தடம் தந்த தகைமை - மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும்.
(லூக் 15:10) என்றார் இயேசு.
அளவில்லாத அன்புமிக்கவர் நம் கடவுள். அந்த அன்பை அள்ளி அள்ளி அவர் நமக்கு வழங்கினாலும் அவரது பார்வையிலிருந்து நம்மை மறைத்துக் கொள்வது நம் இயல்பாகிவிட்டது. அவ்வாறே நாம் காணாமல் போனாலும் கனிவோடு தேடும் தமது பாச இயல்பைக் கடவுள் ஒருபோதும் கைவிடுவதில்லை. இது கடவுளோடு நாம் செய்யும் கண்ணாமூச்சி விளையாட்டு போல அன்றுமுதல் இன்றுவரைத் தொடர்வாகின்றது.
ஒரு திராக்மா என்ற வெள்ளி நாணயம் அன்றைய ஒருநாள் உழைப்பின் ஊதியம். அதனிலும் மேலாக யூதப் பெண்கள் தங்கள் கணவரிடமிருந்து அன்பளிப்பாகப் பெற்று அவற்றை நெற்றியைச் சுற்றிக் கட்டி வைத்திருப்பது மரபு. பத்தில் ஒரு திராக்மா தொலைந்து போனால் தம் கணவரின் உயிருக்கு ஏதோ ஆபத்து என்ற ஐதீகமும் அவர்களிடையே நிலவியது. இன்று நம் சமூகத்துள் போதையால், தொழில் தோல்வியால், விபத்தால், தம்பதியர் பிரிவால், பணித்தள உறவுச் சிக்கலால், பருவ ரீதியான பிரச்சினையால், தற்கொலை முயற்சியால் எத்தனையோ பேர் காணாமல் போயுள்ளனர். இத்தகையோரை மீட்டெடுப்பதும் அவர்களோடு மகிழ் கொண்டாடுதலும் நம் கடனன்றோ! மனம் மாறியவர்களை மாண்போடு அணுகுதல் ஒரு மனிதாபிமானம் மட்டுமன்று, இறைச்செயல்.
இறைவா! சமூகத்தில் தொலைந்து போனவர்களைவிடத் துரத்தப்பட்டவர்களே ஏராளம். அத்தகையோரைப் பரிவோடு அணுகும் பாசமனம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்