திருத்தந்தையை வரவேற்கத் தயாராகும் கிழக்கு திமோர் அருள்சகோதரிகள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வரும் செப்டெம்பர் மாதம் 9 முதல் 11 வரை கிழக்கு திமோருக்கு வருகை தரவிருக்கும் திருத்தந்தையின் 45-வது திருத்தூதுப் பயணத்தின்போது அவரை சிறப்பாக வரவேற்க அங்குள்ள தூய சகாய அன்னையின் புதல்வியர் துறவு சபை சகோதரிகள் தயாராகி வருவதாக வத்திக்கான் செய்திகள் தெரிவிக்கின்றன.
செப்டெம்பர் 10-ஆம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் TasiTolu-வில் திருப்பலி கொண்டாடும் முக்கிய நிகழ்வின் பொறுப்பாளர்களாக, சகோதரி Angelita Gomes, சகோதரி Ivonia Carmelinda Belo மற்றும் சகோதரி Sanzinha Maria Auxiliadora de Jesus ஆகியோருடன், FMA என்ற கண்காணிப்பாளர் நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கிறது அச்செய்தி.
இதுகுறித்து Fides செய்தி நிறுவனத்திடம் பேசிய அருள்சகோதரி Angelita Gomes அவர்கள், ஒருங்கிணைப்பாளர்களாக, நாங்கள் தனியாக பணிகளை செய்யவில்லை இணைந்து திட்டமிடுகின்றோம் என்றும், கொமோரோ பகுதியில் உள்ள இரண்டு பங்குத்தளங்கள் இதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன, நாங்கள் ஏற்கனவே இரண்டு முறை சந்தித்து எங்களுக்குள் பணிகளைப் பகிர்ந்துகொண்டுள்ளோம் என்றும் கூறியதாகவும் உரைக்கின்றது அச்செய்திக் குறிப்பு.
திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் தொடர்பான குறிப்பை வெளியிட்டுள்ள FMA என்ற கண்காணிப்பாளர் நிறுவனம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கிழக்கு திமோர் வருகை எல்லா மக்களையும் மகிழ்ச்சியில் நிரப்புகிறது, குறிப்பாக, புனித மேரி மஸ்ஸரெல்லோ மறைமாநிலத்தைச் சேர்ந்த தூய சகாய அன்னை புதல்வியர் துறவு சபை சகோதரிகள் திருத்தந்தையின் முக்கிய நிகழ்வை ஒருங்கிணைப்பதில் சிறப்பாக ஒத்துழைக்கிறார்கள் என்றும் கூறுகிறது.
தயாரிப்பு என்பது பொருள் மட்டுமல்ல, ஆன்மிகமும் கூட என்று வலியுறுத்திக் கூறும் FMA நிறுவனத்தின் குறிப்பு, ஆயர் பேரவை அளவில், திருத்தந்தையின் வாழ்க்கை வரலாறு, அவரது சில திருமடல்கள், அவரது பணி மற்றும் வருகையின் மையப்பொருளான 'உங்கள் நம்பிக்கை உங்கள் கலாச்சாரமாகட்டும்” ஆகியவற்றை மையப்படுத்தி மறைக்கல்வி பாடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் எடுத்துக்காட்டுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்