தேடுதல்

தந்தை, மகன், தூய ஆவியார் தந்தை, மகன், தூய ஆவியார்  (©Renáta Sedmáková - stock.adobe.com)

விடை தேடும் வினாக்கள் – தந்தை அனுப்பிய இறைமகன்

அதிகாரத்தோடும் படைபலத்தோடும் மெசியா வருவார் என்றும், அவரே உரோமையரின் ஆட்சியை முறியடிப்பார் என்றும் மக்கள் நடுவே எதிர்பார்ப்பு இருந்தது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை "இறை மகன்" என்று சொல்லிக் கொண்டதற்காக "இறைவனைப் பழித்துரைக்கிறாய்" என நீங்கள் எப்படிச் சொல்லலாம்?(யோவா 10:36) என இயேசு கேட்ட கேள்வி குறித்து இன்றைய நிகழ்ச்சியில் நோக்குவோம்.

எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்து கொண்டிருக்கிறார். யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, “இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்” என்று கேட்கிறார்கள். இயேசு மறுமொழியாக, “நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள் தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன. என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” என்கிறார். இதைக்கேட்ட யூதர்கள் இயேசு மேல் எறிய கற்களை எடுத்தனர். “எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்?” என்று இயேசு கேட்க, “இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில், மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்” என்கிறார்கள். அப்போதுதான் இந்த கேள்வியை, அதாவது, தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை ‘இறை மகன்’ என்று சொல்லிக் கொண்டதற்காக ‘இறைவனைப் பழித்துரைக்கிறாய்’ என நீங்கள் எப்படிச் சொல்லலாம்?  என்ற கேள்வியை முன்வைக்கிறார் இயேசு.

ஆட்சிபுரிவதற்கு ஒரு மெசியா வருவார் என்னும் எதிர்பார்ப்பு யூதர்கள் நடுவே மிக ஆழமாக வேரூன்றியிருந்தது. அதிகாரத்தோடும் படைபலத்தோடும் மெசியா வருவார் என்றும், அவரே உரோமையரின் ஆட்சியை முறியடிப்பார் என்றும் மக்கள் நடுவே எதிர்பார்ப்பு இருந்தது. இப்பின்னணியில் இயேசு தாம் கடவுளிடமிருந்து வருவதாக அறிவிக்கின்றார். இதை ஏற்க மறுக்கின்றனர் பல யூதர்கள். ஏனெனில், அவர்களது சமய நம்பிக்கைப்படி எந்த மனிதரும் தம்மைக் கடவுளுக்கு நிகராகக் கருதமுடியாது. ஆனால் நாசரேத்திலிருந்து வந்த இயேசுவோ தம்மைக் கடவுளுக்கு நிகரானவராகக் காட்டினார். எனவே பல யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. இன்றைய உலகில் வாழ்கின்ற நாம் இயேசுவின் வரலாற்றை அறிந்து, அவருடைய சொற்களை ஏற்று, அவர்மீது நம்பிக்கை கொள்வதற்கு முன்வருகிறோம். ஆனால் இந்நம்பிக்கை நம்மில் இயல்பாகத் தோன்றுகின்ற மனநிலை அல்ல. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி கூறுவதுபோல், நம்பிக்கை என்பது கடவுள் நமக்கு அளிக்கின்ற ஒரு கொடை. அதை நன்றியோடு ஏற்பது நம் பொறுப்பு.

இயேசு கிறிஸ்து விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தவர் என்றால், அவருக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது. இதை விவிலியத்தில் கூறப்பட்டிருக்கும் சான்றுகளிலிருந்து பார்ப்போம்.

இயேசு, தான் இறைமகன் என்பதை பல்வேறு சான்றுகளின் வழியாக யூதர்களுக்கு எடுத்துக் கூறினார். அவர்களோ அவரை நம்பாமலும் ஏற்றுக்கொள்ளாமலும் இருந்தார்கள். இயேசுவை மூன்றுவிதமான சான்றுகளின் வழியாக, அவர் இறைமகன் என்பதை யூதர்களுக்கு எடுத்துரைக்கப்படுவதை விவிலியத்தில் காண்கிறோம். அந்த மூன்று சான்றுகள் என்னென்ன?.

1.     திருமுழுக்கு யோவான் இயேசுவைப் பற்றி சொன்னது

இயேசு இறைமகன் என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கக்கூடிய முதன்மையான சான்று, திருமுழுக்கு யோவான் இயேசுவைப் பற்றிச் சொன்னது. அவர் இயேசுவை கடவுளின் ஆட்டுக்குட்டி (யோவா 1:29) என்றும், இறைமகன் (யோவா 1:34) என்றும் எடுத்துச் சொன்னார்; அவரைக் குறித்துச் சான்றும் பகர்ந்தார். அப்படியிருந்தும் யூதர்கள் இயேசுவை இறைமகன் என்றோ மெசியா என்றோ ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக அவர் தன்னை இறைமகன் என்று சொன்னதற்காக (யோவா 5:18) அவரோடு பிரச்சனையில் ஈடுபடுகிறார்கள்; அவரைக் கொல்வதற்கும் முயல்கிறார்கள்.

2.     இயேசு செய்த அருளடையாளங்கள்

இயேசு இறைமகன் என்று எடுத்துரைக்கும் இரண்டாவது சான்று, அவர் செய்துவந்த செயல்கள் மற்றும் அவர் ஆற்றிவந்த அருமடையாளங்கள். நற்செய்தியில் வரும் நிக்கதேம், இயேசுவைப் பற்றிச் சொல்கின்ற, “ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது” (யோவா 3:2) என்ற வார்த்தைகள் இதற்குச் சான்றாக இருக்கின்றன. ஆகையால், இயேசு இறைமகன் என்பதை அவர் ஆற்றிவந்த பல்வேறு அருமடையாளங்களின் வழியாகவும் நாம் அறிந்துகொள்ளலாம். இதையும் யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

3.     இறைத்தந்தை இயேசுவைப் பற்றிச் சொன்ன வார்த்தைகள்

இயேசு இறைமகன் என்று எடுத்துரைக்கும் மூன்றாவது, அதே நேரத்தில் மிக முக்கியமான சான்று, தந்தைக் கடவுள் இயேசுவைப் பற்றி உரைக்கும் வார்த்தைகள். இயேசு திருமுழுக்குப் பெற்றபோதும், உருமாற்றம் அடைந்தபோதும் “என் அன்பார்ந்த மைந்தன் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்ற வார்த்தைகள் (மத் 3:17; 17:5) இதை உறுதிசெய்வதாக அமைகின்றன. இறைவனே, இயேசுவை, தன் மகன் என்று எடுத்துரைத்தபோதும், யூதர்கள் அவரை ஏற்றுக்கொள்ளாமல் இருந்ததுதான் வேதனையான விடயம்.

இது தவிர, இயேசு பலமுறை தன்னை இறைமகன் என வெளிப்படுத்தியுள்ளார். இதனால்தான் யூதர்கள் அவர்மேல் கோபம் கொண்டு அவரை கொல்ல வழி தேடினர்.

இப்போது நாம் இயேசு வெளிப்படையாக தன்னைப்பற்றி கூறியவைகளுள் ஒரு சிலவற்றை காண்போம்.

“தந்தை மகன் மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலை வாழ்வைப் பெறுவர்.” (யோவான் 3:35-36)

“தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” (யோவான் 5:19)

“என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பது போல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன்.” (லூக்கா 22:29)

 “நானாக எதையும் பேசவில்லை; என்னை அனுப்பிய தந்தையே நான் என்ன சொல்ல வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது பற்றி எனக்குக் கட்டளை கொடுத்துள்ளார்.” (யோவான் 12:49)

“வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.” (யோவான் 14:6)

“மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.” (மத்தேயு 16:27)

“மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்.” (யோவான் 6:40)

“என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகிறேன். தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்.” (யோவான் 5:17,26)

“நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள். நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார்.” (யோவான் 14:7,11)

“தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.” (யோவான் 17:21)

“நான் செய்துவரும் செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும். என்னை அனுப்பிய தந்தையும் எனக்குச் சான்று பகர்ந்துள்ளார்.” (யோவான் 5:37)

“உங்களுள் இருவர் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனம் ஒத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” (மத்தேயு 18:19-20)

“விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்.” (மத்தேயு 12:50)

“என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப்படுவார்.” (மாற்கு 8:38)

“மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.” (மத்தேயு 10:32-33)

“நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். ......தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன். ....... என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்.” (யோவான் 10:14-18)

தலைமைக் குரு, “போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீதானோ?” என்று இயேசுவைக் கேட்டார். அதற்கு இயேசு, “நானே அவர்; மேலும் மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள்” என்கிறார். (மாற்கு 14:61-62).

விவிலியத்தில்  புதிய ஏற்பாட்டின் துவக்கத்தில் நாம் பார்ப்பதை மீண்டும் நினைவுக்கு கொணர்வோம்.

“இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்று கேட்ட மரியாவிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்” என்று வானதூதர் மொழிந்தார்.

மேலும், “முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்” என்று எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் (1:1-2) காண்கிறோம்.

இது போன்று எண்ணற்ற சான்றுகள், அதிலும் குறிப்பாக, இயேசுவின் வார்த்தைகள் வழியாகவேக் கிட்டுகின்றன. இத்தனை பின்புலங்கள், சான்றுகள் இருப்பினும் இயேசு இறைமகன் என்பதை யூதர்கள்  ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றும் உலகில் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதிக்கும் சிறிது குறைவானவர்களே கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்டுள்ளனர். 817 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ள இன்றைய உலகில் 31 விழுக்காட்டு கிறிஸ்தவர்களே உள்ளனர். இறைமகனை ஏற்றுக்கொள்ள ஏன் இந்த தயக்கம்? கிறிஸ்துவின் நற்செய்தி அவர்களை சென்றடைய நாம் முயலவில்லையா? அல்லது கிறிஸ்தவர்களின் வாழ்வு அவர்களைக் கவரவில்லையா? சிந்தனைக்குரிய கேள்வி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 August 2024, 12:50