தேடுதல்

சியோல் பேராயர் Soon-taek சியோல் பேராயர் Soon-taek 

தென்கொரியாவில் அன்னை மரியா விழாவும் சுதந்திர தினமும்

அனைத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசையும் நுகர்வு கலாச்சாரமும் இன்றைய உலகில் பொய்யான முகங்களை வெளிப்படுத்தி உண்மைகளை மறைத்து நிற்கின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

செவிமடுத்தல் என்பது ஒன்றிப்பை ஊக்குவிக்கிறது, பிரிவுகளின் குணப்படுத்தலை அனுபவிப்போர் விசுவாசத்தின் பலப்படுத்தப்பட்ட பாதையில் நடைபோடுகின்றனர் என தென் கொரியாவின் 79வது சுதந்திரதினச் செய்தியில் கூறியுள்ளார் பேராயர் Peter Soon-taick Chung.

இம்மாதம் 15ஆம் தேதியன்று, அதாவது வரும் வியாழனன்று தென்கொரியாவில் சிறப்பிக்கப்படும் சுதந்திர தினம் மற்றும் அன்னை மரியா விண்ணுலகிற்கு எடுத்துச் செல்லப்பட்ட திருவிழாக்களை முன்னிட்டு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள சியோல் பேராயர் Soon-taick Chung அவர்கள், அதில் நாட்டுப்பற்றையும் ஆன்மீக தெளிந்து தேர்தலையும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்ததாக காண்பித்துள்ளதுடன், அன்னை மரியாவின் விசுவாசத்தால் தூண்டப்பட்டவர்களாக இவ்வுலகை கொஞ்சம் உற்றுநோக்குவோம் எனக் கேட்டுள்ளார்.

தாழ்ச்சி பண்புடன் வாழ்வோருக்கு என்ன நடக்கும் என்பதை அன்னை மரியா  விண்ணுக்கு எடுத்துச் செல்லப்பட்டது காட்டி நிற்கிறது என்ற பேராயர், அனைத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசையும், நுகர்வு கலாச்சாரமும் இன்றைய உலகில் பொய்யான முகங்களை வெளிப்படுத்தி, உண்மைகளை மறைத்து நிற்பதுடன், உலகச் செல்வங்கள் என்ற பூதக்கண்ணாடி கொண்டே அனைத்தையும் பார்க்கின்றன என்ற கவலையையும் வெளியிட்டுள்ளார்.

உலகாயுத நுகர்வு கலாச்சாரம் என்பது மற்றவர்களுக்கு நாம் செவிமடுப்பதில் பெரும் தடையாக இருக்கிறது என்ற பேராயர் Soon-taick Chung அவர்கள், உண்மையான செவிமடுத்தல் என்பது மௌனத்தை எதிர்பார்க்கின்றது, அந்த மௌனத்திலேயே நம்மையே நாம், நம் நேரத்தையும் இணைத்து பிறருக்காக வழங்குவதை புரிந்துகொள்கிறோம் என்றார்.

அன்னை மரியாவின் விசுவாசமும், அவர் பிறருக்கு செவிமடுப்பதிலிருந்தே பிறக்கிறது எனபதையும் எடுத்துரைத்தார் தென்கொரியாவின் சியோல் பேராயர்.

1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஜப்பானிடமிருந்து விடுதலை பெற்றது தென்கொரியா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2024, 15:16