அன்னை மரியா காட்சி கொடுத்ததாக நம்பப்படும் மெஜூகோரே
ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்
தற்போது பக்தி முயற்சிகள் தொடர திருஅவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கும் மெஜூகோரேயில், 1981ஆம் ஆண்டு, ஜூன் 24 அன்று, அன்னை மரியாள் காட்சி கொடுத்ததாக நம்பப்படுகிறது.
ஜூன் 24 அன்று, அந்நாளின் பிற்பகலில் இவான்கா இவான்கோவிச் (Ivanka Ivanković), மற்றும் மிர்ஜானா டிராகிசெவிச் (Mirjana Dragicević) என்ற இரண்டு பெண்கள், க்ர்னிகா மலையின் அடிவாரத்திற்கு சென்ற வேளையில் இவான்கா மட்டும் அன்னை மரியாவைப் பார்த்துள்ளார்.
அதே நாளில், மாலை 6 மணியளவில், அன்னை மரியா தனது கைகளில் ஒரு குழந்தையை வைத்திருக்கும் உருவத்தை. இவான்கா, மிர்யானா, விக்கா இவான்கோவிச், இவான் டிராகிசெவிச், இவான் இவான்கோவிச், மில்கா பாவ்லோவிச் என்ற ஆறு குழந்தைகள் பார்த்துள்ளனர்.
அதே ஆண்டு ஜூலை 21 அன்று, மோஸ்டர்-டுவ்னோவின் ஆயர் பாவோ ஜானிச், ஆறு சிறுவர்களையும் சந்தித்தபோது, அவர்கள் தங்கள் அனுபவங்களை அவரிடம் தெரிவித்தனர். ஆயர் அவர்களும், சிறுவர்கள் பொய்யுரைக்கவில்லை என்று நம்பி, அன்னை மரியா காட்சியளித்ததாக கூறப்படுவது குறித்து, நவம்பர் 19, 1983ஆம் ஆண்டு அப்போதைய விசுவாசக் கோட்பாட்டிற்கான ஆணையத்திற்கு இரகசிய அறிக்கை ஒன்றை அனுப்பினார்.
அக்டோபர் 12, 1984இல், யூகோஸ்லாவிய ஆயர் பேரவை மெஜுகோரேயில் நடந்ததாகக் கூறப்படும் அன்னை மரியாவின் காட்சிகள் குறித்து திருஅவையின் அதிகாரத்திற்கு உட்பட்டு மதிப்பீடு செய்வது மற்றும் மெஜுகோரே நோக்கிய அதிகாரப்பூர்வமான திருப்பயணங்களைத் தடை செய்வது பற்றி ஓர் அறிக்கையை வெளியிட்டது.
மெஜுகோரேயில் தோன்றியதாகக் கூறப்படும் அன்னை மரியின் காட்சிகளை ஆய்வு செய்யும் பணியில் ஒரு குழுவினை அறிவித்த மறைமாவட்ட ஆணையம், 1991 ஏப்ரல் 10 தேதி அன்று, அன்னை மரியின் காட்சிகள் பற்றிய இறுதி அறிக்கையை வெளியிட்டது.
1994 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி, மெஜூகோரேயின் புதிய ஆயர் ராட்கோ பெரிச் அவர்கள், அன்னை மரியாவின் காட்சிகள் பற்றிய உறுதியான நிலைப்பாட்டினை வழங்க ஓர் ஆணையத்தை நிறுவ வேண்டும் என்று திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மார்ச் 2, 1998 அன்று, செயிண்ட்-டெனிஸ்-டி-லா ரீயூனியனின் ஆயர் அவர்களின் வேண்டுகோளின் பேரில், அப்போதைய விசுவாசக் கோட்பாட்டிற்கான ஆணையம் மெஜூகோரேவுக்கு தனிப்பட்ட திருப்பயணிகள் அனுமதிக்கப்படுவதாக பதிலளித்தது, இருப்பினும் மெஜூகோரே, அன்னை மரியின் காட்சி நடைபெற்ற புனித தலமாக அறிவிக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டது.
ஜனவரி 14, 2008 அன்று, திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள் மெஜூகோரேயின் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளை மதிப்பிடுவதற்கு ஒரு பன்னாட்டு ஆணையத்தை நிறுவ முடிவு செய்தது ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இந்த ஆணையத்தின் தலைவராக கர்தினால் கமிலோ ரூயினி நியமிக்கப்பட்டார். ஜனவரி 2014இல், ஏறத்தாழ ஆறு ஆண்டு ஆய்விற்குப் பிறகு, பன்னாட்டு ஆணையம் அதன் தீர்ப்பை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 2015இல், அனைத்து ஆவணங்களையும் பெற்றவுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மெஜூகோரே அன்னை மரியின் காட்சிகள் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுத்தார். பிப்ரவரி 11, 2017 அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெஜுகோரேயில் ஆய்வு செய்ய, திருப்பீடத்தின் சிறப்புத் தூதுவராக பேராயர் ஹென்றிக் ஹோசர் அவர்களை நியமித்தார்.
பின்னர், ஜனவரி 14, 2019 அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியின் காட்சிகள் பற்றி அங்கீகாரமாக விளக்கப்படுவதைத் தவிர்ப்பதில் கவனமாக இருந்தால், மெஜூகோரேக்கு திருப்பயணங்களை ஏற்பாடு செய்ய முடியும் என்ற நிலைப்பாட்டை வெளியிட்டார்.
இறுதியாக, ஆகஸ்ட் 13, 2021 அன்று போலந்து பேராயர் ஹென்றிக் ஹோசர் அவர்கள் இறந்ததால், அவருக்கு பதிலாக டிசம்பர் 27, 2021 அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பேராயர் ஆல்தோ கவாலியை மெஜூகோரே திருஅவையின் புதிய அப்போஸ்தலிக்க பார்வையாளராக நியமித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்