தேடுதல்

மணிப்பூரில் அமைதி வேண்டி ஊர்வலம் (கோப்புப்படம்) மணிப்பூரில் அமைதி வேண்டி ஊர்வலம் (கோப்புப்படம்)  

மணிப்பூரில் அமைதியை நோக்கிய இந்திய அரசின் திட்டங்கள்

மணிப்பூர் கலவரத்தால் 230க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். 60,000 மக்கள் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேறியுள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்.

ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்

இந்தியாவின் மணிப்பூர் கலவரத்தால்  16 மாதங்களாக போராடிவரும் இந்து மற்றும் கிறிஸ்தவர்களின் அமைதிக்கான, மத்திய அரசின் புதிய பரிந்துரை திட்ட வரைவுகள் குறித்து கிறிஸ்தவத் தலைவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர் என்று UCA செய்தி நிறுவனம் தெரிவிக்கறது.

தேசிய தலைநகர் புது தில்லியில் செப்டம்பர் 17அன்று செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள், மணிப்பூரில் அமைதிக்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், புதிய அமைதி பரிந்துரைகள் தயாராக உள்ளது என்றும் கூறினார்.

குக்கி  மற்றும் மேத்தி இனக் குழுக்களிடையே அமைதிக்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறிய இந்திய உள்துறை அமைச்சர் அது குறித்த விவரங்களை வெளியிட மறுத்துவிட்டதாக செய்தி நிறுவனம் கூறுகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி கலவரம்  தொடங்கிய உடனேயே இவ்வன்முறையை எதிர்கொள்ள, இந்திய அரசு செயலூக்கமான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், நலமாய்  இருந்திருக்கும் என்றும், குக்கி, மேத்தி ஆகிய இரு தரப்பினரும் தொடர்ந்து மோதல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு திருப்புமுனையை அடைவது கடினம் என்றும் திருஅவைத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்றும் தெரிவிக்கிறது.

வளமிக்க   மேத்தி இன மக்களுக்கு பழங்குடியினர்க்குரிய உரிமைகளும் சலுகைகளும்  வழங்க வேண்டும் என்ற  நீதிமன்ற நடவடிக்கைக்கு, கடந்த ஆண்டு குக்கி  பழங்குடியின மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது மதவெறி வன்முறை தொடங்கியது.

இக்கலவரத்தால் ஏற்கனவே 230க்கும் மேற்பட்ட மக்கள்  உயிரிழந்த நிலையில் 60,000 மக்கள் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர்  கிறிஸ்தவர்கள். மேலும், 300க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்நிலையில் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் குக்கி இனக் கிறிஸ்தவர்கள் தங்களுக்கு தனி ஆட்சி வேண்டும் என்று கோரிக்கையை விடுத்துள்ளதாக யூக்கான் செய்தி நிறுவனம் கூறுகிறது.

மேலும், பள்ளத்தாக்குகளில் வாழும் மேத்தி இன மக்கள், குக்கி இன மக்களை தங்கள் பகுதியிலிருந்து அகற்ற வேண்டும் என்று விரும்புவதாகவும், தற்போதுள்ள சூழலினால் இடம் பெயர்ந்து நிவாரண முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் வசிக்கும் குக்கி  இனக்கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப இயலாது என்றும் திருஅவைத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மணிப்பூரில் உள்ள கிறிஸ்தவர்கள், தென்கிழக்கு ஆசியாவின்  மோதல்களால் பாதிக்கப்பட்ட மியான்மரில் உள்ள மக்களுடன்  நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளனர் என்றும், மியான்மரில் செழித்து வரும் போதைப்பொருள் வர்த்தகமே மணிப்பூர்  மாநிலத்தின்   இனக்கலவரத்திற்கு மூல காரணம் என்றும் அம்மாநில முதல்வர் N .பிரேன் சிங் குற்றம் சாட்டியுள்ளார் என்றும் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

மேலும்,  மியான்மருடன்  1,643 கி.மீ., நீளமுள்ள மணிப்பூரின் எல்லை முழுவதும் வேலி அமைக்கப்படும் என பிப்ருவரி  6 அன்று, இந்திய அரசு அறிவித்துள்ள நிலையில், 30கி.மீ தூரத்திற்கு வேலி அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாகவும், புதிய அமைதி பரிந்துரை வரைவுகளுடன், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்ததாகவும் UCA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 September 2024, 16:39