தேடுதல்

பாப்புவா நியு கினி மக்கள் பாப்புவா நியு கினி மக்கள்  (AFP or licensors)

கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட நாடு பாப்புவா நியூ கினி நாடு

ஆசியா மற்றும் ஓசியானியாவிற்கான திருத்தந்தை அவர்களின் திருப்பயணமானது, பாப்புவா நியூ கினி நாட்டின் வரலாற்றில் குறிப்பாக அந்நாட்டின் கத்தோலிக்கர்களிடையே நிகழ்ந்த ஒரு சகாப்தம் - அருள்சகோதரி பமீலா

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

பாப்புவா நியூ கினி நாடு ஒரு கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட நாடு. அந்நாட்டு மக்களின் கலாச்சார வேற்றுமையைப புரிந்து கொள்வது ஒரு கடினமான பணி என்று பாப்புவா நியூ கினியில் 22  ஆண்டுகள் பணியாற்றி உரோம் நகர் திரும்பிய சகாய அன்னையின் புதல்விகள் சபை அருள்சகோதரி பமீலா Fides செய்தி நிறுவனத்திடம் அளித்துள்ள செய்தியில் கூறியுள்ளார்.

ஜனவரி 2001 ஆம் ஆண்டு பாப்புவா நியூ கினியின்  போர்ட் மோர்ஸ்பியில் உள்ள தொழில் நுட்ப நிறுவனத்தில் ,பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கச் சென்றார் சகோதரி பமீலா.

ஆசியா மற்றும் ஓசியானியாவிற்கான திருத்தந்தை அவர்களின் திருப்பயணமானது, பாப்புவா நியூ கினி நாட்டின் வரலாற்றில்  குறிப்பாக அந்நாட்டின் கத்தோலிக்கர்களிடையே நிகழ்ந்த ஒரு சகாப்தம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒருமித்த உணர்வானது, நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கு அவரை பயணிக்கச் செய்து, அவரின் போதனைகளுக்கு உறுதியான சான்று பகர்பவைகளாக இருக்கின்றன என்றும் எடுத்துரைத்துள்ளார் சகோதரி பமீலா.

திருத்தந்தை அவர்களின் சந்திப்பானது, நல்லிணக்கம், அமைதி, கிறிஸ்துவினுடைய ஆற்றலின் மீதுள்ள விசுவாசம் போன்ற அனைத்து பாரம்பரிய நம்பிக்கைகளுக்கும் மேலான செய்தி என்றும், பாப்புவா நியூ கினி நாட்டு மக்களின் மனமாற்றத்திற்கான உறுதியான அழைப்பு என்றும் விவரித்தார் சகோதரி பமீலா.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது முதிர்ந்த வயதிலும் வனிமோ என்னும் நாட்டின் தொலைதூர பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள மக்களைச் சந்தித்த நிகழ்வு, அப்பகுதி வாழ் மக்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது என்றும் கூறியுள்ளார் அருள்சகோதரி பமீலா.

மேலும், அரசுத்தலைவர்கள், ஆயர்கள், குருக்கள், துறவிகள், இளையோர், குழந்தைகள் என அனைத்து நிலையினரும் திருத்தந்தை அவர்களின் அணுகு முறையை பெரிதும் பாராட்டினர் என்றும் எடுத்துரைத்துள்ளார் அருள்சகோதரி பமீலா.

திருத்தந்தையின் சந்திப்பானது, வறுமை மற்றும் வெறுப்புணர்வினால், விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட  மக்களின் வாழ்வைத் தொடுகின்ற கிறிஸ்துவின் வெளிப்பாடு என்று எடுத்துரைத்ததுடன், மறக்கமுடியாத இந்த வருகையானது, மக்கள் மற்றும் இளையோரின் இதயங்களில் குறிப்பாக அவர்களின் குடும்பங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கல்விப்பணி ஆற்றுவோரின் சேவைக்கு ஒரு தூண்டுதலாகவும், பாப்புவா நியூ கினி நாட்டு கிறிஸ்தவர்களுக்கு நல்லிணக்கத்திற்கான உரையாடலைப் பயிற்சி செய்யவும், பொதுநன்மை மற்றும் சமூகத்திற்காக பாடுபடவும்  திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணமானது வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அருட்சகோதரி  அவர்கள் தனது பணி  அனுபவம் பற்றி கூறுகையில், வலுவான பாரம்பரிய நம்பிக்கைகள் மிகுந்த பாப்புவா நியூ கினி நாட்டில், பிற நாடுகளை போலவே வறுமை நிறைந்த சூழலிலும்,இளையோர் நவீன மயமாக்கல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணத்தால், பள்ளியில் இடைநிற்றல், வேலைவாய்ப்பின்மை போன்ற  காரணங்களால் பணியில் சவால்களை சந்திக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இளையோருக்கு மரியாதை, சமத்துவம், திறனாய்வு மிக்க சிந்தனை ஆகியவற்றை விதைப்பது அவசியமாகிறது என்றும் தெரிவித்துள்ள சகோதரி பமீலா அவர்கள், திருத்தந்தையின் வருகை அரசு மற்றும் திருஅவைக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் விதமாகவும் அமைந்தது என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2024, 11:50