை என்னிடம் ஒப்புவித்தும் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் நான் கை வைக்கவில்லை. இன்று உம் உயிர் என் கண்களில் மிகவும் மதிப்பு மிகுந்ததாக இருந்தது போல் என் உயிரும் ஆண்டவர் கண்களுக்கு அருமையாய் இருப்பதாக! அவரே என்னை எல்லா இக்கட்டிலிருந்தும் விடுவிப்பாராக!” (காண்க 1 சாமு 26:23-24) என்று கூறுகின்றார் தாவீது. இந்த இளம் வயதில், தாவீதுக்கு எவ்வளவு பெரிய மனம் பாருங்கள்! மன்னர் சவுலுக்கு அப்படியே நேரெதிராக நடந்துகொள்கிறார் தாவீது.
மேலும் மன்னர் சவுலும் அவருடன் வந்த 3000 படைவீரர்களும் எவ்வளவு கொடிய மனதுடன் அவரைத் தேடியிருப்பார்கள்? "மனிதரை வெறியோடு விழுங்கும் சிங்கங்கள் போன்றவரிடையே நான் கிடக்கின்றேன்; அவர்களின் பற்கள் ஈட்டியும் அம்பும் போன்றவை; அவர்களின் நா கூர்மையான வாள் போன்றது" என்று கூறும் தாவீதின் வார்த்தைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. அப்படி இருந்தும் கூட, ஆயுதங்களால் தன்னை தீர்த்துக்கட்ட வந்த மன்னர் சவுலையும் அவரது படையினரையும் ஆண்டவரின் அன்புகொண்டு எதிர்கொள்கின்றார் தாவீது. இன்றையச் சூழலில், போர் என்பது மதியற்றதனம் என்றும், ஆயுதங்களால் அல்ல, அன்பால் இவ்வுலகில் அமைதியை விதைப்போம் என்றும் நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அடிக்கடி கூறிவருகின்றார். போரால் மட்டுமல்ல, வன்மம்கொண்டு பிறரை மன்னிக்க மறுக்கும்போதெல்லாம் நம்மிடத்தில் மதியற்றதனம் ஏற்படுகிறது என்பதை உணர்வோம்.
அமெரிக்காவின் ஆர்கென்ஸாஸ் எனுமிடத்தில் சூ நார்டென் எனும் பெண்மணி வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. உயிரை உலுக்கும் அழைப்பு அது. “அப்பாவையும், அம்மாவையும் ஒருவன் சுட்டுக் கொன்றுவிட்டான்” என்ற செய்திகேட்டு அவள் அதிர்ந்து போனாள். வீட்டுக்கு ஓடினாள், கதறினாள், துடித்தாள். நாட்கள் கடந்தன. கொலைகாரன் பிடிபட்டான். கொலைகாரன் மீது சூவுக்கு கடுமையான கோபம். ஆனால் மனதை ஒருமுகப்படுத்தி செபத்தில் நிலைத்திருந்தாள். ஒரு நாள் சிறையில் சென்று கொலைகாரனைப் பார்க்க வேண்டும் எனும் தனது விருப்பத்தைச் சொன்னாள். அனுமதி கிடைத்தது. கொலைகாரன் இருக்கும் சிறைக்குச் சென்றாள். கொலைகாரன் கம்பிகளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான். மிகவும் கரடுமுரடான உருவம் கொண்டிருந்தான் அவன். சூ அவனை நோக்கினாள். சில வினாடிகள் அமைதியாக இருந்தாள். பிறகு அக்கொலைக்காரனிடம், “நான் உன்னை மன்னித்துவிட்டேன். என் பெற்றோரும் தாத்தா பாட்டியும் மன்னிப்பையே எனக்குக் கற்றுத்தந்துள்ளனர். ஆகவே, என்னால் உன்னை வெறுக்க முடியாது” என்று சொல்லி முடிக்கையில் அவள் முகத்தில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தோடியது. கொலைகாரன் திடுக்கிட்டான். நம்ப முடியாமல் அவளைப் பார்த்தான். அவளைச் சுற்றி இருந்தவர்கள் ஒருவேளை இவளுக்கு மனநிலை சரியில்லையோ என சந்தேகித்தனர். ஆனால் எதுவும் பேசாமல் அவள் அமைதியாக அந்த இடம் விட்டு அகன்றாள். அவளுடைய மனதில் சொல்ல முடியாத அளவிற்கு அமைதியும் நிம்மதியும் நிரம்பி வழிந்தது. தாவீது என்ற தனி ஒருவனை பழிதீர்க்க வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்திற்காக மன்னர் சவுல், அவருக்கு உதவியவர்கள் அனைவரையும், குறிப்பாக கடவுளின் குருக்களையும் கொன்றொழித்தார். இத்தனை துரோகச் செயல்களை அவர் செய்தபோதிலும், தாவீது பெருந்தன்மை கொண்டவராக அவரை மன்னித்து ஏற்றார். அதுமட்டுமன்றி, மன்னர் சவுல் போரில் தன்னையே வாளால் மாய்த்துக்கொண்டு இறந்தபோது, ஆண்டவரால் அருள்பொழிவு செய்யப்பட்ட தன் தலைவருக்கு இப்படி நிகழ்ந்துவிட்டதே என்று உள்ளம் குமுறி அழுதார். ஆகவே, பிறரின் பாவங்களையும் துரோகச் செயல்களையும் நாம் பெருந்தன்மையுடன் மன்னித்து ஏற்கும் நல்மனதை நமக்கருளிட இறைவனிடம் இந்நாளில் வேண்டுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்