பொதுக் காலம் 21-ஆம் ஞாயிறு : பிரமாணிக்கமே, ஆன்மிக வாழ்வின் மையம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. யோசு 24:1-2a 15-17,18b II. எபே 5:21-32 III. யோவா 6:60-69)
அந்தக் கணவன் ஒரு ஞானக்கிறுக்கன். ஆனால், அவன் பேனா பிடித்தால் நாடே நடுங்கும். மேடை ஏறி மைக் பிடித்தால் நெருப்புப் பொறி பறக்கும். உடனே நாடு கடத்தப்படுவான். இந்த ஞானக்கிறுக்கனை ஒரு பேரழகி, கோடீஸ்வரி காதலித்துப் பெற்றோர் எதிர்ப்பில் திருமணமும் செய்து கொண்டாள். வாழ்க்கைப்பட்ட நாளிலிருந்து மகிழ்ச்சியடைவது போல் ஒரு சம்பவம் கூட நடக்கவில்லை. ஊர், ஊராக, நாடு நாடாக பலமுறை நாடு கடத்தப்பட்டான். இத்தம்பதியினருக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. ஆனால், காலரா நோயில் 4 குழந்தைகள் இறந்துவிட்டன. வறுமையின் உச்சக்கட்டம் அது. கடைசிக் குழந்தை தாய் பாலுக்கு அழுதது. அப்போது, உணவின்றி மூன்று நாட்களாகத் தாய் பட்டினி. ஆனாலும் குழந்தையின் அழுகையை அடக்க மார்பு கொடுத்தாள் அவள். ஆனால் குழந்தையின் பல் பட்டு இரத்தம் மட்டுமே வடிந்தது. அடுத்த 2 நாளில் அந்தக் குழந்தையும் இறந்து போனது. தலைமறைவு வாழ்க்கை வேறு. இருந்தபோதிலும், நண்பர்களிடம் கையேந்தி காசு வாங்கி சவப்பெட்டி செய்து தன் குழந்தையை அடக்கம் செய்தான் அந்தக் கணவன். அடுத்த 6 மாதங்களில் நோய்வாய்ப்பட்டு அவனது காதல் மனைவியும் இறந்துபோனாள். அந்தப் பெண்மணிதான் ஜென்னி. அந்த மேதைதான் கார்ல் மார்க்ஸ். ‘இவரை மணந்து என்ன இன்பத்தைக் கண்டேன்’ என்று ஒரு நாள் கூட மனதால் அவள் நினைக்கவில்லை. குழந்தைகளை வரிசையாகப் பறிகொடுத்த போதும் தன் கணவன் கார்ல் மார்க்ஸ்மீது கொண்ட காதல் அனைத்தையும் விட மேலானது என்று நம்பினாள் ஜென்னி. அவர்களின் காதல் உண்மையில் தெய்வீகமானது. எப்போதும் உடலால் அல்ல, உள்ளதால் ஒன்றியிருந்தவர்கள் அவர்கள். கார்ல் மார்க்ஸும் நண்பன் ஏங்கெல்சும் எழுதிய 80 பக்க கம்யூனிஸ்ட் அறிக்கை உலக இலக்கியங்களில் ஒன்றாக இன்றும் போற்றப்படுகிறது. ‘எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்’ என்ற தத்துவத்தை வலியுறுத்திய நூலான ‘மூலதனம்’ 25 ஆண்டுகளில் உருவான உலகப் புகழ்பெற்ற நூல். இந்தப் படைப்புகளுக்குப் பின்னால் நின்றவள் ஜென்னி என்றால் அது மிகையாகாது. ஜென்னி போன்ற கற்புக்கரசிகளைக் கொண்டாட வள்ளுவர் எழுதிய ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய் எனப் பெய்யும் மழை!’ (குறள் 55) என்ற குறள் மிகவும் பொருத்தமாக அமைகின்றது. கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள் என்று நமது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் இக்குறளுக்கு விளக்கமளிக்கிறார். இன்று ஆண்டின் பொதுக் காலம் இருபத்தொன்றாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் கடவுளுக்கு அவர்தம் அடியார்கள் எப்போதும் பிரமாணிக்கமாக இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
யோசுவாவின் பிரமாணிக்கம்
இன்றைய முதல் வாசகத்தில், யோசுவா கடவுளுடன் ஏற்படுத்திக்கொள்ளும் உடன்படிக்கை கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஏற்படுத்திக்கொள்ளும் பிரமாணிக்கத்தின் அடையாளமாக இருப்பதுபோல அமைகிறது. செக்கேமில் யோசுவா இஸ்ரயேலின் எல்லாக் குலங்களையும் ஒன்று கூட்டுகிறார். பின்னர் இஸ்ரயேலின் முதியோர்களையும் தலைவர்களையும் நடுவர்களையும் அதிகாரிகளையும் அழைகிக்கிறார். அவர்கள் கடவுள் முன்னிலையில் ஒன்றுகூடுகின்றனர். அப்போது மக்கள் அனைவருக்கும் கடவுள் உரைத்ததாக மீட்பின் வரலாற்றை மிகச் சுருக்கமாக எடுத்துரைக்கும் யோசுவா, "ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால், நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" என்று கூறி, தனது தெளிந்து தேர்தலை அதாவது, உறுதியான முடிவை அவர்களிடத்தில் முன்வைக்கின்றார். அதேவேளையில் யோசுவாவின் முடிவை முழுமனதுடன் ஏற்றுக்கொண்ட மக்களும் மறுமொழியாக, “ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக! ஏனெனில், எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வந்தார். எங்கள் கண்முன் இப்பெரிய அடையாளங்களைச் செய்தார். நாங்கள் நடந்து வந்த எல்லா வழிகளிலும் நாங்கள் கடந்து வந்த மக்களிடையிலும் எங்களைக் காத்தருளினார்" என்று பதில்மொழி தருகின்றனர். இங்கே நாமொரு முக்கிமான விடயத்தைக் கவனிக்கவேண்டும். அதாவது, யோசுவா சொல்லிவிட்டாரே என்பதற்காக அல்லாமல், மீட்பின் வரலாற்றை இதயத்தால் உணர்ந்து ஏற்றுக்கொண்டவர்களாக, தாங்களும் யோசுவாவின் வழியில் என்றும் வாழும் கடவுளுக்கு ஊழியம் புரிவதாக வாக்களிக்கின்றனர்.
கணவன்-மனைவி பிரமாணிக்கம்
இன்றைய இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்து திருஅவைமீது அன்பு செலுத்தியது போல கணவர்கள் தங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதை மிகவும் அழகாக எடுத்துரைக்கின்றார் புனித பவுலடியார். இங்கே, ஒருவருக்கு மட்டும் உள்ள பொறுப்பை எடுத்துக்காட்டவில்லை அவர், மாறாக, இருவரும் ஒருவர்மீது ஒருவர் கொண்டிருக்கவேண்டிய கடைமைகளையும் பொறுப்புகளையும் எடுத்துக்காட்டுகின்றார். முதலாவதாக, “திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஏனெனில், கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோலக் கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார்” என்று கூறும் பவுலடியார். இரண்டாவதாக, திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். ஏனெனில், கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார். வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார். அத்திருச்சபை, கறை திரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார். அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின்மீது அன்பு கொள்கிறவர், தம்மீதே அன்பு கொள்கிறவராவார்" என்கின்றார்.
இங்கும் நாம் ஒரு முக்கியமான விடயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, திருமண வாழ்வில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே எப்போதும் பிரச்சனைகளே வராது என்று அர்த்தம் அல்ல, ஆனால் கண்டிப்பாகப் பிரச்சனைகளும் சவால்களும் வரும். ஆனால், அத்தகையைச் சூழல்களில் எல்லாம் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இருவருக்குமிடையே ஏற்படும் பிரச்சனைகளும், தவறான புரிதல்களும் குடும்ப உறவில் பிளவுகளையும் பிரிவினைகளையும் ஏற்படுத்திவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இம்மாதிரியான வேளைகளில் அவர்கள் பிரமணிக்கம் தவறிவிடக் கூடாது. இதனால்தான், திருமண ஒப்பந்தத்திதின்போது, "இன்பத்திலும் துன்பத்திலும் உடல்நலத்திலும் நோயிலும், நான் உனக்குப் பிரமாணிக்கமாய் இருந்து, வாழ்நாளெல்லாம் உன்னை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறேன்" என்று ஒருவருக்கொருவர் வாக்குறுதித் தருகின்றனர். இவ்வேளையில், நாம் யோசேப்பு, மரியா, இயேசு வாழ்ந்த திருக்குடும்பத்தை நினைவு கூர்வோம். எத்தனையோ விதமான துன்ப துயரங்களையும், வேதனை சோதனைகளையும் அவரகள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்தபோதிலும், கடவுள்மீதும் ஒருவருக்கொருவர்மீதும் கொண்டிருந்த பிரமாணிக்கத்திலும் அன்பிலும் ஒருபோதும் அவர்கள் தவறவே இல்லை. இதற்கு அடிப்படைக் காரணம், அவர்களின் அன்பு ஓர் உண்மையான புரிதலில் ஊன்றியிருந்தது.
பேதுருவின் பிரமாணிக்கம்
இறுதியாக, இன்றைய நற்செய்திக்கு வருவோம். “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்" என்றும், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்" என்றும், இயேசு கூறிய வார்த்தைகளை யூத மக்களாலும், ஏன் அவரது சீடர்களாலேயே புரிந்துகொள்ள இயலவில்லை. அதனால்தான், அவருடைய சீடருள் பலர் இதைக் கேட்டு, “இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?” என்று பேசிக் கொண்டனர். இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், “நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா? அப்படியானால் மானிடமகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்? வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை” என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்துகின்றார் இயேசு.
இங்கே, இயேசு தூய ஆவி மற்றும் ஊனியல்பு குறித்துப் பேசுகின்றார். ஊனியல்பு என்பது தீய ஆவிக்கு உரியது என்பதைப் புரிந்துகொள்வோம் (காண்க கலா 5:19-22). நாம் தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழும்போது, ஊனியல்பின் இச்சைகளுக்கேற்ப நாம் வாழமாட்டோம். காரணம், ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. அப்படியென்றால், தீய ஆவிக்கு அதாவது, ஊனியல்பின் இச்சைகளுக்கு நாம் அடிமையாகிவிட்டால் இறைவனைக் குறித்த நமது நம்பிக்கை, புரிதலற்றுப்போய்விடும் என்பதையும், நாம் கடவுளுக்குப் பிரமாணிக்கம் தவறிவிடுவோம் என்பதையும் நம் கவனத்தில் கொள்வோம். மேலும் இயேசு தன்னைப்பற்றியும், ஆபிரகாம், மோசே குறித்தும் மற்றும் தனக்கும் தந்தைக்குமான உறவு குறித்தும் பேசியபோது யூதர்கள் அவரை நம்பவில்லை. இதன்காரணமாகவே, "நான் சொல்வதற்குச் செவி சாய்க்க உங்களால் இயலவில்லை. எனவேதான் நான் சொல்வதை நீங்கள் கண்டுணர்வதில்லை. “சாத்தானே உங்களுக்குத் தந்தை. உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்கள் விருப்பம்" (காண்க யோவா 8: 43-44) என்று அவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார் இயேசு. இன்று நாம் காணும் நற்செய்தி பகுதியில் யூத மக்களுடன் இயேசுவின் சீடர்கள் சிலரும் சேர்ந்துகொள்கின்றனர். அதனால்தான், 'அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை' என்பதையும் பார்க்கின்றோம். அதேவேளையில், இயேசு பன்னிரு சீடரிடம், “நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா?” என்று கேட்டபோது, சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்” என்று கூறுவதைப் பார்க்கின்றோம். இங்கே பேதுருவின் நம்பிக்கை அறிக்கை என்பது, யோசுவா கடவுள்மீது கொண்டிருந்த பிரமாணிக்கத்தைப் போன்றும் இயேசுவிமீது அன்னையாம் திருஅவை கொண்டிருக்கும் பிரமாணிக்கத்தைப் போன்றும் ஆழமாக இருப்பதை நம்மால் காண முடிகின்றது.
நமது பிரமாணிக்கம் எப்படி?
நான் இயேசுவின்மீதும் திருஅவையின்மீதும் உண்மையான பிரமாணிக்கம் கொண்டிருக்கின்றேனா, இயேசுவின் படிப்பினைகளையும், அவற்றின் அடிப்படையில் திருஅவை வழங்கும் கற்பித்தல்களையும், அறிவுறுத்தல்களையும் நான் புரிந்துகொள்கின்றேனா, எனது அன்றாட வாழ்வில் அவற்றை ஏற்றுச் செயல்படுத்த விழைகின்றேனா, அல்லது, இவற்றை ஏற்றுச் செயல்படுத்தும்போது ஏற்படும் சவால்களால் பிரமாணிக்கம் தவறி பின்வாங்கி விடுகின்றேனா என்பன போன்ற கேள்விகளை எழுப்பிச் சிந்திப்போம். ஆகவே, பிரமாணிக்கம் தவறாது வாழ்ந்த யோசுவா, பவுலடியார் மற்றும் பேதுருவின் வழித்தடங்களில் பயணித்து நாமும் பிரமாணிக்கமுடன் வாழ்வதற்கான அருளை இந்நாளில் இறைவனிடம் கேட்டு மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்