தேடுதல்

இயேசுவின் பாடுகளைச் சித்தரிக்கும் திறந்தவெளி நாடகம் இயேசுவின் பாடுகளைச் சித்தரிக்கும் திறந்தவெளி நாடகம்  (ANSA)

விடை தேடும் வினாக்கள் - முத்தமிட்டா காட்டிக் கொடுக்கிறாய்?

நெஞ்சை நிமிர்த்திக் காண்பித்தாலும் துரோகி முதுகில்தான் குத்துவான் என்பதை உண்மையாக்கும் விதமாகத்தான், முத்தத்தின் மூலம் காட்டிக்கொடுக்கிறான் யூதாஸ்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான். இயேசு அவனிடம், “யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?” என்றார் (லூக் 22: 47,48).

அன்பு நெஞ்சங்களே, இன்றைய நம் நிகழ்ச்சியில் இயேசுவின், முத்தமிட்டா காட்டிக் கொடுக்கப் போகிறாய்? என்ற கேள்வி குறித்து கொஞ்சம் நோக்குவோம்.

யூதாஸ் இயேசுவை முத்தம் எனும் அன்பின் அடையாளத்தால் காட்டிக் கொடுக்கிறார். அன்பின் அடையாளம், இங்கே மரணத்துக்கான முன்னுரையாய் மாறுகிறது. அன்பைக் காட்டி, மனதின் உள் இருப்பதை மறைக்கிறார் யூதாஸ். வெளிப்படையான செயலோ அன்பின் வடிவம், உள்ளார்ந்த பொருளோ அழிவின் அடையாளம்! இயேசு அந்த வெளிவேடத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். “யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?” எனும் கேள்வியின் வழியாக யூதாசின் உள்ளத்தை வெளிப்படுத்துகிறார்.

இதற்கு முன்னரும் யூதாஸ் செய்யப்போகும் செயலை இயேசு முன்னறிவித்துவிட்டார், அதுவும் சீடர்களின் முன்னிலையில். சீடர்கள் பந்தியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தபொழுது இயேசு, "என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார் (மாற்கு 14:18). இவ்வார்த்தைகள் திருப்பாடல் வரிகளான, "என் உற்ற நண்பன், நான் பெரிதும் நம்பினவன், என் உணவை உண்டவன், எனக்கு இரண்டகமாகத் தம் குதிகாலைத் தூக்குகின்றான்" (திபா 41:9), என்ற வரிகளை நமக்கு நினைவுபடுத்தி நிற்கின்றன.

யூதாசைப்பற்றி புனித யோவான் நற்செய்தி, அவன் ஒரு திருடன் என்று ஏற்கனவே கூறியுள்ளதை நாம் வாசித்திருக்கலாம். ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல, மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக் கொள்வதுண்டு என்று யூதாசின் சுயரூபத்தை வெளிப்படுத்திய ஒரு நிகழ்வை (யோவா 12:4-7) நற்செய்தியில் பார்க்கிறோம். மேலும், மத்தேயு 26:14-16-ல் நாம் காண்பதென்ன?. பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, “இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக் கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?" என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்” என்றுதானே பார்க்கிறோம். என்ன தருவீர்கள் எனக்கேட்டு, காசின் மீது ஆசையை வெளிப்படுத்திய சீடன், பாசம் என்னும் முத்தத்தை பயன்படுத்தி தன் தலைவனையேக் காட்டிக் கொடுக்கிறான்.

முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்? என்ற கேள்வியோடு இயேசுவின் கல்வாரிப் பயணம் துவங்கி விட்டது எனலாம். ஏனெனில், ஏற்கனவே அவரால் அறிவிக்கப்பட்டதுதான் எனினும், இந்த உலகில் எதிரியிடம் தோற்பதை விட நிழல் போல் அருகிலிருந்த துரோகியிடம் தோற்பது எத்தனை வேதனை நிறைந்தது என நமக்கு அது பாடமாகிறது. நெஞ்சை நிமிர்த்திக் காண்பித்தாலும் துரோகி முதுகில்தான் குத்துவான் என்பதை உண்மையாக்கும் விதமாகத்தான், முத்தத்தின் மூலம் காட்டிக்கொடுக்கிறான். நம்பிக்கைத் துரோகம் செய்வது கொலைச் செய்வதற்கு நிகரானது என்று கூறுவர். இங்கோ, உண்மையிலேயே, கொலைக்கு கையளிக்கத்தான் நம்பிக்கைத் துரோகம் செய்கிறான் யூதாஸ்.

அரசியலில் பல ஆண்டுகள் அதிகாரம் செலுத்தி பெரும்பணக்காரராக மாறிய ஒருவரிடம் தோட்டக்காரராக வேலை செய்தார் கேசவன் என்பவர். அவரோடு அதே வீட்டில் மணி என்பவரும் அவர் மனைவியும் சமையல்காரர்களாக இருந்தனர். கூப்பிட்ட நேரத்திற்கு வரவேண்டும் என்பதால் தோட்ட வேலை செய்வோருக்கும், சமையல்காரர்களுக்கும், ஓட்டுனருக்கும் வீடுகள் கட்டிக்கொடுத்து அருகிலேயே வைத்துக்கொண்டார் அரசியல்வாதி. ஒரு நாள் இரவு அரசியல்வாதியின் மனைவி கொலையுண்டார். அன்று அரசியல்வாதி ஊரிலில்லை.  அனைவருக்கும் தெளிவாகத் தெரியும், அக்கொலையைச் செய்தது அரசியல்வாதிதான் என்று. ஆனால், நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை. கொலைக்குற்றம் கேசவன் மீது விழுந்தது. எவ்வளவோப் போராடிப் பார்த்தும் தான் குற்றமற்றவன் என அவனால் நிரூபிக்கமுடியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் சித்ரவதைகள் தாங்கமுடியாமல் தலைமறைவானான். கேசவன் எங்கே என காவல்துறை கொடுமைப்படுத்தியதால் மணியும் தலைமறைவாகி கேசவனுடன் சேர்ந்துகொண்டான். காலங்கள் ஓடத்துவங்கின. ஓராண்டாக இருவரும் மாறுவேடமணிந்து பிறிதொரு மாநிலத்தில் சிறு சிறு வேலைகளைச் செய்தனர்.  காவல்துறையும், கொலையாளி கேசவனைப் பிடித்துக்கொடுக்க உதவுபவர்களுக்கு ஐந்து இலட்சம் பரிசு என அறிவித்தது. இப்போது, பெரும்பாலும் கேசவன் வீட்டிற்குள்ளேயே முடங்க வேண்டியதாகியது. ஒரு நாள் காவல்துறை அவன் வீட்டிற்கு அதிகாலையிலேயே வந்து அவனைக் கைது செய்தது. காவல்துறையைக் கூட்டிவந்தது நண்பன் மணி. நம்பமுடியாமல் திகைத்து நின்றான் கேசவன். கேவலம் ஐந்து இலட்சம் காசுக்காக இவ்வளவு பெரிய துரோகம் இழைத்துவிட்டாயே, நான் கொலை செய்திருந்தால் உன் நம்பிக்கைத் துரோகத்தில் ஒருவித நியாயம் இருக்கும். ஆனால், நான் கொலைச் செய்யவில்லை என்பது உனக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் பணத்திற்காக இத்தகைய துரோகம் செய்துவிட்டாயே என்று அழுதவன், மணியை மீண்டும் நோக்கி, என் கைதின் வழி உன் வாழ்வுக்கு வழி கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியே எனக்கூறி காவலர்களுடன் சென்றான்.

இயேசு, தன் இறுதிப் பயணத்தை கெத்சமனி தோட்டத்தில் இறுதி இரவு உணவுக்குப்பின் துவக்குகிறார். கெத்சமனி தோட்டத்தில் இருந்த அனைத்து ஒலிவ மரங்களுமே இயேசுவை ஆறுதல் படுத்த முடியவில்லை. பூமியில் முகம் புதைத்து விழுந்து கிடந்த அவரது நிலை, பார்ப்பவர் எவரையும் நிலைகுலையச் செய்துவிடும். கடந்த மூன்றாண்டுகளாக அவர் நடந்துசென்ற பாதையில் வழிநெடுக அவர் வார்த்தைகளைக் கேட்க பின்தொடர்ந்த மக்கள் கூட்டத்தையும்,  கடந்து சென்ற பாதையெல்லாம் அன்பு, உதவிகள், மன்னிப்பு,  புதுமைகள் என்பவைகளையும் எண்ணிப் பார்க்கிறார். ஆனால், அந்த பாதை, இறுதியில் அவரை எங்கு இட்டுச் சென்றது?     “இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும்” என்ற தன் தந்தையை நோக்கி கதறிய ஒரு பரிதாபத்துக்குரிய மனிதரைக் காண முடிகிறது.  ஒரே வார்த்தையில் கடலின் சீற்றத்தையும், புயல் காற்றையும் அடக்கி அமைதி ஏற்படுத்தியவர் மனதிற்குள் புயல் தாக்குதலை உணர்கிறார். அந்த மனப்போராட்டத்தையும், “உம் விருப்பப்படியே நிகழட்டும்” என்று தன் தந்தையிடம் கூறி அடக்கினார்.

அந்த இரவில் நாம் இரண்டு முத்தங்களை விவிலியத்தில் காண்கிறோம்.  இரண்டும் முற்றிலும் முரண்பாடானவை.  ஒன்று தாழ்ச்சியின் அடையாளம், அன்பின் அடையாளம். மற்றொன்றோ துரோகத்தின் மற்றும் சுயநலத்தின் வெளிப்பாடு.  ஒன்று, இயேசு தன் சீடர்களின் பாதங்களைக் கழுவிக் கொடுத்தது என்றால், மற்றதோ தன் சீடருள் ஒருவர் நம்பிக்கைத் துரோகமாக வழங்கியது. ஒன்றை வழங்கியபின் அவர், “ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்” என்கிறார். மற்றொன்றிலோ, முத்தமிட நெருங்கும்போதே, “யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?” என கேட்கிறார். ஒன்றை அன்பின் வெளிப்பாடு என்கிறார். மற்றொன்றை துரோகத்தின் செயல்பாடாகப் பார்க்கிறோம்.

நம்மைக் குறித்து கொஞ்சம் எண்ணிப் பார்ப்போம். நம் வாழ்வில் நாம் இதுவரை ஆற்றியுள்ள செயல்கள் யாவும், அன்பின் வெளிப்பாடுகளா, அல்லது துரோகத்தின் செயல்பாடுகளா?. தாழ்ந்து பணிந்து நின்று, துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு, பிறர் பணி செய்ய தயாராக இருக்கின்றோமா, அல்லது முகத்தில் புன்னகைத் தடவி, பிறரை ஏமாற்றும் கபட நாடகம் போடுகிறோமா?. நாம் கிறிஸ்து அவராக வாழ்கிறோமா, அல்லது, யூதாஸைப் போன்ற வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வருகிறோமா? என்பதை சிந்திப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2024, 13:43