தேடுதல்

இயேசுவுடன் தர்க்கத்தில் ஈடுபடும் பரிசேயர் இயேசுவுடன் தர்க்கத்தில் ஈடுபடும் பரிசேயர்  

பொதுக் காலம் 22-ஆம் ஞாயிறு : வெளிவேடம் எனும் முகமூடி களைவோம்!

வெளிவேடமகற்றி உண்மைத்தன்மையுடன் நடந்துகொள்வோம். வெளிவேடத்தை அணிந்துகொள்ளத் தூண்டும் நமது உள்ளத்திலிருந்து வரும் செயல்கள் நம்மைத் தீட்டுப்படுத்தாவண்ணம் நம்மைப் பாதுகாத்துக்கொள்வோம்.
பொதுக் காலம் 22-ஆம் ஞாயிறு : வெளிவேடம் எனும் முகமூடி களைவோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I. இச 4:1-2,6-8)  II. யாக் 1:17-18, 21b -22, 27 III. மாற் 7:1-8, 14-15, 21-23)

அண்மையில்  மாவட்ட ஆட்சியர் ஒருவர் அருமையான வாழ்க்கை அனுபவம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளதை வாசித்தேன். இயேசு கூறும் இன்றைய இறைவார்த்தைகளுக்கு மிகவும் இது மிகவும் பொருத்தமுடையதாக இருக்கின்றது. இப்போது அவரது வார்த்தைகளிலேயே அவ்வனுபவத்தைக் கேட்போம். "என் பணியில்  நடந்த ஒரு சம்பவம். நான் தஞ்சாவூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஒரு நாள் இரவு 8 மணிக்கு வேலைமுடிந்து அலுவலக வாகனத்தில் என் இல்லத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். நான் அப்போது தஞ்சாவூருக்கு வெளியே ஒரு வீட்டில் குடியிருந்தேன். அப்போது  லேசாக மழைத்  தூறிக்கொண்டு இருந்தது. மின்சாரமும் இல்லை. சாலை முழுவதும் இருட்டு. என் வீட்டிற்கு அருகில் வந்து கொண்டிருக்கும்போது ஒரு வயதான அம்மா கையைக் காட்டி என் வாகனத்தை நிறுத்தினார். நான்தான் அதனை ஓட்டிக்கொண்டு வந்தேன். நான் வாகனத்தை நிறுத்தி என்ன விடயம் என்று கேட்டேன். அதற்கு அந்த அம்மா, "என் மகளுக்கு பிரசவ வலி வந்திருக்கிறது. உடனே மருத்துவமனைக்குப் போக வேண்டும். இந்த இருட்டிலும் மழையிலும் ஒரு ஆட்டோ கூட இந்தப் பக்கம் வரவில்லை. நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும்" என்றார். அரசு வாகனத்தை சொந்தக் காரியங்களுக்குப் பயன் படுத்தக்கூடாது என்பது சட்டம். ஆனால் அங்கு நான் எதிர்கொள்வது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை. நான் அதிகம் யோசிக்கவில்லை. சரி, வாருங்கள் என்று அந்த அம்மாவின் வீட்டிற்குச் சென்று அந்தக் கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக்கொண்டு, நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தேன். அந்த அம்மா பலமுறை நன்றி சொல்லிவிட்டு ஐந்து ரூபாய் கொடுத்தார்கள். நான் அந்தப் பணத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டு வீடு திரும்பினேன். நான் செய்தது சட்டத்திற்குப் புறம்பாயிருக்கலாம். ஆனால் என் மனச்சாட்சியின்படி அது ஒரு மனிதாபிமானச் செயல். அதை நான் செய்திருக்காவிடில் என் ஆயுள் முழுவதும் என் மனச்சாட்சி என்னைக் குத்திக்கொண்டு இருந்திருக்கும். இந்தக் காரியத்திற்காக எனக்கு ஏதும் தண்டனை வந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தேன். என்னுடைய பெரிய அதிகாரியை அடுத்த முறை சந்தித்தபோது இதைச் சொன்னேன். அதற்கு அவர், "நீ செய்ததுதான் சரி, ஆனால் இதை வாகனத்தின் லாக்புக்கில் எழுதாதே, பின்னால் தணிக்கையாளர்கள் உன்னை வீணாகத் தொந்திரவு செய்வார்கள்" என்று சொல்லிவிட்டார்.  ஒவ்வொரு உயர் அதிகாரியும் இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக, மனிதாபிமான அடிப்படையில், முடிவுகள் எடுக்கலாம். ஆனால் பெரும்பாலானோர் அவ்வாறு செயல்படுவதில்லை என்பதே நிதர்சனம்"

பொதுக்காலத்தின் இருபத்து இரண்டாம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள், கடவுளின் அறிவுரைகளையும் அவர் கொடுத்த படிப்பினைகளையும் குறித்து வாய்கிழிய பேசினால் மட்டும் போதாது, மாறாக அவற்றை முழுமையாகக் கடைபிடித்து ஒழுக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகின்றன. இன்றைய முதல் வாசகத்தில், "இப்பொழுது இஸ்ரயேலரே! கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்கவும் வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத்தருகிறேன்; அவற்றைப் பின்பற்றுங்கள்" என்று கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு அறிவுறுத்துவதைப் பார்க்கின்றோம். மேலும் கடவுளின் இந்தக் கட்டளையை மட்டும் பின்பற்றி நடக்கும்போது, அதுவே மக்களினங்கள் முன்னிலையில் அவர்களின் அறிவாற்றலையும் ஞானத்தையும் வெளிப்படுத்தும். அதுமட்டுமன்றி, இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும், உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பெருமையைக் கொணரும் என்ற ஒரு கருத்தையும் கடவுள் முன்மொழிவதைப் பார்க்கின்றோம்.

குறிப்பாக, இங்கே கடவுள் வழங்கும் கட்டளைகளில், "நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்கவும் வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம்" என்ற வார்த்தைகள் மிகவும் சிந்திக்கத்தக்கன. காரணம், கடவுள் கொடுத்த இந்தக் கட்டளைகளையெல்லாம் மறந்துவிட்டு, தங்களின் வசதிக்காகப் பல புதிய சட்டதிட்டங்களை உட்புகுத்தினார்கள். இதனைத்தான், பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன என்று எடுத்துக்காட்டுகின்றார் மாற்கு நற்செய்தியாளர். பொதுவாக, இயேசுவுடன் அதிகம் தர்க்கத்தில் ஈடுபட்டவர்கள் பரிசேயர்கள்தாம். ஒருநாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் அவரிடம் வந்து கூடினர் என்றுதான் இன்றைய நற்செய்தி தொடங்குகின்றது. அப்படியென்றால், இயேசுவின் போதனைகள் குறித்தும், அவர் மக்களுடன் கையாளும் அணுகுமுறைகள் குறித்தும் பரிசேயர்கள் கேள்விப்பட்டதுமன்றி, அவருடன் தர்க்கத்தில் ஈடுபடுவதற்காக எருசலேமிலிருந்து மறைநூல் அறிஞர்களையும் கூட்டி வருகின்றனர். மறைநூல் அறிஞர்கள் என்றாலே அவர்கள் மெத்தபடித்தவர்கள், அதாவது, அறிவில் தெளிந்து தேர்ந்தவர்கள் மற்றும் அதிகாரப் பீடத்தில் பங்கேற்றவர்கள் என்பதும்தானே அர்த்தப்படுகிறது. ஆக, பரிசேயர்- மறைநூல் அறிஞர்கள் கூட்டு என்பது இயேசுவின் காலத்து யூதச் சமுதாயத்தில் ஒருவிதமான சமய அடிப்படைவாதத்தின் விளைவாக ஏற்பட்டது. இதுவே மக்கள்மீது அவர்களின் ஆதிக்கப்போக்கு நிலைபெறவும் வழிவகுத்தது. ஆகவே, இயேசுவின் பணிமுறைகளையும் அவரது படிப்பினைகளையும் இவர்கள் வெறுத்ததிற்கு அடிப்படைக் காரணம், மக்கள் இயேசுவை ஏற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதும், மக்கள்மீதான தங்களின் ஆதிக்கம் குறைந்து வருகிறது என்பதும்தான். மேலும் இந்தக் கல்விமான்கள் மக்களை ஒடுக்குவதற்கும் அவர்களைச் சுரண்டிப் பிழைப்பதற்கும், சமுதாயத்தில் தாங்கள் மட்டுமே தூய்மையனவர்கள் மற்ற எல்லாரும் தீட்டானவரகள் என்ற தவறான கருத்தியல்களை நிலைநிறுத்துவதற்குமே கடவுள் கொடுத்த சட்டங்களைக் காட்டிலும் பல்வேறு தேவையற்ற  சட்டங்களையும் உட்புகுத்தினர் என்பதை நாம் புரிந்துகொள்வோம். இந்தச் சட்டங்களுக்குள் தங்களை மறைத்துக்கொண்டு தாங்கள் மட்டுமே சமயக் காவலர்கள் என்பதைக் காட்டிக்கொண்டனர். அதனால்தான், இயேசு அவர்களின் சட்டங்களில் உள்ள ஓட்டைகளையும் மக்கள்மீதான அவர்களது அடக்குமுறைகளையும் தோலுரித்துக் காட்டுகின்றார்.

அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள் என்றும் ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, “உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?” என்று கேட்டனர் என்றும் கூறி இந்த விவாத்தைத் தொடங்கி வைக்கின்றனர் பாரிசேயரும் மறைநூல் அறிஞரும்.  உடனே கோபத்தின் உச்சிக்குச் செல்லும் இயேசு "வெளிவேடக்காரரே, உங்களைப்பற்றிப் பொருத்தமாகவே எசாயா இறைவாக்கு உரைத்திருக்கிறார். அவர், ‘இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்’ என்கிறார்” (காண்க எசா 29:13) என்று அவர்களின் புத்திக்கு உரைக்குமாறு எடுத்துக்காட்டுகிறார். இங்கே இந்த இறைவார்த்தையைப் பயன்படுத்துவதன் வழியாக, யூதர்களின் வாய்மொழி பாரம்பரியத்தைப் புறக்கணித்து சட்டம், இறைவாக்கு என்கின்ற எழுத்துப் பாரம்பரியத்தையே வலியுறுத்துகின்றார் இயேசு. அதனால்தான் இறைவாக்கினர் எசாயாவின் குற்றச்சாட்டையே முன்வைக்கிறார் அவர். மேலும் பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞர்கள் வலியுறுத்தும் மரபுகள் கடவுள் அளித்த எழுத்துப் பாரம்பரியத்தில் அல்ல, மாறாக, ஒரு சில மனிதர்கள் உருவாக்கிய வாய்மொழி பாரம்பரியத்தில் மட்டும்தான் உள்ளது என்பதையும் இங்கே சுட்டிக்காட்டுகின்றார் இயேசு.

இரண்டாவதாக, இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, “நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்து கொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்று கூறினார் என்று மாற்கு நற்செய்தியாளர் தெரிவிக்கின்றார். இங்கே ‘தம்மிடம்’ என்றும் ‘தனியாக’ என்றும் நாம் பொருள்கொள்ளலாம். பரிசேயர்களையும் மறைநூல் அறிஞர்களையும் வைத்துக்கொண்டு இயேசு பேசியவை ஒருவேளை மக்களுக்கு விளங்காமல் போயிருக்கலாம். ஆனால் இது அவர்களுக்கு விளங்காமலேயே போய்விடக்கூடாது, அவர்களின் வெளிவேடத்தை மக்கள் நன்கு அறிந்துணர்ந்துகொள்ள வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டவராக அவர்களுக்கு மீண்டும் விளக்கமளிக்கிறார் இயேசு. ‘கேட்கச் செவியுள்ளோர்’ கேட்கட்டும் என்ற வார்த்தை, ‘அப்பா.. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.... நீங்கள் எல்லாவற்றையும் உணர்ந்து நடந்துகொள்ளுங்கள்’ என்பதன் அர்த்தமாகக்கூட இருக்கலாம்.

மூன்றாவதாக, தீட்டுப்படுத்தும் காரியம் குறித்து இயேசு பேசியதை புரிந்துகொள்ளாத சீடர்கள், தனியாக வீட்டில் அவரிடம் இவ்வுமையின் பொருள்குறித்து வினவுகின்றனர். அவர் அவர்களிடம், “நீங்களுமா இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப் படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா? ஏனென்றால், அது அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல் வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய் விடுகிறது”  என்று கூறும் இயேசு தொடர்ந்து, “மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப் படுத்துகின்றன” என்று கூறி வெளிவேடதாரிகளான பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞரின் மனப்பாங்கினையும் நடத்தையையும் எடுத்துக்காட்டுகிறார் இயேசு.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், "எல்லா வகையான அழுக்கையும், உங்களிடம் மிகுந்துள்ள தீமையையும் அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்” என்றும், "தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில், துன்புறும் அநாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்" என்றும் அறிவுறுத்துகின்றார் புனித யாகப்பர். அதாவது, இறைவார்த்தையைக் கேட்டு, உள்ளத்தில் உள்வாங்கி, அதன்படி நடப்பவர்களாகவும் இருக்கவும், அதன் பலனை நமது பிறரன்புச் செயல்களில் வெளிப்படுத்தவும் வேண்டுகிறார் யாகப்பர்.

வெளிவேடம்போடும் தனிமனிதரிடத்திலும் சரி, அரசியல்வாதிகளிடமும் சரி, இயேசு கூறும் இத்தகைய மனப்போக்குகளை நாம் காண முடியும். கடந்த பொதுத்தேர்தல் பரப்புரைகளின்போது நம் தேசத்து அரசியல்வாதிகளின் வாழ்க்கைமுறைகளை நாம் நேரில் காண முடிந்தது. தேர்தல் பரப்புரைகளின்போது ஒன்று, வெற்றிபெற்று ஆட்சி அரியணையில் அமைர்ந்தபிறகு ஒன்று எனச் செயல்படும் நம் அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் மக்களை மிகுந்த வெறுப்புநிலைக்குத் தள்ளியத்தைப் பார்த்தோம். அதன் பின்னணியில்தான் இந்தத் தேர்தல் முடிவுகளை மக்கள் வழங்கியுள்ளனர். ஆகவே, எனது தனிப்பட்ட செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன? நான் பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞர் போல இரண்டு முகமூடிகளை அணிந்துகொண்டு செயல்படுகின்றேனா? பாரம்பரியத்தையும், சட்டத்தையும், விதிமுறைகளையும்,  கொள்கைகளையும் மட்டுமே கடைப்பிடித்தால் போதும் என்றெண்ணி மனிதம் சார்ந்த செயல்களை செய்யத் தவறிவிடுகிறேனா என்ற கேள்விகளை எழுப்பிச் சிந்திப்போம். வெளிவேடமகற்றி உண்மைத்தன்மையுடன் நடந்துகொள்வோம். வெளிவேடத்தை அணிந்துகொள்ளத் தூண்டும் நமது உள்ளத்திலிருந்து வரும் செயல்கள் நம்மைத் தீட்டுப்படுத்தாவண்ணம் நம்மைப் பாதுகாத்துக்கொள்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 August 2024, 12:34