உலகில் புலம்பெயரும் மக்களுள் ஏறக்குறைய பாதிபேர் கிறிஸ்தவர்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
உலகில் புலம்பெயரும் மக்களுள் ஏறக்குறைய பாதிபேர், அதாவது 47 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள் என அண்மையில் Pew என்ற ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுவிட்டு நாடு சென்று குடியமர முயலும் குழுக்களுள் மத அடிப்படையில் பார்த்தால் கிறிஸ்தவர்களே அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கும் இந்த ஆய்வு மையம், இலத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, சஹாராவை அடுத்த ஆப்ரிக்க நாடுகள் போன்றவைகளில் இதனால் கிறிஸ்தவ விகிதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் இடம்பெற்று வருகிறது எனவும் தெரிவிக்கிறது.
பொருளாதார காரணங்கள், அரசியல் நிலையற்றதன்மை, மோதல்கள் போன்றவைகளால் பல இலட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் புதிய வாய்ப்புக்களையும், பாதுகாப்பையும் வேண்டி புலம்பெயர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வேலைக்காக, கல்விக்காக, குடும்பத்துடன் இணைவதற்காக என பல காரணங்கள் கூறப்படுகின்றபோதிலும், மதத்திற்கும் புலம்பெயர்தலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கும் இந்த அறிக்கை, புலம்பெயர்வோரில் 47 விழுக்காட்டைக் கொண்டு கிறிஸ்தவர்கள் முதலிடத்தில் இருக்கும் அதே வேளையில், இஸ்லாமியர்கள் 29 விழுக்காட்டுடன் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்