தேடுதல்

இறைவேண்டல் செய்யும் நபர் இறைவேண்டல் செய்யும் நபர்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 57-3, நம்பகத்தன்மையை நமதாக்குவோம்!

தாவீது அரசரின் வழியில், நமது சொல்லிலும் செயலிலும் நம்பகத்தன்மையை நமதாக்கி நானிலம் செழிக்க வாழ்வோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 57-3, நம்பகத்தன்மையை நமதாக்குவோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘‘வன்மம் தவிர்த்து மன்னித்து ஏற்போம்!’’ என்ற தலைப்பில் 57-வது திருப்பாடலில் 2 முதல் 6 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம்.  போரால் மட்டுமல்ல, வன்மம்கொண்டு பிறரை மன்னிக்க மறுக்கும்போதும் நம்மிடத்தில் மதியற்றதனம் ஏற்படுகிறது என்பதை உணர்ந்துகொள்ள இறைவேண்டல் செய்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 7 முதல் 11 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொணர்வோம். இப்போது அவ்வார்த்தைகளை அமைதி நிறைந்த உள்ளமுடன் வாசிக்கக் கேட்போம். "என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; கடவுளே! என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; நான் பாடுவேன்; உம்மைப் புகழ்ந்து பாடுவேன். என் நெஞ்சே, விழித்தெழு! வீணையே, யாழே, விழித்தெழுங்கள்; வைகறையை நான் விழித்தெழச் செய்வேன். என் தலைவரே! மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்; எல்லா  இனத்தாரிடையேயும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன். ஆண்டவரே! உமது பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது! உமது வாக்குப்பிறழாமை முகில்களைத் தொடுகின்றது! கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்வு பெறுவீராக; பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக” (வச. 7-11).

இத்திருப்பாடலின் இரண்டாவது பகுதியில் (7-11) மகிழ்ச்சியையும் இறைபுகழ்ச்சியையும் வெளிப்படுத்தி இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது. முதலாவதாக, "என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; கடவுளே! என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; நான் பாடுவேன்; உம்மைப் புகழ்ந்து பாடுவேன்" என்கின்றார் தாவீது அரசர். இந்த நெருக்கடியான சூழலில் தான் நம்பியிருக்கும் கடவுள் தன்னை தனது எதிரிகளின் கைகளின்று விடுவிப்பார் என்ற தனது ஆழமான இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாகவே இவ்வாறு கூறுகிறார். அதிலும் குறிப்பாக "என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; கடவுளே! என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது" என்று இரண்டுமுறை குறிப்பிடுகின்றார் தாவீது. அப்படியென்றால், எத்துணை துயரங்களும், வேதனைகளும், கவலைகளும் அவரது உள்ளத்திற்குள் கனன்று கொண்டிருந்திருக்கும் என்பதை நாம் யூகித்துக் கொள்ளலாம். மேலும் இந்த நெருக்கடியான வேளைகளில் அவரது உள்ளம் பெருமளவு பக்குவப்பட்டிருந்தது என்பதும் அவரது இந்த வார்த்தைகளில் வெளிப்படுகிறது. ஆக, தனது உள்ளத்தில் ஏற்பட்டுள்ள இந்த உறுதித்தன்மையாலேயே தான் ஆண்டவரைப் புகழ்ந்துபாடுவதாகவும் உரைக்கின்றார் தாவீது.

ஒரு தந்தை தன் மகனோடு காட்டிற்குள் சென்று, அவன் கண்களைக் கட்டி, தனியாக விட்டுச் சென்றார். அவன் இரவு முழுவதும் கண்கட்டை அவிழ்க்காமல், மறுநாள் சூரியன் உதிக்கும் வரை அங்கிருந்த அடி மரக்கட்டையின் மேல் அமர்ந்திருக்க வேண்டும் என்றும், அவன் உதவிக்கு எவரையும் அழைக்கக் கூடாது. இரவு முழுவதும் இப்படி சமாளித்து விட்டால், அவன் ஆண்மகனாகக் கருதப்படுவான் என்றும், அவனது தந்தை அவனிடம் கூறியிருந்தார். மேலும் அவனுடைய அனுபவத்தை மற்ற நண்பர்கள் யாரிடமும் சொல்லக் கூடாது; ஏனென்றால் ஒவ்வொருவரும் தங்களின் சுய முயற்சியால் ஆண்மகன்களாக ஆக வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார். அச்சிறுவன் மிகவும் பயந்து போயிருந்தான். அவனுக்குப் பல விதமான சத்தங்கள் கேட்டன. கொடிய மிருகங்கள் தன்னைச் சுற்றி இருப்பதாக அவன் நினைத்துக் கொண்டான்; யாராவது வந்து தன்னை துன்புறுத்துவார்களோ என்ற பெரும் அச்சமுடன் அவன் இருந்தான். மேலும் பலத்த காற்றினால் புல் மற்றும் பூமியின் அசைவை உணர்ந்தும் கூட, தன்னுடைய கண்கட்டை அவிழ்க்காமல், அந்த மரக் கட்டையின் மீது உட்கார்ந்து இருந்தான். மறுநாள் சூரியன் உதித்த பிறகு, அவன் தன் கண்கட்டை அவிழ்த்துப் பார்த்தான். தந்தை தன் அருகிலேயே உட்கார்ந்து இருப்பதை அப்போது தான் அவன் அறிந்தான். தந்தை இரவு முழுவதும் தன் மகன் அருகிலேயே அமர்ந்துக் கொண்டு, அவனுக்கு எந்த விதமான தீங்கும் வராமல் பார்த்துக் கொண்டு இருந்தார். தாவீதுக்கும் இத்தகையதொரு அனுபவம்தான் ஏற்பட்டது. இந்தத் திருப்பாடல் முழுவதையும் தியானித்த நாம் கடவுள் தாவீதுமீது கொண்டிருந்த பேரன்பை நன்கு உணர்ந்துகொள்ள முடிகின்றது. பயம், கலக்கம், மனப் போராட்டம், விரக்தி என எல்லாமும் தாவீதிடம் இருந்தது. கண்டிப்பாக அதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், கடவுள் தாவீதைவிட்டு எங்கும் செல்லவில்லை. உற்றதுணையாக அவருடன்தான் இருந்தார். என்னதான் பயத்தில் உறைந்துபோயிருந்தாலும் தனது தந்தை எப்படியும் தன்னைவிட்டுவிட்டு தொலைதூரம் சென்றிருக்கமாட்டார் என்ற நம்பிக்கை நாம் கதையில் பார்த்த அந்தச் சிறுவனின் ஆழ்மனதில் இருந்திருக்குமல்லவா? அதைவிடவும் கூடுதலான இறைநம்பிக்கை நமது தாவீது அரசருக்கும் கட்டாயம் இருந்திருக்கும் என்று நாம் உறுதியாக நம்பலாம் அன்றோ? இந்தவொரு உள்ள உறுதியினாலேயே, "என் நெஞ்சே, விழித்தெழு! வீணையே, யாழே, விழித்தெழுங்கள்; வைகறையை நான் விழித்தெழச் செய்வேன். என் தலைவரே! மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்; எல்லா  இனத்தாரிடையேயும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்" என்று தொடர்ந்து உரைப்பதைப் பார்க்கின்றோம்.

இறுதியாக, "ஆண்டவரே! உமது பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது! உமது வாக்குப்பிறழாமை முகில்களைத் தொடுகின்றது! கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்வு பெறுவீராக; பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக" என்று பாடி இந்தத் திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது அரசர். இங்கே ‘வாக்குப்பிறழாமை’ என்ற ஒரு வார்த்தையை எடுத்துக்காட்டுகின்றார் தாவீது. இதே வார்த்தையை வேறுசில திருப்பாடல்களிலும் பயன்படுத்தியிருக்கிறார். ‘வாக்குப்பிறழாமை’ என்ற சொல் வாக்குத்தவறாமை, சொன்ன சொல் தவறாமை, நம்பகத்தன்மை, பிரமாணிக்கம் உள்ளிட்ட வேறுசில அர்த்தங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கடவுள் எப்போதும் வாக்குப்பிறழாதவர் அல்லது சொன்ன சொல் மாறாதவர் என்பதன் அடிப்படையில்தான் தாவீது இந்த வார்த்தையை இங்குப் பயன்படுத்துகிறார். மேலும், "உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை; உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப் பற்றியும் கூறியிருக்கின்றேன்; உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை" (திபா 40:10) என்று நாற்பதாவது திருப்பாடலிலும் கூறுகின்றார் தாவீது. இன்றைய நம் அரசியவாதிகளிடமும் சரி, ஏன், அர்பணவாழ்வுக்குத் தங்களை முற்றிலும் அர்பணித்துக்கொண்ட நமது தலைவர்களிடமும் சரி, இந்த வாக்குப்பிறழாமை இருக்கின்றதா என்பதை நாம் ஆய்வு செய்து பார்ப்போம். பொதுவாக, அரசியல்வாதிகளிடம்தான் வாக்குப்பிறழாமை என்பது இருக்காது என்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால் இன்று எதிர்பாராதவிதமாக துறவியர் முதற்கொண்டு எல்லோரிடமும் வாக்குப்பிறழாமை இல்லாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கதாக இருக்கின்றது.

ஆபிரகாம் லிங்கனைப் பற்றி நாம் அறிவோம். ஓர் எளிய குடும்பத்திலிருந்து வந்த ஓர் எளிய மனிதர். இறைபக்தி நிறைந்த, மனிதத்தன்மைக் கொண்ட ஒரு மாபெரும் தலைவராகத் திகழ்ந்தார். நான் பெற்ற அத்தனை நல்ல குணங்களுக்கும் என் அன்னைதான் காரணம் என்றும், அவர் எனக்கு ஊட்டிய விவிலிய அறிவும் ஞானமும்தான் என்னுடைய உயர்வுக்குக் காரணம் என்றும் அடிக்கடி மொழிந்தவர். அவருடைய காலத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு கறுப்பின மக்களை அடிமைகளாக கப்பல் கப்பலாகக் கொண்டு வந்து கொட்டுவார்களாம். அப்படி கொண்டுவரப்படும் அம்மக்கள் சந்தையில் பொருள்களை ஏலம்விடுவதுபோல் ஏலம்விடப்பட்டு வெள்ளையின மக்களின் வீடுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்கள் மனிதத்தன்மையற்ற முறையில் நடத்தப்பட்டனர். அவர்கள்மீது எல்லாவிதமான் மனித உரிமை மீறல்களும் நிகழ்த்தப்பட்டன. கேட்பாரற்று, செல்லாக் காசுகளாகிப்போனது அவர்களின் வாழ்வு. இவர்களின் கண்ணீர் கதை ஆபிரகாம் லிங்கனை கறுப்பின மக்களின் விடுதலைக்காக உழைக்கவும், அடிமைத்தனத்தை ஒழிக்கவும் தூண்டியது. இதற்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் அவர். அமெரிக்க மக்களின் அதிபராகி கறுப்பின மக்களை அவர்தம் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று எண்ணி அதிபர் தேர்தல்களில் நின்று பலமுறை தோற்றுப்போனவர். ஆனாலும் விடாது போராடி இறுதியாக வென்று காட்டி அதிபரானார். தான் அமெரிக்காவின் அதிபரானால் தனது முதல் கையெழுத்து அடிமையினத்தை ஒழிப்பதற்கானதாகத்தான் இருக்கும் என்று சூளுரைத்தவர். அவர் சொன்னதுபோலவே செய்தார். அவரது வாக்குப்பிறழாமை கறுப்பின மக்களால் மட்டுமன்று, வெள்ளையினத்து மக்களாலும் இன்றும் போற்றப்படுகிறது. கறுப்பின மக்களுக்கு அவர்தம் அடிமைத்தளையிலிருந்து விடுதலை தரவேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக அமெரிக்காவின் அதிபரான ஆபிரகாம் லிங்கன் அதே நோக்கத்திற்காக வெள்ளையினத்து மனிதர் ஒருவராலேயே கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார். இதே உயர்நோக்கிற்காக உழைத்த மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரும் அவ்வாறே சுட்டுக்கொல்லப்பட்டார். அவ்வாறே, இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காகப் பாடுட்ட நமது தேசத்தந்தை காந்தியடிகளும் நாடு விடுதலை பெற்ற  வேளையில் கோட்சே என்ற இந்துவால் சுட்டுக்கொல்லப்பட்டார். இப்படியாக வாக்குப்பிறழாமையை வாழ்வாக்கிக் கொண்டவர்கள் எல்லாருமே வாழ்விழந்து போனாலும் மக்களின் மனங்களில் இன்றும் வாழ்கின்றனர். மேலும், கடவுளை உண்மையாக அன்புகூர்பவர்கள் அனைவரின் வாக்குப்பிறழாமையும் இன்றளவும் போற்றப்படக்கூடியதாக, மக்களின் மனங்களில் நிலைபெறக் கூடியதாக இருக்கின்றது. இந்தவிதத்தில் நமது தாவீது அரசரும் வாக்குப்பிறழாமல் வாழ்ந்தவர்தான்.

ஆகவே, நமது கிறித்தவ வாழ்வில் நாம் நமது வாக்குப்பிறலாமையில் தவறாது வாழ்கிறோமா என்பதை இக்கணம் சிந்திப்போம். தாவீது அரசரின் வழியில், நமது சொல்லிலும் செயலிலும் நம்பகத்தன்மையை நமதாக்கி நானிலம் செழிக்க வாழ்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2024, 13:11