நிவாரணப் பணிகளில் வியட்நாம் கத்தோலிக்கத் தலத்திருஅவை
மெரினா ராஜ் – வத்திக்கான்
யாகி சூறாவளியால் பாதிக்கப்பட்ட வியட்நாம் மக்களுக்கு அங்குள்ள கத்தோலிக்க தலத்திருஅவையானது நிவாரணப்பணிகளை வழங்கி வருகின்றது என்றும், அதிகமான பாதிப்புக்களுக்கு உள்ளான வியட்நாமின் வடக்குப் பகுதியில் இருப்பவர்களுக்கு உதவிகள் வழங்குவதற்கான நிதியினைத் திரட்டி வருகின்றது என்றும் கூறியுள்ளார் அருள்சகோதரி தெரசா எம்ல் வு ஹங்.
செப்டம்பர் 14 முதல் ஏறப்ட்ட யாகி சூறாவளிப்புயலால் வியட்நாம், மியான்மார் போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நடைபெற்று வரும் நிவாரணப்பணிகள் குறித்து LiCAS எனப்படும் உள்ளூர் செய்திகளுக்கு பதிலளித்துள்ளார் ஹோகிமிங் நகரத்தில் இருக்கும் விண்ணேற்பு துறவற சபையின் தலைவர் அருள்சகோதரி தெரசா எம்ல் வு ஹங்.
வடக்கு வியட்நாமின் ஹனோய் மறைமாவட்டத்தில் உள்ள ஹோனாய் குழுமம் இருக்கும் இடத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்தக் கனமழையால் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதி முழுவதும் நிலச்சரிவும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது எடுத்துரைத்துள்ள அருள்சகோதரி தெரசா அவர்கள், வியட்நாம் மட்டுமன்றி மியான்மார், தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், லாவோஸ் உள்ளிட்ட பல தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் புயலின் தாக்கத்தால் பயங்கரமான சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹனோய் உயர்மறைமாவட்ட பேராயர் ஜோசப் வூ வான் தியென் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டுகோள்விடுத்துள்ளதை நினைவுகூர்ந்துள்ள அருள்சகோதரி தெரசா அவர்கள், உடன்பிறந்த உறவு, ஒற்றுமை, இணக்கத்துடன் கூடிய ஆதரவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பேராயர் வலியுறுத்தினார் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புக்களினால் இதுவரை 329 இறந்துள்ளனர், பலர் காணாமல் போயுள்ளனர், 1,929க்கும் மேற்பட்டோர் காயப்பட்டுள்ளனர் என்று உயர்மறைமாவட்டத்தின் முதற்கட்ட புள்ளிவிபரங்கள் குறிப்பிடுவதாகவும் தெரிவித்துள்ளார் அருள்சகோதரி தெரசா.
கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஹனோய் மறைமாவட்டத்தின் பல தலத்திருஅவை ஆலயங்கள் நீரில் மூழ்கியுள்ளன என்றும், திருச்சிலுவை சபையைச் சார்ந்த 35 வயது மதிக்கத்தக்க அருள்சகோதரி மரியா ஹாங் சிவப்பு ஆற்றின் பாலம் இடிந்து விழுந்ததால் காணாமல் போயுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார் அருள்சகோதரி தெரசா.
ஏறக்குறைய 2,34,000 வீடுகள், 1,500 பள்ளிகள் மற்றும் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் அழிக்கப்பட்டுள்ளன, கடுமையாக சேதமடைந்துள்ளன என்றும், மொத்தத்தில் 200 கோடி மதிப்பிலான அதிகமான பொருள்சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள அருள்சகோதரி தெரசா அவர்கள், தலத்திருஅவையில் உள்ள மக்கள் மற்றும் சமூகங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இலையுதிர்காலத்தில் சிறப்பிக்கப்படும் கொண்டாட்டங்களை இரத்து செய்து நிதி உதவு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்