தேடுதல்

அமைதி நாடும் மக்கள் அமைதி நாடும் மக்கள் 

தடம் தந்த தகைமை - என் அமைதியையே அளிக்கிறேன்

நிலைத்த, நிறைவு தருகின்ற, நீதிமிக்க அமைதியை இவ்வுலகில் உருவாக்க வேண்டுமென்பதே இயேசுவின் வருகையின் நோக்கம். தம்மை நம்பி வந்த எல்லாருக்கும் அதைப் பகிர்ந்தார்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு

அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். (யோவா 14:27) என்றார் இயேசு.

இயேசுவின் பிறப்புக்குப் பின்னர் இடையர்களுக்குக் கூறப்பட்ட செய்தியோடு மலர்ந்து நின்ற சொல் “அமைதி” (லூக் 2:14). அவரது இறப்புக்கு முன்னர் சீடர்களுக்குக் கூறப்படும் பிரியாவிடையில் விழுதாய் நிற்கும் சொல்லும் “அமைதியே”. நிலைத்த, நிறைவு தருகின்ற, நீதிமிக்க அமைதியை இவ்வுலகில் உருவாக்க வேண்டுமென்பதே இயேசுவின்

வருகையின் நோக்கம். தம்மை நம்பி வந்த எல்லாருக்கும் அதைப் பகிர்ந்தார். அந்த அமைதி தம் சீடர்களிலும், அவர்கள் சந்திக்கும் எல்லா மாந்தருக்குள்ளும் பகிரும் நோக்கிலே அதனைப் பரிசாக்கினார்.

இயேசு ஈயும் அமைதி அதிகார, அடிமைத்தனங்களால் ஏற்படுத்தப்படும் அடங்கிப்போகும் நிலையோ அல்லது எதையும் கண்டுகொள்ளாமல் ஒதுங்கும் மௌன நிலையோ அன்று. சூறாவளி போல எத்தகைய பிரச்சினைகளும் தடைகளும் தாக்குதல்களும் புறத்தே எழுந்தாலும், அகத்துள் இறைப்பிரசன்னத்தை ஆழ்ந்துணர்ந்து எதையும் நிதானத்துடன் எதிர்கொண்டு வாழும் மனப்பக்குவமே இயேசு தரும் நிறைஅமைதி. அந்த அமைதியை என்றும், எங்கும் ஏற்படுத்தும் பொறுப்பு நமதென நம்முள் உணர்ந்தோர் எத்தனை பேர்?

செயலற்ற நிலையில் அமைதி என்பது சுலபம், செயற்பாட்டில் அமைதியே உண்மையான அமைதி.

இறைவா! சூறாவளி போன்ற எச்சூழலிலும் அக அமைதியை இழக்காது வாழ வழிகாட்டும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2024, 12:49